under review

சவுத் பவுண்ட் ரிவ்யூ

From Tamil Wiki

To read the article in English: South Bound Review. ‎

சௌத்பவுண்ட் இணைய இதழ்

சவுத் பவுண்ட் ரிவ்யூ (Southbound Review, சௌத்பவுண்ட் ரிவியூ) வாழும் தமிழ் இலக்கிய அமைப்பின் ஒரு முயற்சியாக வெளிவரும் ஆங்கில வார இணைய இதழ். நவீன தென்னிந்திய இலக்கியத்தை உலகளாவிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடக்கம்

சவுத் பவுண்ட் ரிவ்யூ வாழும் தமிழ் இலக்கிய அமைப்பால் தொடங்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்விதழின் முதல் இதழ் செப்டம்பர் 27, 2026 அன்று வெளியிடப்பட்டது.

அமைப்பு

சவுத் பவுண்ட் ரிவ்யூ இதழுக்கு ஓர் ஆசிரியர் குழு உள்ளது. ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் இதழின் முதன்மை ஆசிரியராகவும், காஞ்சி சிவா செயல் ஆசிரியராகவும் பொறுப்பு வகிக்கின்றனர். ஆசிரியர் குழுவில் டி.ஏ. பாரி, தன்யா ரமேஷ், சபரீஷ் குமார், ஜோஷிதா எம்.எல்., மேகனா குமார், சஹானா குமார், வேணு வேட்ராயன், ஷர்மிளா.ஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நோக்கம்

சவுத் பவுண்ட் ரிவ்யூ ஒரு வரலாற்றுத் தேவையின் விளைவாக உருவானது. தென்னிந்திய மொழிகளின் நவீன இலக்கியம், குறிப்பாகத் தமிழ் இலக்கியம், அரசுத் துறைகள், பண்பாட்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து ஆதரவைப் பெறவில்லை. அரசியல் கட்சிகள் தங்களுடைய எழுத்துகளையே இலக்கியமாக முன்னிறுத்துகின்றன. அதேவேளையில், வெகுஜனப் புனைவுகள் பொதுமக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்றுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் நவீன இலக்கியம் பெரும்பாலும் சிற்றிதழ்கள் வழியாகவே வெளிவந்துள்ளது. இதன் விளைவாக, அது சில ஆயிரம் வாசகர்களை மட்டுமே சென்றடைந்துள்ளது. இந்திய இலக்கியத்தின் பொதுவான வெளியில் பெரும்பாலும் இது அறியப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்த இடைவெளியை நிரப்புவதே சவுத் பவுண்ட் ரிவ்யூ இதழின் நோக்கம். நவீனத் தமிழ் இலக்கியத்துடன் பிற தென்னிந்திய மொழிகளின் இலக்கியங்களையும் இந்தியா முழுவதிலும் உள்ள வாசகர்களுக்கும் உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதை இவ்விதழ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளடக்கம்

சவுத் பவுண்ட் ரிவ்யூ ஒவ்வொரு மாதமும் ஓர் எழுத்தாளரின் ஆளுமை மற்றும் படைப்புலகை அறிமுகப்படுத்துகிறது. புனைவுகள், கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள், நூல் மதிப்புரைகள் ஆகியவற்றை வெளியிடுகிறது. மேலும், தொடர்ச்சியான பத்திகள், திரைப்படங்கள் குறித்த உரையாடல்கள் ஆகியவற்றுடன் பண்பாட்டாய்வுக்கென ஓர் ஆய்வுப் பகுதியையும் கொண்டுள்ளது. சவுத் பவுண்ட் ரிவ்யூ அரசியல் விவாதங்களை வெளியிடுவதில்லை.

தொடுப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Sep-2026, 11:06:27 IST