அழகர் மலை (தமிழ்-பிராமி கல்வெட்டுகள்)

அழகர்மலை தமிழ் பிராமி கல்வெட்டுகள், சங்க காலத்துக்கு முந்தியவை. இக்குகைத்தளங்கள் சமணப் பள்ளிகளாக பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கின்றன.
அமைந்துள்ள இடம்
மதுரைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்றுச் சிறப்பும் வழிபாட்டுச் சிறப்பும் மிக்க அழகர் கோயில் உள்ளது. அழகர்கோயில் உள்ள மலைக்கு சோலைமலை. இருங்குன்றம், இடபகிரி, திருமால் குன்றம், திருமாலிருஞ்சோலை என்று பலபெயர்கள் உண்டு. அழகர்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள கோட்டையின் பிரதான வாயிலுக்கு வெளியிலிருந்து கிழக்காக மேலூர் செல்லும் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத் தொடர்க் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் அதில் ஒரு சுனையும் உள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

இக்கல்வெட்டுகள் 1908, 1963-ம் ஆண்டுகளில் அறியப்பட்டு 1943 மற்றும் 1966-ம் ஆண்டுகளில் படியெடுக்கப்பட்டு அவ்வாண்டு கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் வெளியிடப்பட்டன.
காலம்
ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது
கல்வெட்டுகள்
இக்குகைத்தளத்தில் செதுக்கப்பட்டுள்ள கற்படுக்கை ஒன்றிலும் குகையின் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ்-பிராமி கல்வெட்டுகள் உள்ளன. சமணர்கள் இங்குத் தங்குவதற்கு முன்பு இவ்விடம் பழங்குடிகளின் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டுமென்பதை இக்குகைத்தள விதானத்தில் வரையப்பட்டுள்ள செங்காவியால் ஆன பறவைமுக மனிதர், மான் போன்ற விலங்குகளின் ஓவியங்கள் காட்டுகின்றன. இங்குள்ள சமணத் தீர்த்தங்கரரின் உருவமும் பொ.யு. 9-10-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டும், தொடர்ந்து இவ்விடம் 10-ம் நூற்றாண்டு வரை சமணர் வழிபாட்டுத் தளமாக விளங்கியமையை எடுத்துக்காட்டுகின்றன. குகைத் தளத்தினை ஒட்டியே ஒரு பெரிய நீர்நிலை சுனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டுகள் சற்று எட்டாத உயரத்தில் முகப்பு நெற்றிப்பகுதியில் அமைந்துள்ளன .

கல்வெட்டு 1:1
அமைவிடம்
குகைத்தள முகப்புப் பாறை நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் கீழாக இக்கல்வெட்டு உள்ளது.
காலம்
இதன்காலம் ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

மதிரை பொன் கொல்வன் அதன் அதன்
பொருள் விளக்கம்
மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன்அதன் என்பவனது பெயர் குறிக்கப்படுகிறது. இறுதியில் ஒரு குறியீடு உள்ளது.
பாடபேதம்
- மத்திரைய பொன் குலவன அதன அதன் - ஹெச். கிருஷ்ண சாஸ்திரி
- மத்திரைய் பொன் கொலவன் ஆதன அதான - இரா. நாகசாமி.
- மத்திரைய் பொன் கொல்லன் அதான் அதான் - மயிலை. சீனி. வேங்கடசாமி
- மதிரய் பொன் கொலவன் அதன் அதன் -ஐராவதம் மகாதேவன்
- மத்திரைப் பொன் குலவன் அதன் அதன்- டி.வி. மகாலிங்கம்.
கல்வெட்டு 1:2

அமைவிடம்
முதற்கல்வெட்டின் அருகில் உள்ளது. முன்னும் பின்னும் எழுத்துக்கள் சிதைந்துள்ளன.
காலம்
ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

அனாகன் த..
பொருள் விளக்கம்
னாகன் (நாகன்) என்பவரது பெயர் குறிக்கப்படுகிறது.
பாடபேதம்
- அனகனன் - கிருஷ்ண சாஸ்திரி
- அனகனம் - கே.வி. சுப்பிரமணிய அய்யர்
- அனாகன் - இரா. நாகசாமி
- அனாகன் த...-ஐராவதம் மகாதேவன்
- அனகனேன -டி.வி. மகாலிங்கம்
கல்வெட்டு 1:3
அமைவிடம்
மேற்சொன்ன கல்வெட்டை அடுத்து இக்கல்வெட்டு நெற்றிப் பாறையில் ஒரு நீண்ட வரியாக வெட்டப்பட்டுள்ளது. இவ்வரி 'மத்திரைக்கே' என்ற சொல்லுடன் தொடங்குகிறது. அடுத்தடுத்து ஆட்பெயர்களும் குறியீடுகளும் உள்ளன. இவற்றைத் தனித்தனிக் கல்வெட்டுகளாகவும் ஒரே கல்வெட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் வரும் மத்திரைக்கே என்ற சொல்லினை முதற்பெயரோடு சேர்ந்ததாகவும் ஒவ்வொரு பெயருடனும் சேர்ந்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அனைவரும் இக்குகைத் தளத்தினை அமைத்திடவோ அல்லது அங்குள்ள பெரிய அளவிலான சுனையை அமைத்திடவோ கொடையளித்துள்ளனர்.
காலம்
ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்
பொருள் விளக்கம்
மத்திரையை (மதுரை)ச் சேர்ந்த உப்பு வணிகன் வியக்கன் கணதிகன் என்பவரது பெயர் குறிக்கப்படுகிறது. கணதிகள் என்பதனை அடுத்து வரும் கல்வெட்டின் தொடக்கமாகவும் கொள்வர்
பாடபேதம்
- மத்திரை கொப்பு வணிகன் யகனகோனதிகன -ஹெச். கிருஷ்ண சாஸ்திரி.
- உபு வணிகன் வியகன் கணதிகன் -இரா.நாகசாமி.
- மத்திரை கெஊபு வணிகன் மயிலை சீனி. வேங்கடசாமி
- மத்திரை கே - ஐராவதம் மகாதேவன்.
- உபுவணிகன் வியக்கன் - ஐராவதம் மகாதேவன்.
- மத்தரை கொப்பு வணிகன் -டி.வி. மகாலிங்கம்.
கல்வெட்டு: 1:4
அமைவிடம்
முன்கல்வெட்டினைத் தொடர்ந்து அதே நீண்டவரியில் இக்கல்வெட்டும் உள்ளது. முன்கல்வெட்டின் இறுதியில் வரும் குறியீட்டினைக் கொண்டு இக்கல்வெட்டு தனிக் கல்வெட்டாகப் பிரிக்கப்படுகிறது. எனினும் ஐராவதம் மகாதேவன் குறியீட்டினை நடுவில் வருவதாகக் கொண்டு முன்கல்வெட்டின் இறுதிச் சொல்லான ஆட்பெயரை இக்கல்வெட்டுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்.
காலம்
இக்கல்வெட்டின் காலமும் ஏறத்தாழ பொ.யு. முதலாம் நூற்றாண்டு
கல்வெட்டு வாசகம்

கணக அதன் மகன் அதன் அதன்
பொருள் விளக்கம்
கணகஅதன் மகன் அதன் அதன் என்பவன் பெயரினைக் குறிக்கிறது. இவர் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திடப் பங்களித்தவராக இருக்கலாம். இறுதியில் குறியீடு ஒன்றுள்ளது.
பாடபேதம்
- கனக அதன மோகன் அதன் அதன - கிருஷ்ண சாஸ்திரி
- கனக அதன் மகன் அதன் அதான -இரா. நாகசாமி
- கணதிகள் கணக அதன் மகன் அதன் அதன் - ஐராவதம் மகாதேவன்.
- இயகன் கன திகள் -மயிலை சீனி. வேங்கடசாமி
- வியக்கள் கணதிகள் -டி.வி. மகாலிங்கம்.
கல்வெட்டு 1:5
அமைவிடம்
முன் கல்வெட்டுள்ள நீண்ட வரியில் நான்காவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. பெண் சமணத்துறவியின் பெயரைக் கொண்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியிலும் குறியீடு உள்ளது.
காலம்
இதன் காலம் ஏறத்தாழ பொ.யு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

சபமிதா இன பமித்தி
பொருள் விளக்கம்
சபமித்தா (சர்ப்பமித்ரா சமஸ்கிருதம்) என்ற சமணப் பெண் துறவி (பமித்தி) என்று பொருள்படும். சப்மிதா என்பதின் இடையில் 'நீ' சேர்த்து சப்மித்தா- சப்மித்ரா என்று பொருள் கொள்ள வேண்டும். இவரும் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திடக் கொடை நல்கியுள்ளார்.
பாடபேதம்
- ச(ம) மி சின மிததி -கிருஷ்ண சாஸ்திரி.
- பைமீத இன் போமித்தி - இரா.நாகசாமி
- ஸம்மிலின் மித்தி -மயிலை. சீனி.
- ஸபமிதா இன பமித்தி - ஐராவதம் மகாதேவன்.
- ஸபமி சின்மித்தி - டி.வி. மகாலிங்கம்.
கல்வெட்டு 1:6
அமைவிடம்
முன்கல்வெட்டுகள் உள்ள நெடுவரிசையில் 5-வது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் குறியீடு உள்ளது.
காலம்
ஏறத்தாழ பொ.யு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

பாணித வாணிகன் நெடுமலன்
பொருள் விளக்கம்
இதனைப் பணித வணிகன் நெடுமலன் என்றும் 'நெடுமலன்' எனும் சொல்லில் உள்ள மலன் என்பதனுள்'ல்' சேர்த்து நெடு மல்லன் என்றும் படிக்கலாம். 'பாணிதம்' என்பது சர்க்கரைப் பாகினையும் 'பணிதம்' என்பது பச்சைக் கற்பூரத்தையும் குறிக்கும். இது தொடர்பான வணிகனாக நெடு மல்லன் குகைத்தளம் மற்றும் சுனை அமைத்திடக் கொடைகொடுத்தவன் என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் சொல்லலாம்.
பாடபேதம்
- ருபனிதி வணி(க) ன்னடு மலன் -ஹெச். கிருஷ்ண சாஸ்திரி
- பணித வணிகன் நெடுமலன் -இரா.நாகசாமி
- வணிகன் நெடுமலன் -சுப்ரமணிய அய்யர்
- பணித வணிகன் நெட்டு மூலன்- மயிலை. சீனி வேங்கடசாமி
- பாணித வாணிகன் நெடுமலன் -ஐராவதம் மகாதேவன்
- பணிதி வணிகன் நெடுமலன் -டி.வி. மகாலிங்கம்


கல்வெட்டு 1:7
அமைவிடம்
மேற்கண்ட கல்வெட்டின் நெடுவரிசையில் 6-வது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் குறியீடு உள்ளது.
காலம்
ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்
கொழு வணிகன் எள சந்தன்
பொருள் விளக்கம்
கலப்பையின் கூர் பகுதியான 'கொழு' வணிகம் செய்யும் எள சந்தன் என்ற வணிகள் கொடுத்த கொடை என்று பொருள்படும். இள சந்தன் - இளைய சந்தன் என்பது 'எள' சந்தன் என்றுள்ளது. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் இள - எள என்ற இரு சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாடபேதம்
- (வணி] கன யளனதன் -கிருஷ்ண சாஸ்திரி
- வணிகன் யுளநாதன் - சுப்பிரமணிய அய்யர்
- கொழு வணிகன் எளசந்தன்- இரா.நாகசாமி
- கொமு வணிகன் இள சந்தன்- மயிலை. சீனி
- கொழு வணிகன் எளசந்தன் - ஐராவதம் மகாதேவன்
- கொழு வாணிகன் யுள சந்தன் -டி.வி. மகாலிங்கம்
கல்வெட்டு 1:8
அமைவிடம்
முன் பார்த்த கல்வெட்டுகளின் நெடுவரிசையில் குகைத்தள முகப்புப் புருவ நீர் வடி விளிம்பின் கீழ். ஏழாவதாக இக்கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கம் சிதைந்துள்ளது தெரியும் பகுதியில் தொடக்கத்தில் உள்ள எழுத்து 'ஞ்' என உத்தேசமாகக் கொள்ளலாம்.
காலம்
இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

..[ஞ்]சி கழுமாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்
பொருள் விளக்கம்
கழுமாறநதன் தாரணி செய்து கொடுத்தான் என்று பொருள். இவனது ஊர் அல்லது ஏதோ ஒரு சிறப்புப் பெயர்... (ஞ்)சி என்று முன்னொட்டுச் சொல்லாக உள்ளது. எழுப்புதல் - எடுத்தல் என்பதில் 'ழு' 'டு' வாக வருவது போல் கழுமாறன் என்பதை கடுமாறன் என்று கொள்ளலாம். பாண்டிய இளவரசனாக அல்லது சிற்றரனாக இவன் இருந்திருக்கலாம். தாரணி என்பது நீர்வடி விளிம்பைக் குறிக்கும். நீர்வடிந்து சேரும் சுனையைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.
பாடபேதம்
- சிகத் தமதுனதனதர அனிய சோது போத அவன் - கிருஷ்ண சாஸ்திரி.
- சிகரமர மாரன் தான தரஅணி குடுபிதவன் - சுப்பிரமணிய அய்யர்.
- (ஞ்]சி கழுமாற நதன் தார அணிஇ கொடுபித அவன்- ஐராவதம்மகாதேவன்.
- ஞ்சி கழுமாறன் தான தார அணிஇகொடு பிதஅவன் - இரா. நாகசாமி
- சிகரு பிறந்தான் அணிய கொடுபிதவன் - டி.வி.மகாலிங்கம்.
கல்வெட்டு: 1:9
அமைவிடம்
இக்கல்வெட்டு முன்பார்த்த கல்வெட்டு நெடுவரிசையில் இறுதியில் உள்ளது. இக்கல்வெட்டுள்ள இடத்தில் கல்வெட்டு பொறிக்கும் போது சிதைவுகள் ஏற்பட்டு எழுத்துக்கள் சிதைந்தும் சிதைந்த இடத்தை விட்டு சற்றுத்தள்ளி மீண்டும் கல்வெட்டு தொடர்ச்சியாகப் பொறிக்கப்பட்டது போல் தெரிகிறது.
காலம்
இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

தன்ம[ன்] கஸபன் அவ்[விரு] அ அஉம் குடுபிதோ
பொருள் விளக்கம்
தன்மண், கஸபன் என்ற (மேலும்) இருவர் கொடை கொடுத்தனர் என்று இது பொருள்படும். ஐராவதம் மகாதேவன் நீர்வடி விளிம்பினை இவர்களும் செய்து கொடுத்தார்கள் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளுவது இடத்திற்குத் தகுந்தவாறு ஏற்புடையதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். கல்வெட்டு எண். 1:3-இல் குறிப்பிட்டது போல எண் 3 முதல் 9 முடிய ஒரே கல்வெட்டாகக் கொண்டால் அங்கு அமைந்துள்ள சுனையை அமைத்துக் கொடுத்தார்கள் என்று பொருள் கொள்ளலாம். இக்கல்வெட்டுகள் அனைத்திலும் சொல்லப்படுபவர்கள் குகைத்தளம், முகப்பு நீர்வடி விளிம்பு, சுனை என இங்குள்ள பணிகள் அனைத்தையும் செய்யக் கொடை கொடுத்துள்ளனர் என்றும் கருதலாம்.
பாடபேதம்
- காஸபன் அதவிர - இரா. நாகசாமி.
- தந்மன் கஸபன் அவ்[விரு] அ அர் உம் குடுபிதோர் - ஐராவதம் மகாதேவன்.
கல்வெட்டு 1:10
அமைவிடம்
முன்பார்த்த நீண்ட வரிசையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டின் (1:3) கீழ் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
காலம்
இதன்காலம் ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு.
கல்வெட்டு வாசகம்

வெண்ப[ளி]இ அறுவை வணிகன் எளஅ அடன் 'ளி' எழுத்தில் உள்ள இகரகுறி சற்று சிதைந்துள்ளது இறுதியில் குறியீடு உள்ளது.
பொருள் விளக்கம்
வெண்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த துணி (அறுவை) வணிகன் எளஅ அடன் என்பது இதன் பொருள். 'அடன்' என்பதை 'ட்' ஒற்றுச் சேர்த்து 'அட்டன்' என்று கொள்ளலாம். இறுதியில் உள்ள குறியீடு காசினைக் குறிக்கிறது என்று கொண்டால் அவன் தந்த காசின் அளவினைக் குறிக்கிறது எனலாம்.
பாடபேதம்
- வெண்பளிய் அறுவை வணிகன் எளஅ அடன் - இரா.நாகசாமி.
- வெண் ப[ளி]இ அறுமை வணிகன் எளஅ அடன் - ஐராவதம் மகாதேவன்.
கல்வெட்டு 1:11
அமைவிடம்
மேற்சொன்ன கல்வெட்டினை (12:10) அடுத்து உள்ளது.
காலம்
ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு எனலாம்.
கல்வெட்டு வாசகம்

தியன் சந்தன்
பொருள் விளக்கம்
தியன் சந்தன் என்பவனது பெயர் குறிக்கப்படுகிறது. அடுத்துள்ள குறியீடு அவன் வழங்கிய காசினைக் குறிப்பதாகலாம்.
பாடபேதம்
- தியன் சந்தன் -இரா.நாகசாமி.
- தியன் சந்தன் -ஐராவதம் மாகதேவன்.
கல்வெட்டு 1:12
அமைவிடம்
குகைத்தளத்தின் உள்ளே ஒரு கற்படுக்கையின் தலைப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது.
காலம்
ஏறத்தாழ பொ.மு. முதல் நூற்றாண்டு எனலாம்.
கல்வெட்டு வாசகம்

கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்
பொருள் விளக்கம்
கணிநாகன், கணிநதன் என்ற இருவர் அமைத்த கற்படுக்கை எனப் பொருள் கொள்ளலாம். 'அம்' என்பதை 'அமை' என்று கொள்ளலாம்.
பாடபேதம்
- கணி நாகன் கனி நதன் இருவர் அமகல் -ஐராவதம் மகாதேவன்.
- கணிநாதன் கணிய்நதன் - இரா.நாகசாமி.
குறியீடுகள்

அழகர்மலை கல்வெட்டில் படட்தில் உள்ளதுபோல் நண்டு போன்ற குறியீடுகள் எட்டு பேர்களின் பெயர்களில் முடிவில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் குறியீடு ஐவரது பெயருக்குப் பின்னர் வருகிறது. 2-வது குறியீடு இருவரது பெயருக்குப் பின்னரும், 3-வது குறியீடு ஒருவரது பெயருக்குப் பின்னரும் வருகிறது. இக்குறியீடு கொடுமணல் அகழாய்வுக்குழியில் கிடைத்த சங்ககாலப் பானையோட்டில் காணப்படுகிறது. இலங்கையிலுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளிலும் இவை காணப்படுகின்றன. இது பொன்னைக் குறிப்பதாகவோ அல்லது குலக் குறியீடாகவோ இருக்க வாய்ப்புள்ளது. இங்குப் பொன் என்பது காசைக் குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். குகைத்தளத்தினை உருவாக்க இவர்கள் கொடை செய்த காசின் அளவு இக்குறியீடுகளின் மூலம் உணர்த்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இதனை மயிலை. சீனி வேங்கடசாமி தனது 'சங்ககாலத்துப் பிராமி கல்வெட்டெழுத்துக்கள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பானை ஓடுகளிலும் இக்குறியீடு வருவது குலக்குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீடுகளிலும் காணப்படுகின்றன. இலங்கையில் அனைக்கோட்டையில் கிடைத்தப் பிராமி மற்றும் குறியீடு இணைந்து பதிக்கப்பட்ட முத்திரையில் குறியீடுகளுக்கு ஒலி உச்சரிப்பு உள்ளது அறியப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
உசாத்துணை
- தமிழ் பிராமி கல்வெட்டுகள் - பதிப்பாசிரியர் ஸ்ரீதர்
- அழகர்மலை தமிழிக் கல்வெட்டு
- தமிழ் மின் நூலகம்
- மதுரை வாசகன்
இணைப்புகள்
- Alagar malai Cave Explained TAMIL NAVIGATION |
- Azhagar Malai Cave | Hill Trekking | Madurai | TamilNadu| Survival Tamizhan
- அழகர் கோவிலில் அதிசய சமணர்கள் பிராமிய கல்வெட்டு
- Alagarmalai Trekking | Madurai | Perception 65
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Oct-2025, 18:20:44 IST