under review

டி.வி மகாலிங்கம்

From Tamil Wiki

டி.வி மகாலிங்கம் (தேரழுந்தூர் வெங்கட்ராமன் மகாலிங்கம்) (1907 - மார்ச் 6, 1983) தமிழக வரலாற்றாய்வாளர், கல்வெட்டாய்வாளர். மெக்கின்ஸியின் கையெழுத்துப் பிரதிகளின் அதிகாரபூர்வமான பட்டியலைத் தயாரித்தவர். தமிழ் பிராமி கல்வெட்டுகளையும், கேரளக் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து பதிப்பித்தார். பத்மஶ்ரீ விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

தஞ்சை மாவட்டம் (தற்போதைய திருவாரூர் மாவட்டம்) மயிலாடுதுறைக்கருகிலுள்ள தேரழுந்தூரில் வெங்கடராம ஜடாவல்லபர், சாவித்திரி அம்மாள் இணையருக்கு 1907-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில்1929-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1931-ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் 1931-1934 ஆண்டுகளில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிமுறை மற்றும் சமூகவியலில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் நெறியாள்கையில் ஆய்வுகள் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மதுரைக் கல்லூரியிலும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1947-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியேற்றார். 1972-ல் அத்துறை தலைவராகப் பணி ஓய்வு பெற்றார்.

வரலாற்றியல், ஆய்வுப் பணிகள்

மகாலிங்கம் 1939 முதல் 1942 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் ஆராய்ச்சி மாணவராகவும் ஆய்வு உதவியாளராகவும் பணி செய்தார்.

மகாலிங்கம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1959 வரை கே.கே. பிள்ளையின் தலைமையில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1959-ல் இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் துறை இரண்டு புதிய துறைகளாகப் பிரிக்கப்பட்டபோது - மகாலிங்கம் புதிதாக உருவாக்கப்பட்ட பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

மகாலிங்கம் இந்தியாவின் தலைமை நில அளவையாளராக இருந்த மெக்கின்ஸி ஆந்திர மாநிலம் அமராவதியில் முக்கியமான கல்வெட்டுகளைப் பிரதியெடுத்திருந்தார். அக்கைப்பிரதிகளை ஆய்வுசெய்து அதிகாரபூர்வமான முதல் பட்டியலைத் தயாரித்தார். பல்லவர்காலக் கல்வெட்டுகளையும் தமிழக கேரள மாநிலக் கல்வெட்டுகளையும் சேகரித்துப் பதிப்பித்தார். தமிழகத்தில் மாங்குளம் , வரிச்சியூர் போன்ற இடங்களில் இருந்த தமிழ் பிராமி கல்வெட்டுகளை ஆய்வுசெய்து பதிப்பித்தார்

பல்லவர்கள் பாணர்கள் நாகர்கள் பற்றிய வரலாற்று நூல்களையும் தமிழகக் கோவில்கள், கட்டடக் கலை, கல்வெட்டியல் போன்றவற்றின் வரலாறுகளையும் எழுதினார் மகாலிங்கம் 16 நூல்களையும் பல கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதினார். பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பல்லவர்காலக் கல்வெட்டுகளையும் தமிழக கேரள மாநிலக் கல்வெட்டுகளைச் சேகரித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

நூல்கள்

  • Administration and social life under Vijayanagar. University of Madras.
  • The Banas in South Indian history. University of Madras.
  • Economic life under the Vijayanagar empire. University of Madras.
  • The Nagas in Indian history and culture. G. S. Press.
  • Early South Indian palaeography. University of Madras.
  • South Indian polity. University of Madras
  • Kanchipuram in early South Indian history. Asian Publishing House.
  • Studies in the South Indian temple complex. Karnataka University.
  • Mackenzie Manuscripts: Summaries of the Historical Manuscripts in the Mackenzie Collection. University of Madras.
  • Readings in South Indian history. B. R. Publishing Corporation.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Sep-2025, 09:03:52 IST