under review

வேம்பற்றுக் குமரனார்

From Tamil Wiki

வேம்பற்றுக் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் இரண்டு. அகநானூறில் ஒரு பாடலும் புறநானூறில் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

வேம்பற்றுக் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாண்டியநாட்டில் உள்ள வேம்பற்றூரில் பிறந்தவர். அந்தணர் குலத்தைச் சார்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வேம்பற்றுக் குமரனார் பாடிய பாடல்கள் அகநானூறில் 157-ம் பாடலாகவும் புறநானூறில் 317-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றுப் பாடல் பொருளீட்டச் சென்ற தலைவர் திரும்பி வருவார் என ஆறுதல் கூறிய தோழியிடத்து தலைவி தனது பிரிவுத் துயரைக் கூறுவதாக பாலைத் திணையில் அமைந்த பாடல். புறநானூறு 317-ம் பாடல் சிதைந்து பாதியளவில் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே பாடலின் முழுப்பொருளை அறிய இயலவில்லை. கிடைத்திருக்கும் பாடலைக் கொண்டு கள்ளுண்ட தலைவன் ஒருவன் செயலைக் கூறுவதாக வாகைத் திணையில் வல்லாண் முல்லை துறையில் அமைந்திருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு - 157
  • ஆடவர் பொருளீட்ட செல்லும் வழியின் வளமும் கடுமையான சூழ்நிலையும் காட்சிப்படுத்தப்படுகிறது.
  • பனை மரத்தில் விளையும் அரியல் என்னும் கள்ளினை பெண்கள் பனைமரத்து பாளையில் ஊற்றி விற்பர். அதனை வாங்கி அருந்திய வீரர்களின் கண்கள் சிவக்கும்.
  • வீரர்களின் அம்பினால் வீழ்ந்த பிணங்கள் குவியலாக கிடக்கும் இடத்திற்கு பக்கத்தில் கோங்கு மரங்கள் காணப்படும்.
  • கோங்கு மரத்தை சுற்றி வளர்ந்து பூ பூத்திருக்கும் அதிரல் கொடியை யானைகள் கவளமாக உருட்டி தின்னும்.
  • உவமை:போரால் அழிக்கப்பட்டு மக்களால் கைவிடப்பட்டு கிடக்கும் ஊரில் வீட்டு முற்றங்களில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கேட்பாரற்று கிடக்கும் பாவை தெய்வங்கள் போல ஆடவரை பிரிந்து இல்லத்தில் தனித்திருக்கும் மகளிரின் நிலை உள்ளது.
புறநானூறு - 317
  • போரில் வெற்றி பெறும் சிறப்புமிக்க வேலை எய்யும் பயிற்சி கொண்டவன் தலைவன்.
  • முற்றத்தில் கள்(மது) குடித்து மயங்கி விழுந்து கிடக்கும் தன் கூட்டாளிகளுக்கு மேலும் குடிக்க கள்ளோ, படுப்பதற்கு பாயோ தரும்படி கள் மயக்கில் இருக்கும் தலைவன் கூறுவதை இப்பாடல் வழி அறிய முடிகிறது.

பாடல் நடை

அகநானூறு - 157

  • திணை: பாலை கூற்று: பிரிவுணர்த்தியதோழிக்குத் தலைமகள் சொல்லியது.

அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
வினை அழி பாவையின் உலறி,
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!

புறநானூறு - 317

  • திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

வென்வேல் .. .. . நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .
.. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:52:31 IST