வீர. சிவராமன்
வீர. சிவராமன் (பிறப்பு: ஜூலை 20, 1928) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சமயம், இலக்கியம், சிறார் நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல நூற்றுக்கணக்கான நூல்களைப் பதிப்பித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
வீர. சிவராமன், ஜூலை 20, 1928-ல், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குப. சிவ. வீரப்ப செட்டியார் - மீனாட்சி ஆச்சிக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வி கற்றார். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
வீர. சிவராமன், பள்ளி வயதிலேயே வாசிப்பார்வம் கொண்டிருந்தார். ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். சிவராமன் எழுதிய சிறார் படைப்புகளும், கவிதை, கட்டுரைகளும் கல்கி, கோகுலம், அமுதசுரபி, தினமணி ஆகிய இதழ்களில் வெளியாகின.
பதிப்பு
வீர. சிவராமன், டிசம்பர் 13, 1954-ல், காரைக்குடி செக்காலை சாலையில், செல்வி பதிப்பகம் என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இப்பதிப்பகத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
கவியோகி சுத்தானந்த பாரதியின் 'மணிமேகலைக் காப்பியம்', டாக்டர் வ.சுப. மாணிக்கத்தின் 'இரட்டைக் காப்பியங்கள்', ந. சுப்புரெட்டியாரின் 'கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி', டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் 'தமிழர் திருமணத்தில் தாலி', டாக்டர் தமிழண்ணலின் 'தாலாட்டு', 'திருவள்ளுவர் காலம் யாது?' போன்ற நூல்கள் செல்வி பதிப்பக வெளியீட்டில் குறிப்பிடத்தகுந்தவை.
மதிப்பீடு
தம் எழுத்துக்களாலும், நூல் வெளியீட்டினாலும் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய நகரத்தார்களுள் ஒருவராகவும், பதிப்பாளர்களுள் ஒருவராகவும் வீர. சிவராமன் அறியப்படுகிறார்.
உசாத்துணை
- செல்வி பதிப்பக நூல்கள், தமிழ் மின் நூலகம்
- செல்வி பதிப்பக நூல்கள், ஆர்கைவ் தளம்
- செல்வி பதிப்பக நூல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
- நகரத்தார் கலைக் களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணையாசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், மறுபதிப்பு: 2002.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2026, 21:30:00 IST