வாழ்த்தியல்
வாழ்த்தியல் பாடாண் திணையின் வகைகளில் ஒன்று. அரசனின் பண்புகளைக் கூறி, அவனை வாழ்த்துவது.
விளக்கம்
வாழ்த்தியல் பாடாண் திணையின் ஒரு துறையாக புறப்பொருள் வெண்பாமாலையில் குறிப்பிடப்படவில்லை. தொல்காப்பியம் வாழ்த்தியலை பாடாண் திணையின் வகைகள் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. தேவர்கள், சான்றோர், அரசர் முதலியோரை வாழ்த்துவது வாழ்த்தியல்.
வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே (தொல்காப்பியம் செய்யுளியல் 414)
புறநானூற்றில் சில பாடாண் திணைப் பாடல்களின் துறை வாழ்த்தியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றில் 2,3,6,13,91,158,367,375, 377, 385, 386, 387 எண்ணுடைய பாடல்கள் வாழ்த்தியல் துறையில் அமைந்தவை. அவை பாட்டுடைத் தலைவனைப் பின்வருமாறு வாழ்த்துகின்றன.
- புறம் 2-இமயம், பொதிகை மலைகள் போல் வாழ்க.
- புறம் 3-மனைவியோடு மகிழ்ந்து வாழ்க.
- புறம் 6- குளுமை தரும் மதியம் பொலவும், ஒளி தரும் ஞாயிறு போலவும் வாழ்க.
- புறம் 13- மதம் பிடித்த யானைமீதிருப்பவன் நோயிலனாகத் திரும்புக.
- புறம் 91- சிவபெருமான் போல நிலைபெறுக.
- புறம் 158-பகைவனிடம் மேம்படுவாயாக.
- புறம் 367-மேகம் பொழியும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல்லாண்டுகள் வாழ்க.
- புறம் 375 -நிலம் உள்ளவரை வாழ்க.
- புறம் 377-கடல் போன்ற படையுடன் வாழ்க.
- புறம் 385-மழைமேகம் போல் வாழ்க.
- புறம் 386-வேண்டியது நல்கும் தாள் வாழ்க.
- புறம் 387 பொருநை ஆற்று மணலினும் பல்லாண்டு வாழ்க.
எடுத்துக்காட்டு
புறநானூறு 2
- திணை: பாடாண் துறை: செவியறிவுரூஉ (வாழ்த்தியலும் ஆம்)
- பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
- பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
மண்திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலை ப் புணரிக்குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை,
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்;
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண்விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் பான்றே!
பொருள் நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும்-திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா?தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபாலாருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன் நீ. பால் புளித்தாலும், பகல் இருளானாலும், நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக.இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலைகொள்வதாகுக.
புறநானூறு 385
- திணை: பாடாண் துறை: வாழ்த்தியல்.
- பாடியவர்: கல்லாடனார்.
- பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி,
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி,
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை 5
நீல் நிறச் சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே;
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்,
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய 10
வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!
பொருள்: பொழுது புலர்ந்தது. புள்ளினங்கள் பானின. புலவர் தடாரிப் பறையை வேறொருவன் வாயிலில் முழக்கிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட ஒருவன் இரக்கம் காட்டி அவரது வறுமை நீங்குவதற்காக, அழுக்கால் நீலநிறம் பட்டுக் கிழிந்திருந்த அவர் ஆடையை நீக்கிவிட்டு வெண்ணிறப் புத்தாடை அணிவித்தான். அவன் ஊர், காவிரி பாய்ந்துநெல் விளையும் அம்பர். அருவந்தை அவன் பெயர். புலவர் அவனை வாழ்த்தினார். அவன் நீண்டநாள் வாழவேண்டும். புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட அதிக நாள் வாழவேண்டும்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:56:36 IST