வான்மீகியார்
From Tamil Wiki
வான்மீகியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
வான்மீகியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரில் இருந்து வேறுபட்டவர். இவரது பெயர் சில ஏடுகளில் வான்மீகையார் என்றும் காணப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
வான்மீகியார் பாடிய பாடல் புறநானூறில் 358-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இல்லறத்தை காட்டிலும் துறவறம் மேன்மைமிக்கது என்னும் கருத்தமையுமாறு காஞ்சித் திணையில் பெருங்காஞ்சி துறையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- சூரியனை சுற்றி வரும் இப்பரந்த உலகம், ஒரே காலத்தில் பல்வேறு மன்னர்களால் ஆட்சி நடத்தப்படும் இயல்புடையது.
- துறவறத்துடன் ஒப்பிட்டால் இல்லறத்தின் பெருமை வெண்கடுகை விட சிறியது. எனவே அறிவிற் சிறந்தோர் துறவறம் மேற்கொண்டு தவம் செய்தனர்.
- இல்லற பற்றுகளை விட்டவருடன் அருட்செல்வத்தை வழங்கும் திருமகள் என்றும் உடனிருப்பாள். இல்லற பற்றுகளை விடாதவருக்கு திருமகளின் அருள் இல்லை.
பாடல் நடை
புறநானூறு - 358
- திணை: காஞ்சி துறை:பெருங் காஞ்சி
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி அற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட் டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - பேயனார் முதலிய 39 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- புறநானூறு - 358:puramam400
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:11:58 IST