வருமுலையாரித்தி
வருமுலையாரித்தி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
வருமுலையாரித்தி சங்க காலப் புலவர்களில் ஒருவர். வருமுலையாரித்தி என்னும் பெயர் கொண்டமையால் பெண்பாற்புலவர் என கருதும் ஆய்வு நோக்கும் மறுப்பாக தாம் பாடிய பாடலில் 'வருமுலையாரித்தி' என்னும் சொற்றொடர் அமையப் பாடியமையால் இப்பெயர் பெற்றார் என கருதும் இருவேறு போக்குகள் உள்ளன.
இலக்கிய வாழ்க்கை
வருமுலையாரித்தி பாடிய பாடல் குறுந்தொகையில் 176 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பலநாட்கள் தொடர்ச்சியாகத் தன்னை வந்து பார்த்து காதல் கொள்ள செய்த தலைவனை பிரிந்தவிடத்து ஏற்பட்ட துயரை தோழியிடம் தலைவி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- உவமைகள்: தலைவியை பிரிந்த தலைவனின் நிலை மலைக்குகையின் விளிம்பில் தொங்கி கொண்டிருந்த தேனடை முதிர்ந்து வீழ்ந்ததை ஒப்ப இருந்தது.
- தலைவனை பிரிந்த தலைவி சிந்தும் கண்ணீரானது வேறொரு இடத்து பெய்த மழை ஆறாக பெருகி மற்றொரு இடத்தை வந்தடைவது போல் இருந்தது.
பாடல் நடை
குறுந்தொகை - 176
- திணை: குறிஞ்சி துறை:கிழத்தி பிரிவிடை ஆற்ற வருந்தா நிற்பது.
ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசுஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - பேயனார் முதலிய 39 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- குறுந்தொகை - 176:nallakurunthogai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:10:30 IST