மதுரைப் பெருமருது இளநாகனார்
மதுரைப் பெருமருது இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரைப் பெருமருது இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பெருமருதன் என்பாரின் மகன். இளநாகன் என்னும் இயற்பெயர் கொண்டவர். மதுரை நகரில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைப் பெருமருது இளநாகனார் பாடிய பாடல் நற்றிணையில் 251-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுடன் தலைவி கொண்டுள்ள காதல் அன்னைக்கு தெரிந்துவிட்டதால் தலைவியை வீட்டுக்காவலில் வைத்துள்ளாள். தலைவியை சந்திக்க வரும் தலைவனிடத்து தலைவியின் நிலையை தினைப்பயிரிடம் பேசுவது போல மறைமுகமாக தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- உயர்ந்த அருவிகள் வீழ்ந்து ஓசையெழுப்பி நீர்பாயும் வளமான மலைநாட்டை சேர்ந்தவன் தலைவன். அவனது நாட்டில் ஒன்றுடனொன்று பின்னிக்கொண்டு பெருத்த அடிப்பாகத்துடன் வாழைமரங்கள் வளர்ந்து நிற்கும். அவற்றில் விளையும் வாழைப்பழங்களை குரங்குகள் பறித்து உண்ணும்.
- மகளின் காதலை அறிந்த அன்னை அவளை வீட்டில் சிறை வைத்துள்ளாள். தலைவிக்கு மனமாற்றம் ஏற்படுவதற்காக முருகக் கடவுளுக்கு ஆடு முதலான விலங்குகளைப் பலி தந்து பூசை செய்கிறாள்.
- முன்பு காவல் காக்கப்பட்டு செழித்து வளர்ந்த தினைப்புனத்து கதிர்கள், காவலுக்கு ஆளில்லாததால் பறவைகளால் தினைக்கதிர் மணிகள் கொய்து வீணாக போயின.
- தாம் விரும்பும் ஆடவரிடம் பிரித்து வைக்கப்பட்ட மகளிர் உடல் நலம் அழிய வாடுகின்றனர்.
பாடல் நடை
நற்றிணை - 251
- திணை: குறிஞ்சி துறை: சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா, யாம், அவன்
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;
தோடு இடம் கோடாய், கிளர்ந்து,
நீடினை விளைமோ! வாழிய, தினையே!
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 251:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:41:01 IST