மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பூவண்டல் என்னும் ஊரில் பிறந்தவர். மதுரையில் சென்று குடியேறி வாழ்ந்துள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் பாடிய பாடல் நற்றிணையில் 317-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியைs சந்திக்க வந்த தலைவனிடம், அவனுக்கும் தலைவிக்கும் இடையிலான உறவு தலைவியின் அன்னைக்கு தெரிந்தால் தலைவிக்கு ஏற்படும் துயரை தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- உயர்ந்த மலைநாட்டில் வாழ்பவன் தலைவன். நீண்டு தொடரும் அம்மலைச்சாரலில் முகத்தில் புள்ளிகளையுடைய ஆண் யானை பெண் யானையுடன் புணர்ந்த நிலையில் துதிக்கையை மேலே எழுப்பி சின்னம் விளிக்கும்.
- நன்றாக இலைகள் வளர்ந்த தினைப்பயிரில் கதிர் வந்து வளைந்து தொங்குவதை பச்சைக்கிளிகள் தாவிk கொய்து உண்ணும்.
- தலைவியின் தந்தையின் நிலத்தில் மலைகள் சூழப்பெற்ற அழகிய இனிய சுனையில் குவளை மலர்கள் பூத்து நிற்கும்.
- உவமைகள்: தலைவியின் கண்கள் குவளை மலருக்கு ஒப்புமிக்கப்பட்டது. வளைந்து தொங்கும் தினைக்கதிர்கள் பிடியானையுடன் புணர்ந்த நிலையில் இருக்கும் ஆண் யானையின் துதிக்கையை ஒப்ப இருப்பதாக உவமை கூறப்பட்டது.
பாடல் நடை
நற்றிணை - 317
- திணை: குறிஞ்சி துறை: தோழி தலைமகனை வரைவுகடாயது.
நீடுஇருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த
பூம்பொறி ஒருத்தல் ஏந்துகை கடுப்பத்
தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்
உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள் ஆயின் பனிகலந்து
என்னா குவகொல் தானே எந்தை
ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை
மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 317:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:39:02 IST