under review

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

From Tamil Wiki

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பண்டைய தமிழகத்தின் மதுரை நகரத்தை சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் பாடிய பாடல் அகநானூறில் 92-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியைக் காணவரும் தலைவனிடத்து இரவு வர வேண்டாம், பகலில் வருக என தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெடிந்து உயர்ந்த மலை உச்சியில் கண் பார்வை அழியும்படிக்கு மின்னல் மின்னும். இரவு நேரத்தில் கடும் மழை பொழியும். வளைந்த வரிகளை தாங்கிய உடலில் சிவந்த கண்களை கொண்ட புலியானது யானையை தாக்கி அச்சமூட்டும். தலைவியின் ஊரானது அத்தகு மலைச்சாரலுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
  • நீண்ட கைகளும் பரந்த மென்மையான தோளும் கொண்ட மகளிர் பகல் நேரத்தில் தினைப்புனத்தைக் காவல் காகக்ச் செல்வர்.
  • தினைப்புனமானது குரங்குகளும் ஏற முடியாதளவு உயரம் கொண்ட மரங்களை வேலியாக கொண்டது.
  • அங்கே செங்காந்தள் மலர்கள் பூத்திருக்கும் இடத்தில் மலையில் இருந்து வழிந்த அருவி நீரால் உண்டான ஒரு சுனை இருக்கிறது.
  • வலிமை வாய்ந்த இடியின் தாக்கத்தால் நீர்க்கரையோரம் துலக்கமாக ஒளிவீசி மணிபோன்று தோன்றும்.
  • உவமை: தலைவியின் கூந்தல் மென்மையான இருள் என உவமிக்கப்பட்டது.

பாடல் நடை

அகநானூறு - 92

  • திணை: குறிஞ்சி
  • துறை: இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்குந் தலைமகனைப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி வரைவுகடாயது

நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்
வாரல் வாழியர் ஐய நேரிறை
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை
உருமுச்சிவந் தெறிந்த உரனழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை
இருண்மென் கூந்தல் ஏமுறு துயிலே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:37:04 IST