மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்

மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் (பதிப்பு: 1986) தென்திருப்பேரை எனும் ஊரில் எழுந்தருளியுள்ள திருமாலைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். இந்நூலை இயற்றியவர், திருமேனிக் கவிராயர்.
வெளியீடு
மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நூலை, உ.வே.சா. நூல் நிலையம், 1986-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர், திருமேனிக் கவிராயர். உரை எழுதிப் பதிப்பித்தவர் பேராசிரியர் சி. ஜெகந்நாதாசார்யர்.
ஆசிரியர் குறிப்பு
மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத் தமிழ் நூலை இயற்றியவர் தென்திருப்பேரை திருமேனிக் கவிராயர். இவர் காரி இரத்தினக்கவிராயர் என்றும் திருமேனி இரத்தினக் கவிராயர் என்றும் அழைக்கப்பட்டார். திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாணவர். அவரால் இயற்றப்பெற்ற 'மாறனலங்காரம்' என்ற அணி இலக்கண நூலின் உரையாசிரியர். இவரது பிற நூல்கள்: திருக்குறுங்குடி அழகியநம்பி பிள்ளைத்தமிழ்; மகரநெடுங்குழைக்காதர் திருப்பணிமாலை.
மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நூலின் உரையாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் சி. ஜெகந்நாதாசார்யர், தமிழ்ப் புலவர். வை. மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் மாணவர். சென்னை விவேகாநந்தா கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். பல்வேறு இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். பல்வேறு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். மகாபாரதச் சுருக்கத்திற்கு இவர் எழுதிய உரை குறிப்பிடத்தகுந்தது. இவர் இயற்றிய மற்றொரு நூல், 'திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை'.
நூல் அமைப்பு
மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நூலில் 109 பாடல்கள் இடம்பெற்றன. இவற்றில் நான்கு செய்யுட்கள் கட்டளைக் கலித்துறையாலும் ஒரு செய்யுள் வெண்பாவிலும் அமைந்துள்ளது. மீதமுள்ள 104 பாடல்களும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் இயற்றப்பட்டுள்ளன. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கேற்ற இலக்கணங்களுடன் மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நூல் இயற்றப்பட்டுள்ளது.
நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ள காப்புப் பருவத்தில் பதிமூன்று பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் நம்மாழ்வார், சரஸ்வதி, ஆண்டாள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார். ராமானுஜர் ஆகியோர் போற்றப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள ஒன்பது பருவங்களான செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பருவங்களில் திருமாலின் சிறப்பு, பெருமை, புகழ், செயற்கரிய செயல்கள், குறும்புத்தனங்கள், அழகு, கொடை ஆகியன சிறப்பிக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கம்
மகரம் என்றால் 'மீன்'. மீனைப் போன்ற வடிவிலான குழையினை காதில் அணிகலனாய் அணிந்துள்ளதால், திருமாலை 'மகரநெடுங்குழைக்காதர்' என நூலின் ஆசிரியர் திருமேனிக் கவிராயர் குறிப்பிட்டார். நிலமகள், "திருமகளின் திருமேனியை வடித்துப் பொருநையாற்றின் கரையிலிருந்து தவம் செய்கையில், கூடுபுனற்றுறையில் (சமூக தீர்த்தம் என்னும் திருமஞ்சனத் துறையில்) அவள் கையில் இரண்டு மகர குண்டலங்கள் அகப்பட்டன. அவற்றை அணியத்தக்க நெடிய காது உடையவனாக வந்த திருமாலை, பூதேவி காதலித்துக் குண்டலத்தைச் சாத்தி மணந்து கொண்டாள். அதனால் அத்திருமாலுக்கு மகரநெடுங்குழைக்காதர் என்னும் பெயர் வழங்கலாயிற்று" என்று நூலின் முன்னுரை கூறுகிறது.
இராவணாதியரை வென்று இலங்கையிலிருந்து திரும்பிய இராமன், சோழநாட்டில் காவிரியாற்றுப் பக்கத்தில் பதினெட்டு ஊர்களைத் தானம் செய்தான் என்ற செய்தியைக் குறிக்கும் தொடர்கள், இப்பிள்ளைத்தமிழ் நூலில் காப்பு, தால், சப்பாணி, முத்தம், சிற்றில், சிறுதேர் போன்ற பருவங்களில் இடம்பெற்றன. சீதையைத் திருமணம் புரிய மிதிலை சென்று ஜனகனின் வில்லை (சிவதனுசு) ஒடித்தது; மாரீசன் வதை; அகலிகை சாப விமோசனம்; தாடகை வதம்; வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு மகுடம் சூட்டியது போன்ற பல செய்திகள் மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நூலில் இடம்பெற்றன.
திருவழுதி வளநாடன், தென்திருப்பேரை நகர்க்காவலன், ஆழிநீர் வண்ணன், புயல்வண்ணன், வானப்பிரான், பேரையூரன், துழாய்ப் பெம்மான், முகில் வண்ணன், திருப்பேரைக்கோ எனப் பல பெயர்களில் மகரநெடுங்குழைக்காதர் இப்பிள்ளைத் தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளார். இராமாயணம் தொடர்பான பல்வேறு வரலாற்றுச் செய்திகள் மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் நூலில் இடம்பெற்றன.
பாடல்
செங்கீரைப்பருவம்
வானாடரும்பொற் பொகுட்டா சனப்பத்ம
மண்டபத் தினிதிருக்கும்
மறைக் கிழவ னுஞ்சடை முடிக்கடவு ளுங்குலிச
வச்சிரா யுதத்தலைவனும்
பூநாறும் வெட்சியம் தெரியல்புனை குமரனும்
புகர்முகத் தவனுமதியும்
பொங்குசுட ரிரவியுந் துங்கமுனி வரும்நெடும்
பொற்கோவில் வலம் வந்துநம்
கோனாகும் வருணனா ராதனைசெய் மஞ்சனக்
கொலுவில்வந் தடிவணங்கிக்
கும்பிட்டு நின்றுசே விப்பநற் சேவைபுரி
கோசலைக் கிருகண்மணியே
தேனாறு பச்சைப் பசுந்துழாய் மேகமே
செங்கீரை யாடியருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள
செங்கீரை யாடியருளே.
முத்தப்பருவம்
மூவா முதலா வுலகமொரு
மூன்றும் பரவ வங்குரித்து
முத்திக் கொருவித் தாகவந்த
முதுநான் மறையின் குலக் கொழுந்தே
கோவா தொளிரும் மரகதமே
கொடும்போ ரரக்கர் குலக்கூற்றே
கோவேத் தியரு ளக்கமலம்
குடிபுக் கிருக்கும் பெருமாளே
தாவா வளமைக் கோசலைக்கோர்
தவமே தவத்தின் பயனேயச்
சனகன் றருசா னகிவேட்ட
தடங்கைக் களிறே போரேறே
தேவா வமிர்தங் கனிபவளத்
திருவாய் முத்தந் தருகவே
தெள்ளிப் பயிலுந் தமிழ்ப்பேரைச்
செல்வா முத்தந் தருகவே.
தாலப் பருவம்
கயங்கொண் டலம்பித் திரையெறியுங்
கடல்சூழு ழுலக முழுவதும் வெண்
கவிகை நிழற்கீ ழினிதடக்கிக்
கருணை புரிய நாடொறுநின்
றியங்குஞ் சரங்க ளனைத்தையுமற்
றெல்லா வுயிருந் தன்னுயிர்போல்
இரங்கிக் காக்கு மரசர்பிரான்
என்ற சரத பெருமானு
முயங்கும் பிராட்டி மூவர்க்குள்
முதன்மைத் தலைவி யாம் சிமிழ்ப்போல்
முற்றா முலைக்கோ சலைவயிற்றின்
முளைத்து மடிமேற் கிடந்துதனி
வயங்குங் கிரண மரகதமா
மணியே தாலோ தாலேலோ
மகரக் குழையே யென்னிருகண்
மணியே தாலோ தாலேலோ
உசாத்துணை
- மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ், தமிழ் இணைய மின்னூலகம்
- மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத் தமிழ், தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:36:01 IST