under review

பூதன் தேவனார்

From Tamil Wiki

பூதன் தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் இரண்டு. குறுந்தொகையில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பூதன் தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தேவன் என்னும் இயற்பெயர் உடையவர். பூதன் என்பவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

பூதன் தேவன் பாடிய பாடல்கள் நற்றிணையில் 80-ம் பாடலாகவும் குறுந்தொகையில் 285-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளது. நற்றிணை 80 ஆம் பாடலில் தலைவியின் தோழியிடம் தன் காதலை சொல்லுமாறு தூது செல்ல கேட்கிறான் தலைவன். தோழி மறுத்துவிடுகிறாள். தலைவியின் மேல் கொண்ட காதலால் தான் கொண்ட தவிப்பை தோழிக்கு கேட்குமாறு தன்னிடமே தலைவன் கூறுவதாக மருதத் திணையில் அமைந்துள்ளது. குறுந்தொகை 285-ம் பாடல் பொருளீட்ட சென்ற தலைவர் கார்க்காலம் வந்த பின்பும் திரும்பி வராமை கண்டு தனக்கு ஆறுதல் கூறிய தோழியிடம் தலைவி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை - 80
  • அன்னிய ஆடவர் கொடுக்கும் உடையையும் மாலையையும் மகளிர் வாங்குவதில்லை. அவர்கள் தைத்திங்கள் நாளில் தமது தோழியருடன் சென்று ஆற்றில் நீராடுவர்.
  • உவமை: எருமையின் பாலினை கறக்க முதலில் கன்றினை சிறிது பாலருந்த விடுவர். பின்னர் கன்றினை தொழுவத்தில் கட்டிவிட்டு எருமையை மேய்த்து சென்று பால்கறப்பர். தலைவியை கண்டும் தன் காதலை சொல்ல முடியாத தலைவன் எருமைக் கன்று பாலுக்கு ஏங்குவது போல துயருறுகிறான்.
குறுந்தொகை - 285
  • ஆடவர் பொருளீட்ட செல்லும் வழியில் ஞெமை மரத்தில் இறந்தவர்களின் ஊனை தின்னும் பருந்துகள் அமர்ந்திருக்கும்.
  • உவமை:தன் முற்றத்து மரத்திலிருக்கும் கிளையில் அருகருகே அமர்ந்து இன்பம் பெறும் புறா இணையை கண்டவுடன் தலைவருடன் கூடியிருக்க முடியாமையை எண்ணி தலைவி வருந்துகிறாள்.

பாடல் நடை

நற்றிணை - 80

  • திணை: மருதம் துறை: சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன் தோழி கேட்பத் தன்நெஞ்சிற்குரைத்தது.

'மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்' என,
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

குறுந்தொகை - 285

  • திணை: பாலை
  • துறை:பருவம் கண்டு வேறுபட்ட இடத்து வற்புறுத்தும் தோழிக்கு வன்புறை எதிரழிந்து தலைமகள் சொல்லியது.

வைகல் வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லையுந் தோன்றார்
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர்
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ்
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
ஊனசைஇ யொருபருந் திருக்கும்
வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:19:41 IST