under review

புதூகுஷ்ஷாம்

From Tamil Wiki
புதூகுஷ்ஷாம்

புதூகுஷ்ஷாம் (1821), இஸ்லாமியக் காப்பிய நூல்களுள் ஒன்று. செய்யுள்கள் அடிப்படையில் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இக்காப்பிய நூலை இயற்றியவர், செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் என்னும் சேகனாப் புலவர். இக்காப்பியத்தில் 6786 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. இதன் காலம்: பதினெட்டாம் நூற்றாண்டு.

வெளியீடு

புதூகுஷ்ஷாம், 1821-ல் பதிப்பிக்கப்பட்டது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் என்னும் சேகுனாப் புலவர் இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

புதூகுஷ்ஷாம் காப்பியத்தை இயற்றியவர் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் எனும் சேகுனாப் புலவர். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். உமறுப்புலவரின் சீறாப்புராணத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் இவரே. நாகை அந்தாதி, மக்காக் கலம்பகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றினார்.

நூல் வரலாறு

புதூகுஷ்ஷாம் நூலின் மூல நூல், அரபு மொழியில் உள்ள புதூகுஷ்ஷாம் காப்பியம். அதனை இயற்றியவர் அபூ அப்துல்லாஹ் முகம்மது பின் உமர். இவர் அல் வாக்கிதி என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். பெரும் புலவராகவும் மார்க்க அறிஞராகவும் விளங்கிய இவர் சுல்தான் ஹாறூன் அல்றஷீத் அவர்களின் காஜியாகப் பணிபுரிந்தார். இவர் சிரியாவை வெற்றி கொண்டமையைப் பற்றி மாத்திரம் இலக்கியம் படைத்தவராக அறியப்படுகிறார்.

முகம்மது சகீது என்பவர் என்பவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, செய்கு அப்துல் காதிறு நயினார், புதூகுஷ்ஷாம் காப்பியத்தைத் தமிழில் இயற்றினார். முகம்மது சகீதைக் காப்பியத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார்.

நூல் அமைப்பு

புதூகுஷ்ஷாம் காப்பிய வடிவில் அமைந்துள்ளது. முஹம்மதிய்யா, சித்தீக்கிய்யா, பாறூக்கிய்யா என்னும் மூன்று காண்டங்களில் 61 படலங்களையும் 6786 விருத்தப் பாடல்களையும் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்து தனிப் பாடலாக இடம்பெற்றுள்ளது.

முஹம்மதிய்யா

முதல் காண்டம் முஹம்மதிய்யா, 11 படலங்களையும், 965 விருத்தங்களையும் கொண்டது. இக்காண்டம், நபி பெருமானார் அயல் நாட்டு மன்னர்களை இஸ்லாத்துக்கு அழைத்து அனுப்பிட நிருபங்களைப் பற்றிப் பேசுகிறது.

சித்தீக்கிய்யா

இரண்டாவது காண்டம் சித்தீக்கிய்யா, 13 படலங்களையும், 1747 விருத்தங்களையும் கொண்டது. சிரியாவில் நடைபெற்ற போர்களைப் பற்றிக் கூறுகிறது இக்காண்டம்.

பாறூக்கிய்யா

மூன்றாவது காண்டம் பாறூக்கிய்யா, 37 படலங்களையும் 4074 விருத்தங்களையும் கொண்டது. இக்காண்டம் சிரியா வெற்றி கொள்ளப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது.

உள்ளடக்கம்

புதூகுஷ்ஷாம், நபிகள் நாயகத்தின் இறுதிக் கால வாழ்க்கையையும், இஸ்லாத்தின் முதல் கலீபாவான அபூபக்கர் சித்தீக்(றலி) அவர்களின் ஆட்சிக் காலத்தையும், இரண்டாவது கலீபாவான உமர் பாறுக் (றலி) அவர்களது ஆட்சிக் காலத்தையும் விளக்குகிறது.

பு(த்தூஹ்) என்பது அரபு மொழியில் 'பத்ஹு' என்பதன் பன்மை. 'பத்ஹு' என்பதற்கு வெற்றி என்று பொருள். புதூகுஷ்ஷாம் என்பதற்கு 'ஷாம் நாட்டு வெற்றிகள்' அல்லது 'ஷாம் நாட்டைவென்று கைப்பற்றிக் கொள்ளல் ' என்பது பொருள். ஷாம் நாடு அரபு நாட்டின் வடதிசையில் அமைந்த ரோமப் பேரரசின் ஒரு பகுதி(இன்றைய சிரியா).

நபிகளின் காலத்தில் தொடங்கிய ரோம நாட்டுப்போர் செய்யிதினா அபூக்கர் சித்தீக்கு ( றலி ), செய்யிதினா உமறுபாறுக்கு ( றலி ) ஆகிய இரு வேந்தர்கள் காலத்திலும் தொடர்ந்து, பின் பூரண வெற்றியுடன் நிறைவெய்தியது. இவ்வெற்றி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே புதூகுஷ்ஷாம் காப்பியம்.

பாடல் நடை

புதூகுஷ்ஷாம் காப்பியம் இயற்றக் காரணம்

சீதநீர் வயல்சூழ் மேன்மைத் திருப்பதி பவளக் காட்டில்
தாதுலாம் புயத்து பாவா சாகிபு தவத்தால் வந்த
மூதறி வுணருஞ் சிந்தை முகம்மது சகீது வேந்த
னாதமொய்ப் பனுவல் செய்வா னற்கருத் தியற்றி னானே

நபிகளின் மறைவுத் துயரம்

பாவினை மறந்த கைகால் பான் முலை மறந்த பிள்ளை
ஆவியை மறந்த ஆக்கை அடுபுகை மறந்த சுல்லி
காவினை மறந்த புட்கள் கண்படை மறந்த பள்ளி
தீவிகை மறந்த இல்லம் செய்தொழின் மறந்த மூதூர்

போரின் தன்மை

வெட்டு வார்சிலர் வாளொடு கையிற வெருளத்
தட்டு வார்சிலர் கேடகம் தலையொடு நுறுங்க
வொட்டு வார்சிலர் கதையொடு தோள்விழ வொதுங்கிக்
கட்டு வார்சிலர் வேல்கொடு பொருமுகக் களத்தே

வலப்புற மிகைத்தனர் மறக்கய மனத்திற்
சலப்பகை யெனத்தரு தவத்திப ரொக்கல்
கலப்புற நெருக்கின ரடர்த்தனர் கலக்கிக்
குலப்படை கொழித்தனர் புயற்குழு திகைப்ப

படப டென்றுகதை யிட்டிவிட முற்றுமழி பட்டு கவியுங்
கடக டென்றுருள வெத்திசையு மொய்த்தவலி கத்த ருடல்
மடம டென்றுசரி யக்கண நெருக்கினிழி மட்டை யெவணுந்
தடத டென்று நட னிட்டன பிணக்குவை தடக்கிரி கண்மேல்

போரின் வெற்றி

உள்ளக் கார மொழியவலி யொழிய விழிகள் குளிர வொளிர்
கொள்ளக் காந்தும் படைக்கலன்க ளொழியக் குறுகார் குறுகிவரத்
துள்ளக் காலு மானந்தந் தொடர்ந்த மேலோர் முகமலரப்
பள்ளக் கார்பைங் கடற்குணக்கிற் பருதி கதிர்க்கா லுருவினனே

மதிப்பீடு

புதூகுஷ்ஷாம் போரின் சிறப்பைப் பற்றிக் கூறும் காப்பியம். செய்யுள்களின் எண்ணிக்கை அடிப்படையில் இக்காப்பியம் முதலிடம் வகிக்கிறது. இஸ்லாமியக் காப்பிய நூல்களில் முன்னோடிக் காப்பிய நூலாக புதூகுஷ்ஷாம் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:37:37 IST