பார்காப்பான்
பார்காப்பான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பார்காப்பான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். உலகநாதன் என்ற பெயரினை போல பார்காப்பான் என்பதும் திருமாலின் பெயர்களில் ஒன்று. பாரகாபரன், பாரகரபரன், பாரகாபான் என்று பிற பெயர்களிலும் ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
பார்காப்பான் பாடிய பாடல் குறுந்தொகையில் 254 -வது பாடலாக இடம்பெற்றுள்ளது. கார்காலத்தே திரும்பி வருவேன் என்று சென்ற தலைவர் இளவேனிற் காலத்தும் வராதது கண்டு தனது துயரத்தை தோழியிடம் தலைவி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- தலைவியிட் கூந்தலை பாயாக கொண்டு உறங்கிய தலைவர் அதனை மறந்தார்.
- பொருளீட்ட சென்றவர் இளவேனிற் காலம் வந்தும் தூது செய்தி எதுவும் வரவில்லை.
- உவமை: இலைகள் அற்ற அழகிய கோங்கு மரத்தின் கிளைகளில் மலர்ந்துள்ள அரும்புகளை சுற்றி வண்டுகள் ஆரவாரிக்கின்றன. கோங்கு மரத்தின் அரும்புகள் மலர்ந்துள்ளது இள மகளிரின் முலைகளை ஒத்துள்ளது.
பாடல் நடை
குறுந்தொகை - 254
- திணை: பாலை துறை: பருவம் கண்டு,வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
தலையலர் வந்தன வாரா தோழி
துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்
பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார்
செய்பொருள் தரனசைஇச் சென்றோர்
எய்தின ராலென வரூஉந் தூதே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 254:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:05:32 IST