under review

நூருல் இஸ்லாம் (இதழ்)

From Tamil Wiki
நூருல் இஸ்லாம் முதல் இதழ் - நவம்பர், 1939

நூருல் இஸ்லாம் (1939), இஸ்லாமிய சமயம் சார்ந்து சென்னையிலிருந்து வெளிவந்த மாத இதழ். 1950-களில் வார இதழாக வெளியானது. இதன் ஆசிரியர்: ஹாபிஸ் முஹம்மது யூசுபு பாகவி.

'நூருல் இஸ்லாம்' என்ற இதே பெயரில், இதே காலகட்டத்தில் மலேசியாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் இதழ்கள் வெளியாகின.

'நூருல் இஸ்லாம்' என்பதற்கு 'இஸ்லாத்தின் ஜோதி' என்பது பொருள்.

பிரசுரம், வெளியீடு

நூருல் இஸ்லாம் இதழ், நவம்பர் 1939 முதல் சென்னையிலிருந்து வெளியானது. 1950-களில் வார இதழாக மாறியது. 1960-களில் இஸ்லாம் கலாசார தமிழ் வாரப்பதிப்பு' என்ற அறிவிப்புடன் வெளியானது. ஆசிரியர்: ஏ.என். ஹாபிஸ் முஹம்மது யூசுபு பாகவி.

இதழ் அமைப்பு

நூருல் இஸ்லாம் இதழ், 'ஓர் உயரிய செந்தமிழ் மாசிகை' என்ற அறிவிப்புடன் வெளிவந்தது. இதழின் ஆண்டுச் சந்தா: இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு: மூன்று ரூபாய். பர்மா, மலாய் போன்ற நாடுகளுக்கு: நான்கு ரூபாய் எட்டணா. ஆயுள் சந்தா: நூறு ரூபாய். போஷக சந்தா: இருபத்தைந்து ரூபாய். தொடக்க காலத்தில் 32 பக்கங்களிலும் பிற்காலத்தில் 40-48 பக்கங்களிலும் வெளியானது. பக்க எண்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வந்தன. இதழின் ஆண்டைக் குறிக்க 'மலர்' என்பதையும், மாதத்தைக் குறிக்க 'இதழ்' என்பதையும் பயன்படுத்தியது. சந்தாவை முன் பணமாக அனுப்புவோருக்கு மட்டுமே இதழ் அனுப்பப்பட்டது. தனிப்பிரதியைப் பெற விரும்புவோர் ஐந்து அணாவுக்கான தபால் தலையை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்திருந்தது.

நூருல் இஸ்லாம் இதழின் ஆசிரியர் - ஏ.என். ஹாபிஸ் முஹம்மது யூசுபு பாகவி

ஆசிரியர் குறிப்பு

'நூருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் ஏ.என். ஹாபிஸ் முஹம்மது யூசுபு பாகவி, தொடக்க காலத்தில், பா. தாவூத்ஷா நடத்தி வந்த 'தாருல் இஸ்லாம்' இதழில் பணியாற்றினார். தாவூத்ஷாவின் மைத்துனரான இவர், 'தாருல் இஸ்லாம்' இதழிலிருந்து விலகி, அதே போன்ற தலைப்பில், 'நூருல் இஸ்லாம்' இதழைத் தொடங்கினார். 'தாருல் இஸ்லாம்' இதழைப் போன்ற அமைப்பிலேயே 'நூருல் இஸ்லாம்' இதழும் வெளியானது. தாவூத்ஷாவைப் பின்பற்றி, ஹாபிஸ் முஹம்மது, 'நூருல் இஸ்லாம்' இதழ் மூலம், பல நூல்களை வெளியிட்டார். நாள்காட்டியை வெளியிட்டார். மருந்துகளை விற்பனை செய்ததார். 'இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்', 'நபி பிரானின் ஸல் நற் பிரசாரம்' போன்றவை ஏ.என். ஹாபிஸ் முஹம்மது யூசுபு பாகவி எழுதிய நூல்களில் சில.

உள்ளடக்கம்

'நூருல் இஸ்லாம்' இதழில் இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த பல கட்டுரைகள் வெளியாகின. எளிய தமிழையே 'நூருல் இஸ்லாம்' பயன்படுத்தியது. அல்லாஹ் உண்டா இல்லையா, குர்ஆன் உதயம், மார்க்கத்தின் சில கூட்டங்கள், அப்கானிஸ்தான் சரிதை, காங்கிரஸ் லீக் விளையாட்டு, முஸ்லிம் உலக முக்கிய விஷயம், துருக்கியின் யுத்த முஸ்தீபு, முஸ்லிம் அரசாங்கங்களும் வைத்திய சாலைகளும், உல்லாச 'ஞானம், ஐரோப்பாவில் முஸ்லிம்கள், காஜீ கமால் பாஷா (சரித்திரச் சுருக்கம்) சிறார்கள் ஞானப் பகுதி - போன்ற தலைப்புகளில் நூருல் இஸ்லாமின் முதல் இதழில் கட்டுரைகள் வெளியாகின.

பெண்களுக்கான பகுதிகள், இஸ்லாமிய அரசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அரசியல் கட்டுரைகள், இஸ்லாம் மார்க்கம் சார்ந்த செய்திகள், அறவுரைகள் ஆகியன நூருல் இஸ்லாம் இதழில் இடம்பெற்றன. சிறுகதைகளும் அவ்வப்போது வெளியாகின. இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த தொடர்கள் சிலவும் வெளிவந்தன. விளம்பரங்களுக்கும் நூருல் இஸ்லாம் இதழ் இடமளித்தது.

இதழ் நிறுத்தம்

'நூருல் இஸ்லாம்' இதழ் எப்போது நின்றது என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

ஆவணம்

'நூருல் இஸ்லாம்' இதழ்களில் சில ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திலும், பிரிட்டிஷ் நூலகத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

'நூருல் இஸ்லாம்' இதழ், இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த செய்திகளை முழுமையாக இஸ்லாமியர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த செய்திகளோடு அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. இந்திய விடுதலைக்கு முன்னர் தொடங்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின்னரும் நீண்ட காலம் வெளிவந்த, இஸ்லாமிய சமயம் சார்ந்த ஓர் குறிப்பிடத்தகுந்த இதழாக 'நூருல் இஸ்லாம்' இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2026, 12:27:40 IST