நீ. கந்தசாமிப் பிள்ளை

நீ. கந்தசாமிப் பிள்ளை (சர்க்கரைப் புலவர்) (ஜூன் 09, 1898 - ஜூன் 18, 1977) தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், கட்டட ஒப்பந்தக்காரர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், தாளாளராக இருந்தவர், தமிழ்ப் பொழில் இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
நீ.கந்தசாமிப் பிள்ளை தஞ்சைக்கு அருகில் உள்ள பள்ளியகரம் என்ற ஊரில் நீலமேகப் பிள்ளை, சௌந்தரவல்லி அம்மாள் இணையருக்கு ஜூன் 09, 1898 அன்று பிறந்தார் . தஞ்சையில் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு தாமே அறிஞர்களிடம் அக்கால வழக்கப்படி பாடங்கேட்டு, தமிழ் இலக்கியங்களைக் கற்றார். சாமிநாதப் பிள்ளை என்பவரிடம் திருமுருகாற்றுப்படை நூலையும், திருவெண்காடு வேங்கடசாமி நாயுடுவிடம் கம்பராமாயணத்தையும், அப்பாவு ஆச்சாரியாரிடம் அறிவுநூல், இயற்கைநூல் எண்ணியலையும் கற்றார். ஆங்கிலத்திலும் ஆழமான புலமை பெற்றிருந்தார்.
1914-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை புரிந்த முதிய துறவி ஒருவர் மூலம் சங்கப் பாடல்கள், சீவக சிந்தாமணி குறித்த விவரங்களை அறிந்தார். சதாவதானம் சுப்பிரமணிய அய்யரின் இராமாயணச் சொற்பொழிவுகள், இவரது இராமாயண ஈடுபாட்டை வளர்த்தது.
இலக்கிய வாழ்க்கை
கரந்தைத் தமிழ்ச்சங்கம்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இணைந்து சங்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் 1925-ல் 'தமிழ்ப் பொழில்' மாத இதழைத் தொடங்கியபோது உமாமகேசுவரம் பிள்ளை மற்றும் அ. வேங்கடாசலப் பிள்ளையுடன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார்.
1925-ல் தொடங்கிய தமிழ்ப்பொழில் தொடர்பு அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்க கால வளர்ச்சிகளில் பங்காற்றினார். 1920-களில் தொடங்கி 1950 வரை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இடம் பெற்றிருந்தார். 1938-ல் சங்கத்தின் வெள்ளிவிழாவைப் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். 1941-1945 ஆண்டுகளில் சங்க அமைச்சராகவும் பணிபுரிந்தார்.
தமிழ்ப்பொழில் இதழுக்காக கால்டுவெல் நூற்றாண்டு மலர்' (1958 ஆகஸ்டு) ஒன்றைக் கொண்டு வந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
1929-ல் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டிட ஒப்பந்தக்காரராக இருந்ததால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல புதிய கட்டிடங்களை நீ. கந்தசாமி வடிவமைத்தார். இதன்மூலம் அண்ணாமலை அரசர் குடும்பத்துடன் கிடைத்த தொடர்பைக் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு,ஆளவை மன்றம்,கல்விக் குழுக்களில் பணிபுரிந்துள்ளார். அங்குப் பணிபுரிந்தபொழுது கம்பராமாயணப் பதிப்பு வெளிவரக் காரணமாக இருந்தார். அதன் ஆலோசனைக்குழுவில் உறுப்பினர் பதவி வகித்தார்.
பதிப்பியல்
நீ. கந்தசாமிப் பிள்ளையின் முன்னெடுப்பால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பு மேற்கொள்ளப்பட்டு பல தொகுதிகளாக வெளியிடப்பட்டது. கம்பராமாயணத்தின் அனைத்துப் பாடங்களையும் பதிவு செய்த பதிப்பாக அது அமைந்திருக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்தியதில் நீ.க. வின் திட்ட வரையறை பெரும்பங்கு வகித்தது. 1956-ல் நடைபெற்ற மர்ரே ராஜம் கம்பராமாயணப் பதிப்பிற்கும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதிப்பிற்கும் எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் இணைந்து மூலவளங்களைத் தெளிவுபடுத்தினார்.
நீ.க. புதுச்சேரி பிரெஞ்சு - இந்திய ஆய்வு நிறுவனத்தோடும் தொடர்பு கொண்டு செயல்பட்டு நற்றிணை மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இவரது தலைமையில், சங்க இலக்கிய அகராதி உருவாக்கப் பணி பிரெஞ்சு - இந்திய நிறுவனத்தில் தொடங்கப் பெற்றது. இதன் விளைவாகப் பழந்தமிழ்ச் சொல்லடைவுகள் (1967) மூன்று தொகுதிகள் வெளிவந்தன. பழந்தமிழ் இலக்கிய - இலக்கணங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதி இன்னும் அச்சு வடிவம் பெறாமல் உள்ளது. கரந்தைத் தமிழ்ச்சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களின் தொடர்ச்சியாகவே இவரது பணி பிரெஞ்சு - இந்திய நிறுவனத்தில் தொடர்ந்தது.
1964-ல் திருவாசகப் பதிப்பை 1964 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்காகத் தயாரித்தார்.
1968 - 1973 காலப் பகுதிகளில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகக் கௌரவச் செயலாளராகவும் செயல்பட்டபோது, பல அரிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டும், மொழிபெயர்க்கப்பட்டும் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தார். வீரமாமுனிவரின் 'செந்தமிழ்', 'கொடுந்தமிழ்' ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.
பிற பணிகள்
- கலாக்ஷேத்திரா, உ.வே.சா. நூலகம் இவற்றின் நிர்வாகக்குழு உறுப்பினர்
- சரஸ்வதி மகால் நூல் நிலையத்தின் கௌரவச் செயலாளர்
- தமிழ்நாடு சித்த மருத்துவத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
திரைத்துறை
நீ.க. இறுதிக் காலங்களில் 'பிரகதி' எனும் படப்பிடிப்பு நிறுவனத்தைச் சென்னையில் உருவாக்கி, இரண்டு திரைப் படங்களை எடுத்தார். இதன்மூலம் பெரும் பொருள் இழப்பிற்கு ஆளானார்.
மறைவு
நீ. கந்தசாமிப் பிள்ளை ஜூன் 18, 1977 அன்று காலமானார்.
நூல்கள்
- திருவாசகம், மர்ரே பதிப்பு, 1956
- தொல்காப்பியம், மர்ரே பதிப்பு, 1957
- கல்லாடம்,மர்ரே பதிப்பு, 1957
- கம்பராமாயணம்(யுத்தகாண்டம் நீங்கலாக), மர்ரே பதிப்பு, 1958
- தாமஸ் கிரேயின் இரங்கற்பா, கழகம், 1961
- திருவாசகம் முதற்பகுதி, 1964
- பழந்தமிழ் நூற்சொல்லடைவு, 1967
- சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பெருநூல்
- Valluvar speaks
- நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பு(2008),பிரஞ்சு நிறுவனம்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Aug-2026, 19:15:29 IST