under review

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில்

From Tamil Wiki
திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் முகப்பு

காட்டழகிய சிங்கர் திருக்கோயில் திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் அமைந்துள்ள வைணவ ஆலயம். மூலவர் லக்ஷ்மி நரசிம்மர்.

ஆலய அறிமுகம்

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) அமைந்துள்ளது. திருவரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயில். தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திருவரங்கம் சிங்கபெருமாள் கோயில் மண்டபம்

கோவிலின் மூலவராக லக்ஷ்மி நரசிம்மர் உருவம் வழிபடப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகின்றன. 13-ம் நூற்றண்டில் கற்றளியாக எடுக்கப்பட்டுள்ளது.

இடம்

திருவரங்கம் சிங்கபெருமாள் கோயில் விமானம்

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் திருவரங்கம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோயில் வரலாறு, பெயர்

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் கட்டப்பட்டதன் தரவுகள் முழுமையாக கிடைப்பதில்லை. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால மன்னன் சோமேஸ்வரன் காலத்தைய கல்வெட்டு காணப்படுவதால் அதற்கு முன்பிருந்தே கோயில் வழிபாட்டில் இருந்திருந்திருக்கவேண்டும் என்று கருதலாம்.

கோயில் தெய்வங்கள்

மூலவர்

கோயிலின் மூலவரான சிங்கபெருமாள் சிற்பம்வீராசனத்தில் அமர்ந்த நிலையில் இடதொடை மீது பூமாதேவியை அமர்த்திய நிலையில் காணப்படுகிறது. வலது பின் கரத்தில் சக்கரமும் இடது பின் கரத்தில் சங்கும் கொண்டு வலது முன் கரம் அபயஹஸ்தமாகவும் வாள் ஏந்திய நிலையிலும் உள்ளது. இடது முன் கரம் லக்ஷ்மி தேவியை ஆலிங்கனம் செய்வதாக அமைந்துள்ளது. லக்ஷ்மியின் இடது கரம் அபயஹஸ்தமாகவும் வலது கரம் நரசிம்மரை ஆலிங்கனம் செய்வதாகவும் உள்ளது.

பரிவார ஆலயங்கள்

கோவிலுக்கு உள்ளே சக்கரத்தாழ்வார், கருடன் சன்னதிகள் அமைந்துள்ளன.

தலபுராணம்

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் பகுதியில் அருகில் உள்ள திருவானைக்கா முன்னர் யானைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. அங்கு காட்டு யானைகள் மிகுந்த தொல்லைகளை அளித்து வந்ததால் கூர நாராயண ஜீயர் இங்கு நரசிம்மரை பிரதிஷ்டை செய்துததாக தலபுராணம் கூறுகிறது.

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் மணற்பாக்கத்து நம்பி என்பவருக்கு வைணவ மரபின் முக்கிய ஆசிரியர்களில் ஒருவரான பிள்ளை லோகாச்சாரியார் தனது வசனபூஷணத்தை உபதேசித்தார் என்று பிள்ளை லோகாச்சரியார் வசன பூஷணத்தின் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது.[1]

கோயில்கட்டிடக்கலை அமைப்பு

திருவரங்கம் சிங்கபெருமாள் கோயில் பிரகாரம்
திருவரங்கம் சிங்கபெருமாள் கோயில் மகாமண்டப சிற்பங்கள்

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் முற்கால சோழர், விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் கூடிய கருங்கல் கட்டுமானம் வளாக மையத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

சதுர வடிவ கருவறையின் மீது பிற்காலத்திய நாகர பாணி விமானம் அமைந்துள்ளது. மையக் கட்டுமானத்தைச் சுற்றி கருங்கல் பதிக்கப்பட்ட தளம் உள்ளது.

கோவிலுக்கு வெளியே வலது புறம் திருக்குளம் அமைந்துள்ளது.

பலிபீடம், த்வஜஸ்தம்பம்

கோயிலின் மைய கட்டுமானத்தில் நுழைவாயிலை அடுத்து பலிபீடமும் த்வஜஸ்தம்பமும் உள்ளன.

முக மண்டபம்

முகமண்டபம் தெற்கிலும் வடக்கிலும் களிற்று படிகளுடன் அமைந்துள்ளது. தெற்கிலும் வடக்கிலும் இரண்டு தூண்களாக நான்கு தூண்கள் உள்ளன. முகமண்டபத்தை ஒட்டிய நிலையில் கருவறையை நோக்கிய கருடாழ்வார் சந்நிதி உள்ளது.

மகா மண்டபம்

முகமண்டபத்தை அடுத்து 16 தூண்களுடன் அமைந்த மகாமண்டபம் உள்ளது.

அர்த்த மண்டபம்

அர்த்தமண்டபத்தில் நான்கு தூண்களுடன் அமைந்த மண்டபம் உள்ளது.

விமான அமைப்பு

கோயில் விமானம் அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு த்விதள (இருதள) விமானமாக அமைந்துள்ளது.

அதிஷ்டானம்

நிலத்திலிருந்து 9 அடி 6 அங்குலம் உயரமான அதிஷ்டானம். உபானம், அதோ பத்மம், வியாள வரி கொண்ட பட்டி, குட்டியஸ்தம்பங்கள் கொண்ட கண்டம், வியாளம், கண்டம், சிறிய பத்மம், பட்டி, பத்மம், குமுதம், மற்றும் பத்மம் ஆகிய உறுப்புகளை கொண்டுள்ளது.பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

பாத வர்க்கம்
திருவரங்கம் சிங்கபெருமாள் கோயில் தலபுராணம்

கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்டியஸ்தம்பங்களும்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் தரங்க போதிகையுடன் காணப்படுகின்றன.

கருவறையின் வடக்கு கிழக்கு தெற்கு மூன்று பகுதி கோஷ்டங்களிலும் சிற்பங்கள் இல்லை.

பிரஸ்தாரம்

கபோத பகுதியில் கீர்த்தி முகத்துடன் அமைந்த கூடுகளும் முனைகளில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கபோதத்திற்கு மேல் யாளி வரி உள்ளது.

தளங்கள்
திருவரங்கம் சிங்கபெருமாள் கோயில் குளம்

பிரஸ்தாரத்திற்கு மேல் மூன்று தளங்கள் கொண்ட சுதைக் கட்டுமானம் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் கூடு மற்றும் பஞ்சரம் உள்ளன.

முதல் தளத்தில் கிழக்கு திசையில் உள்ள சாலையில் லக்ஷ்மி நரசிம்மர் சிற்பம் உள்ளது.

சிகரம்

கிரீவத்தில் நான்கு திசைகளிலும் கருடன் சிற்பம் உள்ளது. நாகர சிகரமும் கலசமும் உள்ளது.

பரிவார ஆலயங்கள்

கருடன் சந்நிதி

முகமண்டபத்தை ஒட்டிகருவறையை நோக்கிய கருடன் சன்னிதி அமைந்துள்ளது. அஞ்சலி ஹஸ்தத்தில் கருடாசனத்தில் அமைந்த கருடன் சிற்பம் உள்ளது.

சக்கரதாழ்வார் சந்நிதி

துவஜஸ்தம்பத்திற்கு அருகில் வடக்கு நோக்கிய சக்கரதாழ்வார் சந்நிதி உள்ளது.

சிற்பங்கள் பட்டியல்

கருவறையில் லக்ஷ்மி நரசிம்மர், பரிவார ஆலயங்களில் சக்கரதாழ்வார், முகமண்டபத்தில் கருடன் சிற்பங்கள் உள்ளன.

திருவிழாக்கள்

விஜயதசமி
திருவரங்கம் சிங்கப்பெருமாள் மூலவர்

திருவரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்திற்கு விஜயதசமியன்று திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் எழுந்தருள்கிறார்.

ஜேஷ்டாபிஷேகம்

ஆடி மாதத்தில் நரசிம்மருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பிரதோஷம்

பிரதோஷ காலங்களில் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது.

கல்வெட்டுகள்

மகா மண்டபத்தின் வலப்புற சுவற்றில் 13ம் நூற்றாண்டு எழுத்தமைப்பில் ஹொய்சள அரசர் சோமேஸ்வரனின் கல்வெட்டு காணப்படுகிறது. பெரும்பகுதி சிதைந்துள்ளதால் முழு கல்வெட்டையும் அறியமுடியவில்லை. இக்கோயிலில் உள்ள நரசிம்மரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அனந்தநாராயணன் மற்றும் அவரது மகன் (பெயர் சிதைந்துள்ளது) என்று இறுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

திருச்சுற்றில் தளத்தில் இரண்டு துண்டு கல்வெட்டுக்கள் உள்ளன அவற்றில் ஒன்றில் திருவாரூர் என்று பொறிப்பு காணப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. ↑ துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள கல்வெட்டு
  2. ↑ இந்திய தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 1985-1986 கல்வெட்டு எண் 406

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2026, 08:15:30 IST