திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார்

திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார் (சாரங்கபாணி) பண்ணிசைக் கலைஞர். பல்வேறு மாணவர்களுக்குப் பன்னிரு திருமுறைகளைப் பயிற்றுவித்தார். ஆலயங்களில் ஓதுவார் மூர்த்தியாகப் பணியாற்றினார். இந்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
சாரங்கபாணி என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூரில், நாகரத்தினம் - சம்பூர்ணம் இணையருக்கு பாரம்பரியமான வைணவக் குடும்பத்தில் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். தந்தை நாகரத்தினம் தீவிர வைணவராக இருந்தார். தினமும் மகனுடன் அவ்வூர் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாளைப் பிரபந்தம் ஓதி வழிபட்டு வந்தாலும், சாரங்கபாணிக்கு சிவபெருமானின் மீதும், முருகனின் மீதும் நாட்டம் ஏற்பட்டது. சைவ பக்திப் பாடல்கள் சாரங்கபாணியை ஈர்த்தன. எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.
சுவாமிநாதன் ஓதுவார் பிறந்த தேதி பற்ரிய விவரம் அறியவரவில்லை.

இசை வாழ்க்கை
தொடக்கம்
ஒரு சமயம் மதுரை சோமு, பாபநாசம் ஆலயத்திற்கு வருகை தந்து இரவு முழுவதும் கச்சேரி நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சிக்கு மகனையும் அழைத்துச் சென்றிருந்தார் நாகரத்தினம். கச்சேரி முடிந்ததும் சோமுவைச் சந்தித்து தனது மகனின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். சோமு, சாரங்கபாணியை ஒரு பாடல் பாடும்படிக் கூறினார். சாரங்கபாணி, 'சிந்தனை செய் மனமே' என்ற 'அம்பிகாபதி' படத்தில் இடம்பெற்ற பக்திப் பாடலைப் பாடினார். சாரங்கபாணியைத் தட்டிக் கொடுத்த சோமு, நாகரத்தினத்திடம், "இவனது குரலும், பாவமும் மிகவும் நன்றாக இருக்கின்றன. இவனைக் குரல் சார்ந்த பணியிலேயே ஈடுபடுத்துங்கள்" என்று அறிவுறுத்தினார்.
பண்ணிசைப் பயிற்சி
அதன்படி சாரங்கபாணி, திருக்கடவூர் தேவாரப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். சாரங்கபாணி அப்பாடசாலையில் குருகுலவாசமாக ஐந்தாண்டுகள் தேவாரப் பாடல்களை முழுமையாகக் கற்றார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனப் பாடசாலைக்கு மேற்கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் தேவாரம் பயின்றார். அங்கு ஆசிரியராக இருந்த தருமபுரம் ப. சுவாமிநாதன், சாரங்கபாணியை வழிநடத்தினார். தருமபுரம் ஆதினத்தில் முறைப்படி சைவத்தைத் தழுவிய சாரங்கபாணி, 'சுவாமிநாதன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
ஓதுவார் சுவாமிநாதன்
சுவாமிநாதன், தருமபுரம் ஆதினத்தில் ஓதுவாராகப் பணியாற்றினார். பின் இளையாற்றங்குடி கைலாசநாதர் ஆலயத்தில் சில ஆண்டுகள் ஓதுவாராகப் பணிபுரிந்தார். பின் குன்றக்குடி அடிகளாரின் அழைப்பின் பேரில் குன்றக்குடி ஆதினத்தில், ஓதுவார் மூர்த்தியாக நியமனம் செய்யப்பட்டார். பின் தேவக்கோட்டை சிவாலயத்தில் ஓதுவாராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, லால்குடிக்கு அருகிலுள்ள திருமங்கலம் ஆலயத்தில் ஓதுவாராகப் பணியாற்றினார்.

திருத்தணி சுவாமிநாதன்
1975-ம் ஆண்டில், இந்து சமய அறநிலையத் துறை, புகழ்பெற்ற திருத்தணி ஆலயத்திற்கு ஓர் ஓதுவார் மூர்த்தி தேவை என விளம்பரம் செய்தது. அப்போது ஓதுவாரகப் பனிரெண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த சுவாமிநாதன், அதற்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 750 ரூபாய் மாத ஊதியத்தில் திருத்தணியில் ஆலய ஓதுவாராகப் பணியில் சேர்ந்தார். 26 ஆண்டுகள் பணியாற்றி, 'திருத்தணி ஓதுவார் சுவாமிநாதன்' எனும் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுப் பணி ஓய்வு பெற்றார்.
பணி ஓய்வுக்குப் பின் சுவாமிநாத ஓதுவார், சிதம்பரத்தில் உள்ள வி.எஸ். டிரஸ்ட் பாடசாலையில் திருமுறை ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது தருமபுரம் ஆதினப் பாடசாலை மூலம் மாணவர்களுக்குத் திருமுறைகளையும், 63 நாயன்மார்களின் பெருமை, பாடல் பெற்ற சிவத்தலங்களின் வரலாறு மற்றும் தேவாரப் பாடல்களின் முக்கியத்துவம் போன்றவற்றையும் கற்பித்து வருகிறார். சுவாமிநாதனிடம் பயின்ற மாணவர்களில் பலர் சுவாமிமலை, திருநள்ளாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட தலங்களில் ஓதுவார்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
தனி வாழ்க்கை
சுவாமிநாதன் மணமானவர். மனைவி: கமலா. மகள்கள்: அபிராமி, மங்கையர்க்கரசி.
இசை, ஆன்மிகப் பணிகள்
திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார், திருப்பனந்தாள் மற்றும் தருமபுரம் ஆதீனங்களின் தலைவர்களுடன் இணைந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணப்பட்டார். தேவாரத்தையும் திருவாசகத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தார். நவராத்திரி போன்ற விழாக்காலங்களில் தனது குழுவினருடன் முழுமையான தேவார இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஒரு பதிகத்தைத் தொடங்கும் முன், 'பாடல் பெற்ற தலம்' குறித்த விளக்கத்தை எளிமையாக விளக்கிப் பாடத் தொடங்குவது சுவாமிநாத ஓதுவாரின் வழக்கம். அவரது குரலில் ஒலிக்கும் திருவாசகப் பாடல்கள், உலகளாவிய தமிழிசை ரசிகர்களின் வரவேற்பை அதிக அளவில் பெற்றன.
அமைப்புச் செயல்பாடுகள்
சுவாமிநாத ஓதுவார், 1970-களில், திருவையாறில் நடைபெறும் 'அப்பர் கயிலாயக் காட்சி' நிகழ்வில் பாடத் தொடங்கி, தொடர்ந்து இன்றளவும், அவ்விழாவில் ஆண்டுதோறும் கலந்துகொண்டு திருநாவுக்கரசரின் பாடல்களைப் பாடி வருகிறார். சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றம் புதிதாகக் கட்டித் திறக்கப்பட்டு பிரதமர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடியிடம் செங்கோல் அளிக்கப்பட்டபோது திருமுறை ஓதிய ஓதுவார்களில் சுவாமிநாதனும் ஒருவர். கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பிரதமர் வந்தபோது 40 ஓதுவார்களை ஒருங்கிணைத்து ஒரு மணி நேரம் தேவாரம், திருவாசகம் பாடினார்.
வானொலி
சுவாமிநாத ஓதுவார், அகில இந்திய வானொலியின் ஏ கிரேடு இசைக் கலைஞராகப் பணியாற்றினார்.
இசைத்தகடு
சுவாமிநாத ஓதுவார், தேவாரப் பாடல்கள் அடங்கிய 50 குறுந்தகடுகளை வெளியிட்டார். யூ ட்யூப் போன்ற தளங்களில் சுவாமிநாத ஓதுவார் குழுவினரின் பண்ணிசைப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விருதுகள்
- தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருது
- திருமுறை கலாநிதி
- பண்ணிசை பேரறிஞர்
- திருமுறை ரத்னா
- இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ
மதிப்பீடு
திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார், திருமுறைகளை, தனது கம்பீரமான குரலில், திருமுறைகளுக்குரிய பண்ணிசையில் பாடி மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 9,000 திருமுறைப் பாடல்களை மனப்பாடமாகப் பாடும் அரிய திறன் பெற்றவர். நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர். தற்போதும் மரபு வழி மாறாது தேவாரத் திருமுறைப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் மூத்த மற்றும் குறிப்பிடத்தகுந்த ஓதுவார் மூர்த்திகளுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- விகடன் தளம் கட்டுரை
- சக்தி விகடன் கட்டுரை
- தென்றல் இதழ் கட்டுரை
- ஸ்வராஜ்யா இதழ் கட்டுரை
- தி இந்து இதழ் கட்டுரை
- ஹிந்து போஸ்ட்.இன் தளம்
- தி இந்தியன் ப்ளாக் வலைத்தளம்
- திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார் தேவாரப் பதிகங்கள், சைவம் தளம்
- திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார் பாடல்கள், யூ ட்யூப் தளம்
- திருத்தணி என் சுவாமிநாதன் ஓதுவார் பண்ணிசை, யூ ட்யூப் தளம்
- திருமுறை இன்னிசை, யூ ட்யூப் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Aug-2026, 09:47:34 IST