தமிழ் ஒளி





தமிழ் ஒளி (கவிஞர் தமிழ்ஒளி; சி. விஜயரங்கம்; பட்டுராசு) (செப்டம்பர் 21, 1924 - மார்ச் 29, 1965) கவிஞர், எழுத்தாளர், கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுங்காப்பியம், நாடகம் எனப் பல நூல்களைப் படைத்தார். பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர். தமிழில் பொதுவுடைமைக் கருத்துக்களை முன்வைத்துப் பாடிய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.
பிறப்பு கல்வி
தமிழ்ஒளி தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் போ.சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்கு 21 செப்டெம்பர் 1924-ல் பிறந்தார். விஜயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர். பட்டுராசு என்னும் செல்லப்பெயரும் உண்டு. தொடக்கக் கல்வியைப் புதுச்சேரி முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். கரந்தை செந்தமிழ் கல்லூரியில் தமிழில் புலவர் பட்டம் பெற்றார்.
அரசியல்

தமிழ் ஒளி கவிஞர் பாரதிதாசனின் அணுக்க மாணவர். பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னனின் தோழர். மன்னர்மன்னனுடன் திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டார். 1940-ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார். இறுதிவரை கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராக நீடித்தார். ஜெயகாந்தன் தமிழ் ஒளியின் இலக்கியத்தோழர், இருவரும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டனர். ஆர்.கே. கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) ஆகியோருடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில் தமிழ் ஒளி பற்றிய நினைவுகள் உள்ளன. பூவை.எஸ்.ஆறுமுகம் இவருடைய இலக்கியத்தோழர்.
தலித்தியம்
தமிழ் ஒளி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், ஆகவே அவர் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அவமதிப்புக்குள்ளானதாகவும், அதைப்பற்றி பாரதிதாசன் புலவர் பொன்.மீனாட்சிசுந்தரனாருக்கு புகார் செய்ததாகவும் ஆய்வாளர் சீமான் இளையராஜா குறிப்பிடுகிறார். தமிழில் தலித் இலக்கியம் உருவாவதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் ஒளியை தலித் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ள முடியும். தலித் பெண்ணை காவியநாயகியாக ஆக்கி அவர் எழுதிய வீராயி என்னும் குறுங்காவியம் அவ்வகையில் ஒரு முதற்காலகட்டப் படைப்பு.
இதழியல்
- தமிழ் ஒளி 'முன்னணி', 'புதுமை இலக்கியம்', 'சாட்டை' போன்ற இதழ்களில் பணியாற்றினார்.
- ஜனயுகம் என்னும் இதழை ஆசிரியராக இருந்து நடத்தினார்.
அமைப்புப்பணிகள்
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1949-ல் தமிழ் ஒளி செயல்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழ் ஒளி பாரதிதாசனின் முரசு இதழில் கவிதைகள் எழுதினார். தமிழ் ஒளி என்ற பெயரை அப்போது சூட்டிக்கொண்டார். பாரதிதாசனின் பாண்டியன்பரிசு என்னும் காவியத்தின் கைப்பிரதியை தமிழ் ஒளி தான் செம்பிரதியெடுத்தார். பாரதிதாசனின் பரிந்துரைக் கடிதத்துடன் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ்க்கல்லூரியில் புலவர் கோ.சி. பெரியசாமியின் மாணவராகச் சேர்ந்தார். கல்லூரிக் காலத்திலேயே கவிஞராக புகழ்பெற்றிருந்தார்.
தமிழ் ஒளி விஜயரங்கம், சிவிர, விஜயன், பாணன், ஜெயங்கொண்டான் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
கவிதை
தமிழ் ஒளி மரபுக்கவிதைகளை எழுதியவர். பாரதி, பாரதிதாசனின் வழிவந்த நவீன மரபுக்கவிதைகள் அவை. ஐநூறுக்கும் மேல் கவிதைகளை எழுதியுள்ளார்.
நடை
அன்று தொட்டிருள் வீழ்ந்து விட்டதும் அகில நங்கைதன துன்பம் கெட்டதும்
தொன்றுதொட்டுறை நோய்கள் பட்டதும் தோன்று செங்கொடிஎங்கும் நட்டதும்
இன்று திங்களைச் சென்று தொட்டதும் இசை பெறும் இலெனின் கண்எனச் சுடர்
நின்றெறிந் திடும் நீள் விளக்கமாம் நிகர்அரும் பொதுவுடமை ஆற்றலால்!
புனைகதைகள்
தமிழ் ஒளி முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிக்கதைகளும் எழுதியுள்ளார். மூன்று குறுநாவல்களையும் படைத்துள்ளார்.
நாடகம்
கரந்தையில் படிக்கும் காலகட்டத்தில் தமிழ் ஒளி சிற்பியின் கனவு என்னும் நாடகத்தை எழுதினார்.
தமிழ் ஒளி இருபது ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார்.
கட்டுரைகள்
ஏராளமான இலக்கிய விமர்சனங்களையும் கட்டுரைகளையும் எழுதிய தமிழ் ஒளி இரண்டு இலக்கிய ஆய்வுநூல்களை எழுதினார்.
சிறார் இலக்கியம்
தமிழ் ஒளி சிறார் இலக்கியத்துக்கு முதன்மையான பங்களிப்பாற்றியவர். 60 குழந்தைப்பாடல்களை எழுதினார். அவை 'பாடுபாப்பா' என்னும் தொகுப்பாக வெளிவந்தன. குழந்தைகளுக்கான 105 குட்டிக்கதைகளையும் எழுதியுள்ளார். அவை வனமலர்கள் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தன.
குறுங்காவியங்கள்

தமிழ் ஒளி 1947-ம் ஆண்டில் மூன்று குறுங்காவியங்களை எழுதினார். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல் ஆகியவை அவருடைய தொடக்ககாலக் கவிதைகள்.
சிலப்பதிகார வேனிற்காதை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இசை நாடக நூலாக எழுந்தது 'விதியோ, வீணையோ?'
மாதவி காவியத்தில் கோவலன் கூற்றாக வரும் ஒரு வெண்பாவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் 'கண்ணப்பன் கிளிகள்'. இது உருவகக் காப்பியம். ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கை வரை'யில் உள்ள 'பிரபா' என்ற கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட குறுங்காப்பியம் 'கோசலக்குமரி'.
ஒன்பது குறுங்காவியங்களை எழுதியுள்ள தமிழ் ஒளியின் காவியங்களில் சிலப்பதிகாரத்தின் மாதவியை கதைநாயகியாகக் கொண்ட மாதவி காவியம் சிறந்தது என்று கருதப்படுகிறது.
இலக்கிய விவாதங்கள்
மரபுக்கவிதை, தமிழ்க்கவிதையின் யாப்பு ஆகியவற்றின் தேவை பற்றி புதுமைப்பித்தன் கூறிய கருத்துக்களை முன்வைத்து தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய கருத்துக்களை மறுத்து தமிழ் ஒளி எழுதினார். கவிதையில் யாப்பை முன்வைத்தவராயினும் புதுக்கவிதையை ஏற்பவராகவே தமிழ் ஒளி திகழ்ந்தார்.
திரைப்படம்
தமிழ் ஒளி எழுதிய "சிற்பியின் கனவு" கதையே "வணங்காமுடி" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது என்றும் ஆனால் அவரிடமிருந்து அக்கதை அனுமதியின்றி திருடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1957-ல் வெளிவந்த வணங்காமுடி திரைப்படத்தின் கதை அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மறைவு
சென்னையில் கடும் வறுமையில் இருந்த தமிழ் ஒளி இறுதியில் புதுச்சேரி திரும்பி எட்டு மாத காலம் வாழ்ந்தார். அங்கே அவர் உளநோயால் அவதிப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தமிழ் ஒளி மார்ச் 29, 1969-ல் தனது 41-வது வயதில் மறைந்தார்.
தொகுப்பு
தமிழ் ஒளியின் மறைவுக்குப் பின் அவருடைய படைப்புகள் கிடைக்காமலாகிவிட்ட நிலையில் செ.து. சஞ்சீவி அவருடைய ஆக்கங்களை தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.
ஏற்புகள்
வாழ்ந்த காலகட்டத்தில் தமிழ் ஒளி எந்த ஏற்பையும் விருதையும் பெறவில்லை.
சிலை
2024-ல் அவருடைய நூற்றாண்டை ஒட்டி தஞ்சை தமிழ்ப்பல்கலையில் அவருக்கு ஒரு மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டது. பிப்ரவரி 27, 2024-ல் தஞ்சை பல்கலையில் அவருடைய சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
வாழ்க்கை வரலாறு
செ.து.சஞ்சீவி தமிழ் ஒளியின் வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அகாதெமிக்காக எழுதினார்.
ஆவணப்படம்
பாரதி செல்வா இயக்கத்தில் தமிழ் ஒளி பற்றிய ஆவணப்படம் 2024-ல் எடுக்கபட்டது.
தமிழ் ஒளி கட்டுரைப்போட்டி
தமிழ் ஒளி நூற்றாண்டை ஒட்டி ரூபாய் ஐம்பது லட்சம் வைப்புநிதியாக தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டு அதன் வட்டியில் வரும் நிதியில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான தமிழ் ஒளி நினைவுக் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆய்வுநூல்
- தமிழ் ஒளி படைப்புலகம் - கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள், இ.சுந்தரமூர்த்தி & ச. செந்தில்நாதன்
படைப்புகள்
நாடகங்கள்
- சிற்பியின் கனவு
- கவிஞர் விழா
காவியங்கள்
- கவிஞனின் காதல்
- நிலைபெற்ற நிலை
- வீராயி
- மேதின ரோஜா
- விதியோ வீணையோ?
- மாதவி காவியம்
- கண்ணப்பன் கிளிகள்
- புத்தர் பிறந்தார்
- கோசலைக்குமரி
கட்டுரைகள்
- சிலப்பதிகாரம் காவியமா நாடகமா
- திருக்குறளும் கடவுளும்
- தமிழர் சமுதாயம்
- தமிழும் சமஸ்கிருதமும்
கவிதைகள்
- மேதினமே வருக
- நீ எந்தக் கட்சியில்?
- தமிழ்ஒளியின் கவிதைகள்
- மக்கள் கவிதைகள்
சிறார் இலக்கியம்
- பாடுபாப்பா
- வனமலர்கள்
கதைகள்
- அறிவூட்டும் 100 அற்புதக் கதைகள்
- குருவிப்பட்டி
- உயிரோவியங்கள்
- மாமாவின் சாகசம் (குறுநாவல்)
உசாத்துணை
- தமிழ் ஒளி இணையப்பக்கம்
- தமிழ் ஒளி நூற்றாண்டு இணையப்பக்கம்
- தமிழ் ஒளி- தினமணி செய்தி முனைவர் சீமான் இளையராஜா
- தமிழ் ஒளியின் சிறார் இலக்கியம்- கீற்று கட்டுரை
- தமிழ் ஒளியின் கருத்துலகம் கண குறிஞ்சி
- தவிர்க்கமுடியாத கவிஞர் தமிழ் ஒளி
- தமிழ் ஒளிக்கோர் ஒளிவிளக்கு
- பாட்டாளிகளைப் பாடிய தமிழ் ஒளி
- தமிழ் ஒளி புறக்கணிக்கப்பட்டது ஏன் வீ.அரசு
- அரசியல் வானில் மின்னும் பொதுவுடமை கவிஞர் தமிழ் ஒளி - முனைவர் எ. பாவலன்
- ஒடுக்கப்பட்டோர் உயரப் பாடுபட்ட கவிஞர் தமிழ் ஒளி!
- நாம் மறந்து விட்ட உலக மகா கவிஞர் தமிழ் ஒளி நினைவு நாள் !
- தமிழ் ஒளி 90 விழாக்கொண்டாட்டம் செய்தி
- தமிழ் ஒளி நூற்றாண்டு கொண்டாட்டம் காணொளி
- தமிழ் ஒளி- பெருமாள் முருகன் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2025, 22:06:35 IST