under review

ஜைன ராமாயணம்

From Tamil Wiki
மகாவீரரின் சமவஸரணத்திற்கு (பார்க்க: சமணமும் ராமாயணமும்)

ஜைன ராமாயணம், சமண சமயத்தை முதன்மையாக கொண்டும், ராமாயணக் கதையை மூலமாக கொண்டும் எழுதப்பட்ட நூல்கள். பொ.யு 4-ம் நூற்றாண்டு தொடங்கி 15-ம் நூற்றாண்டு வரை நான்கு முக்கிய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் ரவிசேனாச்சாரியார் சமஸ்கிருத மொழியில் எழுதிய பத்ம புராணம் முதன்மையானது.

ஆசிரியர்

ராமன் நகர் நீங்குதல்

ஜைன ராமாயணத்தின் முதன்மை நூலான பத்ம புராணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் ரவிசேனாச்சாரியார். இவர் சமண சங்கத்தின் ஆசிரியராக இருந்தவர். இந்நூல் பொ.யு. 12 -15 நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என இராமாயண கதைகளை முழுதும் ஆராய்ந்த அ.அ. மணவாளன் குறிப்பிடுகிறார். ஆனால் இந்நூல் எழுதப்பட்ட காலம் 7-ம் நூற்றாண்டு (பொ.யு. 678) என சமண நூல்கள் குறிப்பிடுகின்றனர். ஆய்வாளர் அ.கா. பெருமாளும் தன் இராமன் எத்தனை இராமனடி நூலில் இக்காலத்தையே பத்ம புராணம் நூல் எழுதப்பட்ட காலமாகக் குறிப்பிடுகிறார். 'பத்ம சரிதம்' என்னும் நூல் பொ.யு. 4-ம் நூற்றாண்டு தொடங்கி சமண ராமாயணமாக பல பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

பத்ம புராணம்

ரவிசேனாச்சாரியார் பத்ம புராணத்தை காவிய வடிவில் 18023 சுலோகங்களாக எழுதினார். சுலோக வடிவில் இருந்ததை உரைநடையில் பண்டிதர் கௌயத்ராம் இந்தியில் மொழிபெயர்த்தார் (பொ.யு. 1760). கஜபதி ஜெயன் இந்நூலின் சுருக்க வடிவத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

கதைச் சுருக்கம்

பத்ம புராணம் மூல ராமாயணத்தின் அதே கதை வடிவும், சமண சமயத்தின் நெறிகளும் ஒருங்கே கொண்ட காவியம். இராமன் கைகேயியின் வரத்தால் காட்டுக்குச் செல்வது தொடங்கி ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பி சீதையை காட்டுக்கு அனுப்புவது வரை மூல கதையே நிகழ்கிறது. சீதையின் அக்னிப் பிரவேசத்திற்கு பின் இராமன் அவளை ஏற்றுக் கொள்கிறான். சீதை அவனைத் துறந்து தன் கூந்தலைப் பிய்த்தெடுத்து துறவியாகிறாள்.

பத்ம புராணம் ரிஷபதேவர் வீடுபேறு அடைவதிலிருந்து தொடங்குகிறது. அவர் தீர்த்தங்கரான பல ஆண்டுகளுக்கு பின் அஜிதநாதர் அயோத்தியை ஆண்டார். அவர் மகன் சகரன் அயோத்தியை ஆளும் போது பரத கண்டத்தின் வடக்கே வித்யாதர இனத்தவரை பூர்ணகன் ஆள்கிறான். பாதாளலங்கை அரசனாக சுமாலியின் மகன் இரத்தின சரவான் அரசாள்கிறான். சரவானுக்கும், கேசகிக்கும் பிறந்தவன் இராவணன். சரவான் சமண அறநூல் கற்றவன். இராவணனையும் அவ்வாறே வளர்க்கிறான். இலங்கையை இராவணனின் தாய் வழி தாயாதிகள் ஆண்டு வந்தனர். அவர்களை தன் தாய் சொல்லிற்காக வென்று இராவணன் இலங்கை அரசனாகிறான்.

சூர்யராஜனின் மகனான வாலியிடம் தன்னை வணங்கி, அவன் தங்கையை தனக்கு மணமுடிக்குமாறு இராவணன் தூதனுப்புகிறான். தங்கையைத் தருவதில் சம்மதம் ஆனால் அருகன் அன்றி பிரிதொருவரை வணங்க மாட்டேன் என வாலி சொன்ன பதிலால் கோபம் கொண்டு இராவணன் அவன் மீது படையெடுத்து வருகிறான். இராவணன் தன் படையுடன் வருவதறிந்த வாலி தன் தம்பி சுக்ரீவனுக்கு பட்டம் சூட்டிவிட்டு துறவியாகிறான். சுக்ரீவன் தன் தங்கை மண்டோதரியை இராவணனுக்கு மணமுடித்து வைக்கிறான். இராவணன் வான் வழியாக இலங்கைக்குச் சென்ற போது வாலி கைலை மலையில் தவம் செய்துக் கொண்டிருந்ததால் அவர்களின் பயண வழிக்கு இடையூறாகிறான். இராவணன் அவன் தவத்தைக் கலைக்க கையிலை மலையை தூக்கி அசைக்கிறான். வாலி தன் சுண்டு விரலால் மலையை நிலை நிறுத்தியதும் இராவணன் அவனை வணங்கி இலங்கை மீள்கிறான். இலங்கையில் பல சமண கோவிலைகளை இராவணன் கட்டுகிறான்.

இராவணன் இந்திரனை வெல்லும் ஒரு கதையும் வருகிறது. இந்திர நாட்டு பிராமணர்கள் மிருகங்களை யாகக் குண்டத்தில் பலியிட்டுக் கொண்டிருப்பதை அவ்வழியாக சென்ற நாரதர் பார்க்கிறார். நாரதர் அவர்களை தடுத்து நிறுத்திய போது அவர்களால் துரத்தியடிக்கப்படுகிறார். நாரதர் நேராக வந்து இராவணனிடம் முறையிடவே இராவணன் தன் படைகளுடன், சுக்ரீவனின் படை, மற்றும் வித்யாதர இனத்தை ஆண்ட பூர்ணகன் படையுடனும் இந்திர நாட்டு போருக்குச் சென்று இந்திரனை வென்று மீள்கிறான். பின் சகசரரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திரனை இராவணன் விடுவிக்கிறான். இராவணனிடம் தோற்றதால் இனி அரசனாக நான் தகுதியற்றவன் என இந்திரன் மயிர் அகற்றி துறவியாகிறான்.

இராவணன் தசரதனையும், ஜனகரையும் கொல்லத் திட்டமிடும் ஒரு கதையும் வருகிறது. இதனை விபீஷணன் முன்னின்று நடத்துகிறான். ஜோசியன் ஒருவன் தசரதனுக்கு பிறக்கும் மூத்த மகனும், ஜனகருக்கு பிறக்கும் மகளும் இராவணனின் இறப்பிற்கு காரணமாவார்கள் எனக் கூறுகிறான். இதனைக் கேட்ட இராவணன் தசரதனையும், ஜனகனையும் கொல்லத் திட்டமிடுகிறான். தன் அண்ணனைக் கொல்ல காரணமாக இருக்கும் இருவரையும் விபீஷணன் தன் கையாலே அழிப்பேன் என சபதம் ஏற்கிறான். இச்செய்தியை ஒற்றர்கள் மூலம் தசரனும், ஜனகனும் அறிகின்றனர். தசரதன் தன் அமைச்சனிடம் இதிலிருந்து மீளும் உபாயம் கேட்கிறான். அமைச்சர் தசரதனை தனக்கு உடல்நலமில்லை என நாட்டிற்கு அறிவிக்கும் படி வேண்டுகிறார். தசரதன் அந்த அறிவிப்பை வெளியிட்டதும் அமைச்சர் தசரதன் போல ஒரு பதுமை செய்து அரியாசனத்தில் அமர வைக்கிறார். விபீஷணன் வந்த போது அரியாசனத்தில் இருந்த தசரதனைக்(பதுமையை) கொன்று மீள்கிறான். ஜனகனும் அதே போல் செய்ய இருவரும் இறந்ததாக தன் அண்ணன் இராவணனிடம் அறிவிக்கிறான்.

தசரதன் மாறுவேடத்தில் வாழ்ந்த போது கௌதுக மங்கலம் நாட்டின் அரசர் தன் மகள் கேகயிக்கு சுயம்வரம் நிகழ்த்துகிறார். விழாவில் மாறுவேடத்திலிருந்த தசரதனும் கலந்துக் கொள்கிறான். தசரதனை அறிந்த கேகயி அவனுக்கு மாலையிடுகிறாள். ஒரு வழிப்போகனுக்கு மாலையிட்டதால் பிற நாட்டு அரசர்கள் அவர்களைக் கொல்ல வருகின்றனர். கேகயி தேரோட்ட தசரதன் பிற அரசர்களை வென்று அயோத்தி மீள்கிறான். கேகயியின் தேரோட்டும் சாதூரியத்தால் இருவரும் மீண்டதால் கேகயிக்கு ஒரு வரம் தருவதாகவும் வாக்களிக்கிறான் தசரதன். கேகயி பரதன் நாட்டை ஆள வேண்டும் என்னும் வரத்தை இராமனின் பட்டாபிஷேகத்தன்று கேட்கிறாள். மீதிக் கதை மூல ராமாயண கதைப்படியே நிகழ்கிறது. இராவணன் இறுதியில் மனம் திருந்தி இராமனைக் கொல்லாமல் சிறை பிடித்து சீதையுடன் இணைக்க எண்ணுகிறான். இராமனால் கொல்லப்படுகிறான்.

கதாபாத்திரங்கள்

வால்மீகி ராமாயணத்தில் வரும் மந்தரை, அகலிகை, சபரி மற்றும் தங்க மான்[1] ஆகிய புகழ்பெற்ற கதாபாத்திரங்களும் அவர்தம் நிகழ்வுகளும் சமண ராமாயணத்தில் முற்றிலுமாக விடுபட்டுள்ளன. மேலும், கைகேயி ராமனை காட்டுக்கு அனுப்பவில்லை; பரதன் துறவறம் பூணுவதைத் தடுத்து, அவனுக்கு உலகியல் ஆசையை உண்டாக்கவே கைகேயி அவனுக்காக அரசபதவி கோருகிறாள். ராமன் தனது சுய விருப்பத்தின் பேரிலேயே காட்டுக்குச் செல்கிறான். 14 ஆண்டுகள் என்ற காலக்கெடுவும் இதில் இல்லை.

கும்பகர்ணன்

வால்மீகி ராமாயணத்தில் கும்பகர்ணன் பல மாதங்கள் தொடர்ந்து தூங்குபவனாகவும், உணவுப் பிரியனாகவும் காட்டப்படுகிறான். ஆனால், சமண ராமாயணத்தில் கும்பகர்ணன் மிகுந்த மத நல்லிணக்கமும், ஆன்மீக ஈடுபாடும் கொண்ட, தனது பெரும்பாலான நேரத்தை பிரார்த்தனைகளில் செலவிடுபவனாக சித்தரிக்கப்படுகிறான். மேலும், இராவணன் மேகவாஹன வம்சத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடப்படுகிறான்.

பாமண்டலன்

வால்மீகி ராமாயணத்தில் சீதைக்கு உடன்பிறப்புகள் யாரும் கிடையாது. ஆனால், சமண ராமாயணத்தில் சீதைக்கு பாமண்டலன் என்ற இரட்டைச் சகோதரன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சீதை பூமியிலிருந்து கண்டெடுக்கப்படாமல், ஜனகருக்கும் விதேஹிக்கும் இயற்கையான முறையில் மகளாகப் பிறக்கிறாள்.

வித்யாதரர் வம்சம்

சமண மரபில் வானரங்கள் மற்றும் ராக்ஷசர்கள் (அரக்கர்கள்) ஆகிய இரு பிரிவினருமே 'வித்யாதர'[2] வம்சத்தின் கிளைகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பிறப்பால் மனிதர்களே என்றாலும், இவர்களிடம் வித்யாக்கள்[3] இருந்ததால், இவர்களால் ஆகாயத்தில் பறக்க முடிந்தது உள்ளிட்ட பல அமானுஷ்ய சக்திகளைப் பெற்றிருந்தனர் என்று விளக்கப்படுகிறது.

சலாகா புருஷர்கள்

சமணர்களின் பிரபஞ்ச வரலாற்றின்படி, ராமாயணத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள் 20-வது தீர்த்தங்கரரான முனிசுவ்ரதநாதரின்[4] காலத்தில் வாழ்ந்தவர்கள். இதில் ராமர் 8-வது பலதேவனாகவும், லட்சுமணன் 8-வது வாசுதேவனாகவும், இராவணன் 8-வது பிரதி-வாசுதேவனாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமண நெறி

இந்நூல் அருக நெறியின் உயிர் கொல்லாமை, பிற மனை நோக்காமை ஆகியவற்றை வலியுறுத்தும் சமய நூலாகவும், அதே நேரத்தில் மூல கதையிலுள்ள காவியத் தன்மையைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. அவை பின்வரும் மூன்று புள்ளியில் மூல வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுகின்றன.

  • வால்மீகி ராமாயணத்தில் ராமன் இராவணனைக் கொல்கிறான். ஆனால், சமண மரபில் இராவணன் ஒரு 'பிரதி-வாசுதேவன்' என வகைப்படுத்தப்படுவதால், அவன் 'வாசுதேவன்' என்ற தகுதியைக் கொண்ட லட்சுமணனால் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என்ற விதியின்படி லட்சுமணனே அவனைக் கொல்கிறான்.
  • வால்மீகி ராமாயணத்தில் சுக்ரீவன், அனுமன் உள்ளிட்ட வானரங்கள் குரங்கு உருவமும் மனிதப் பண்புகளும் கொண்டவர்களாகக் கூறப்படுகின்றனர். ஆனால், சமண நூல்களின்படி அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களது கொடியில் குரங்குச் சின்னத்தைக் கொண்டிருந்ததால் 'வானரங்கள்' என்று அழைக்கப்பட்டனர் என்றும் விளக்கப்படுகிறது.
  • வால்மீகி ராமாயணத்தில் இராவணன் இலங்கையை ஆளும் அரக்கர் குலத் தலைவனாக (அசுரன்) சித்தரிக்கப்படுகிறான். ஆனால், சமண ஆசிரியர்கள் இவர்களை அரக்கர்களாகக் கருதாமல், ரக்ஷஸ் என்ற மன்னனின் வழித்தோன்றல்களான சாதாரண மனிதர்கள் என்றே குறிப்பிடுகின்றனர்.

சமணமும் ராமாயணமும்

சமணர்களின் மிகப்பழைய சுவேதாம்பர சமய நூல்களில் ராமரின் கதை இல்லை. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் விமலசூரி என்பவரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பௌம சரிதம்[5] என்ற காவியமே சமண இராமாயணத்தின் மிகப்பழமையான நூல். கிருஷ்ணரின் சகோதரரும் ஒன்பதாவது பலதேவனுமான பலராமரிடமிருந்து பிரித்துக் காட்டுவதற்காக, சமண மரபில் முதன்மைக் கதாபாத்திரமான ராமருக்கு பத்மன்[6] என்று பெயரிடப்பட்டது. இதனால் இக்கதைக்கு 'பத்ம-சரிதம்'[7] என்று பெயர் வந்தது. மகாவீரரின் சமவஸரணத்திற்கு (பல்சமயப் பேரவை) வந்த ராஜகிருக மன்னன் சிரேணிகன் கேட்ட கேள்விக்கு, மகாவீரரின் முதன்மை சீடர் ராமரின் கதையை விளக்குவதாக இந்நூல் தொடங்குகிறது. விமலசூரியின் இந்த பதிவே பிற்காலத்தில் ஹேமசந்திரர் எழுதிய 'திரிஷஷ்டி-சலாகா-புருஷ-சரித்திரம்' உள்ளிட்ட பல சமண இராமாயணங்களுக்கு அடிப்படை மாதிரியாக அமைந்தது.

திருமணங்கள்

சமண மரபில் முதன்மைக் கதாபாத்திரங்களின் திருமணங்கள் பற்றிய எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு உள்ளது. இக்கதையின்படி ராமர், லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் முறையே 8,000, 16,000 மற்றும் 1,000 மனைவிகளைக் கொண்டிருந்ததாக பத்ம புராணம் குறிப்பிடுகிறது. வால்மீகியின் ஏகபத்தினி விரதனான ராமரின் சித்தரிப்பிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

சீதையின் பிறப்பு

சமண சமயத்தின் இரு வேறு பிரிவுகளிடையே உள்ள வேறுபாடு சீதையின் பிறப்பு கதையிலும் காணப்படுகிறது.

  • சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த விமலசூரியின் கூற்றுப்படி, சீதை ஜனக மன்னருக்கும் விதேஹி ராணிக்கும் இயற்கையாகப் பிறந்த மகள்[8].
  • திகம்பர பிரிவைச் சேர்ந்த குணபத்திரரின் 'உத்தரபுராண' கூற்றுப்படி, சீதை ராவணனுக்கும் மண்டோதரிக்கும் மகளாகப் பிறக்கிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு வரும் என்ற ஜோதிடக் கணிப்பால், ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு மிதிலையில் புதைக்கப்பட, அதை ஜனகர் கண்டெடுத்து வளர்க்கிறார்.
அஹிம்சை துறவறம்
  • ராமன் தனது வாழ்நாளில் எந்தவொரு உயிரையும் கொன்றதில்லை (இராவணனைக் கொல்வது லட்சுமணனே). போருக்குப் பிறகு உலக வாழ்க்கையைத் துறந்து சமண முனிவராகும் ராமன், இறுதியில் முக்தி அடைகிறான்.
  • சமண கர்ம விதிகளின்படி, போரில் உயிர்களைக் கொன்ற காரணத்தினால் லட்சுமணனும், இராவணனும் தற்காலிகமாக நரகத்தை அடைகிறார்கள். எனினும், பிற்காலத்தில் அவர்கள் தங்களது கர்ம வினைகள் நீங்கி முக்தி அடைவார்கள் என்றும், குறிப்பாக இராவணன் எதிர்காலப் பிரபஞ்ச சுழற்சியில் ஒரு தீர்த்தங்கரராக பிறப்பான் என்றும் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன.
  • இலங்கையிலிருந்து மீண்ட பிறகு வால்மீகி ராமாயணத்தைப் போலவே இங்கும் சீதை தீக்குளிக்கிறாள். ஆனால், அவளது கற்பை நிரூபித்த பின்னும் அவளை ராமர் காட்டுக்கு அனுப்ப, அங்கு அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அதன் பிறகு ராமர் அவளை மீண்டும் அரண்மனைக்கு அழைக்கிறார். ஆனால், உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்த சீதை, ராமருடன் செல்ல மறுத்து சமணப் பெண் துறவியாக மாறி, கடுமையான தவம் புரிந்து இறுதியில் சொர்க்கத்தை அடைகிறாள்.

பிற நூல்கள்

சமண சமய ராமாயணங்கள் பிற மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. பாகத மொழியில் பொ.யு. 4-5-ம் நூற்றாண்டில் விமல சூரி எழுதிய நூல் பௌம சரிதம்[5]. சுவயம் என்பவர் சும்ரம்ச மொழியில் 'பௌமசரியூ' என்ற தலைப்பில் ஒரு ராமாயணம் எழுதியுள்ளார். சங்கதாசர் பிராகிருத மொழியில் வாசுதேவ ஹிண்டி என்னும் ராமாயண நூல் எழுதியுள்ளார். உத்தர புராணம் என்னும் நூல் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் குணபத்திரரால் இயற்றப்பட்டது.

சமண ராமாயணங்கள்

சமண சமயம் கதைகள் சார்ந்த பிற ராமாயணங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

நூல் ஆசிரியர் காலம் மொழி
1 பௌம சரிதம் விமல சூரி பொ.யு. 4-5 பிராகிருதம்
2 வாசுதேவ ஹிண்டி சங்கதாசர் பொ.யு. 5 பிராகிருதம்
3 உத்தர புராணம் குணபத்திரர் பொ.யு. 9 பிராகிருதம்
4 பத்ம புராணம் ரவிசேனர் பொ.யு. 12 - 15 சமஸ்கிருதம்
5 திரிஷஷ்டி-சலாகா-புருஷ-சரித்திரம் ஹேமசந்திரர் பொ.யு. 12 சமஸ்கிருதம்

உசாத்துணை

  • இராம காதையும் இராமாயணங்களும் , அ.அ. மணவாளன்
  • இராமன் எத்தனை இராமனடி, அ.கா. பெருமாள்

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. ↑ மாரீசன்
  2. ↑ வித்யாதரர் - Vidyā-dhara
  3. ↑ vidyās - அமானுஷ்ய ஆற்றல்கள்
  4. ↑ Munisuvratanātha
  5. ↑ 5.0 5.1 சமஸ்கிருதத்தில்: பத்ம சரிதம்
  6. ↑ தாமரை
  7. ↑ ராமனின் செயல்கள்
  8. ↑ பூமிக்கு அடியில் பெட்டியில் கண்டெடுக்கப்படவில்லை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2026, 20:57:44 IST