under review

ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki

ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை (1892-) தமிழறிஞர், கோயிற் கலை, கோயில் கட்டிடகலை ஆய்வாளர். சோழர் கால கோயிற் பணிகள் குறித்தும், பழனி தல வரலாறு குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். சோழர் - பாண்டியர் கால கட்டடக்கலை, சங்க கால இலக்கியங்கள் குறித்து ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழிலக்கிய வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சோமசுந்தரம் பிள்ளை சைவ அறிஞரான ஜே.எம். நல்லுச்சாமிப் பிள்ளையின் இளைய சகோதரர்.

பிறப்பு, கல்வி

ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை 1892 ஆம் ஆண்டு திருச்சியில் மாணிக்கம்பிள்ளைக்கும் செல்லத்தம்மைக்கும் பிறந்தார். சோமசுந்தரம் பிள்ளை புகழ்பெற்ற சைவ அறிஞரான ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளையின் இளைய சகோதரர். சோமசுந்தரம் பிள்ளையின் முன்னோர்கள் எப்போதும் காஞ்சி குடிவகையினர் (ஜனவி குலத்தினர்) என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள காஞ்சி காமாட்சி கோவிலின் மரபுவழி உரிமை அவர்களுக்கு உரியது. சோமசுந்தரம் பிள்ளை கலையில் இளங்கலை பட்டமும் (பி.ஏ), சட்டத்துறையில் இளங்கலைப் பட்டமும் (பி.எல்) பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையில் பணியாற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாறு, இலக்கிய ஆய்வு நூல்கள் வெளிவர காரணமானவர். பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற தமிழறிஞர்களுடன் இணைந்து பல நூல்களுக்கு வழிகாட்டியாகவும், பதிப்பாசிரியராகவும் விளங்கினார். இந்து சமய அறநிலையத்துறையின் உயரதிகாரியாகவும் பணியாற்றினார். இதன் காரணமாக தமிழகத்தின் முக்கிய கோவில்களில் கருவறை, கல்வெட்டு, பழைய ஓலைச்சுவடி ஆகியவற்றை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது.

ஆய்வு பணி

கோயிற்கலை

தஞ்சை பெரிய கோவில், தில்லை நடராஜர் கோவில், ஶ்ரீரங்கம், திருச்செந்தூர், பழநி ஆகிய புகழ்பெற்ற திருத்தலங்களின் வரலாற்றை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி ஆவணப்படுத்தியவர். அக்கோவில்களின் சிற்பக்கலை நுணுக்கங்களையும், கல்வெட்டுகளையும் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்.

இலக்கிய ஆய்வு

சங்க இலக்கிய பாடல்கள், பத்துப்பாட்டு நூல்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட முன்னோடிகளில் ஒருவர்.

பதிப்பு

ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை ஜே.எம். நல்லுச்சாமிப் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை தன் சொந்த செலவில் சென்னை அண்ணாமலை நகரில் வெளியிட்டார். நூல் ('The Life and History of J.M.Nalluswami Pillai - the centenary memorial to a champion of Saiva siddhanta' - 1965).

மதிப்பீடு

ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை நூல்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Bulletin of SOAS, The Journal of Asian Studies போன்ற சர்வதேச இதழ்களில் ஆய்வாளர்கள் மதிப்புரை எழுதியுள்ளனர். செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவெலபில் (Kamil Zvelebil), ஆர்.இ. ஆஷர் (R.E. Asher) போன்றவர்களால் விரிவான மதிப்புரை எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழ்பெயர்த்து உலகளாவ கொண்டுச் சென்றதல் இவரது பங்கு முதன்மையானது.

நூல்கள்

ஆங்கில நூல்கள்
  • The Great Temple at Tanjavore (1935)
  • Palani, The Sacred hill of Muruga (1941)
  • A Plan for Tiruchendur (1946)
  • Five Tamil Idylls of pathup-pattu (1947)
  • Tiruchendur - the Seashore temple of Subrahmanyam (1948)
  • The University's Environs and Chidambaram (1955)
  • Two Thousand years of Tamil Literature. An Anthology with studies and translation (1959)
  • An Island Shrine of Sriranganatha (1965)
  • A history of Tamil Literature with texts and translations from the earliest times to 600 A.D (1968)
  • Siva-Nataraja, the cosmic dancer in Chid-ambaram (1970)
தமிழ் நூல்கள்
  • இராஜராஜேசுவரமும், பிற சோழர் கோயில்களும் (1938)
  • தஞ்சைத் திருக்கோயில்கள் (1939)
  • சோழர் கோயில் பணிகள் (முதல் பதிப்பு - 1939)
  • பழனித்தல வரலாறு (1944)
  • பழநித்தல வரலாறும், திருக்கோயில் வழிபாடும் (1948)
  • தில்லைச் சிற்றம்பலவன் கோயில் (1956)
  • ஸ்ரீரங்கநாதர் தல வரலாறு (1959)
  • சிற்பமும் கலை வாழ்வும் (1962)
  • பாண்டியர் பெருமாட்சி (1968)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jun-2026, 18:48:42 IST