under review

செம்பியனார்

From Tamil Wiki

செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கிள்ளி, வளவன் என்ற சொற்களை போலவே செம்பியன் என்ற சொல்லும் சோழர்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே செம்பியனார் சோழ மரபில் வந்தவர் என ஊகிக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

செம்பியனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 102-வது பாடலாக அமைந்துள்ளது. காதல் மிகுதியினால் தினைப்புனத்தை காவல் காக்கும் தலைவி கிளியை தலைவனின் நாட்டுக்கு தூது செல்லும்படி உரைக்கும் குறிஞ்சி திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கூர்மையான வளைந்த செந்நிற வாயினை உடைய கிளியை திணை வயலில் தானியங்களை உண்ண வருகையில் விரட்டுவர்.
  • மரம் முழுக்க காய்கள் கொண்ட பலாமரங்கள் நிற்கும் மலைநாட்டை ஆள்பவன் தலைவன்.

பாடல் நடை

நற்றிணை - 102

குறிஞ்சி திணை

  • துறை: காமமிக்க கழிபடர்கிளவி.

 
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்ச லோம்பி ஆர்பதங் கொண்டு
நின்குறை முடித்த பின்றை என்குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு
நின்கிளை மருங்கிற் சேறி யாயின்
அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2024, 09:56:04 IST