under review

சென்னிமலை தண்டபாணி

From Tamil Wiki
சென்னிமலை தண்டபாணி

சென்னிமலை தண்டபாணி (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1958) கவிஞர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். தமிழக அரசின் வணிகவரித் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றினார். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைகூ, சென்ரியூ, லிமரைக்கூ எனப் பல கவிதை வடிவங்களில் எழுதினார். சிறார் நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரை நூல்கள் எனப் பல நூல்களை எழுதினார். சிற்பி இலக்கிய விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னிமலை தண்டபாணி, ஆகஸ்ட் 28, 1958 அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில், செ. இரா. நடராசன் - வள்ளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர்களுள் ஒருவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். தண்டபாணி, ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது, இளம்பிள்ளை வாதத்தால் கால்கள் செயலிழந்தன. ஆறு வயதில் தந்தையை இழந்தார். மூத்த சகோதரரின் ஆதரவில் வளர்ந்தார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பு பயின்று பட்டம் பெற்றார். வணிகவரி உதவி ஆணையராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார்.

சென்னிமலை தண்டபாணி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

சென்னிமலை தண்டபாணி ரவீந்திரநாத் தாகூர், சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன் ஆகியோரைத் தனது முன்னோடிக் கவிஞர்களாகக் கொண்டார். சென்னிமலை தண்டபாணியின் முதல் கவிதை, 1976-ல் 'நித்திலக்குவியல்' என்ற இதழில் பிரசுரமானது. தொடர்ந்து பல இலக்கியச் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதினார். முதல் சிறுகதை 1977-ல் மாலை மலர் நாளிதழில் பிரசுரமானது. கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல படைப்புகளை எழுதினார்.

கவிதை நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறார்களுக்கான படைப்புகள் என 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். சென்னிமலை தண்டபாணி எழுதிய 'பண்படுத்தும் எண்ணங்கள்' நூல், கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்ட வகுப்பில் பாட நூலாக வைக்கப்பட்டது. வானொலியிலும் இவரது கவிதைகள், நாடகங்கள் ஒலிபரப்பாகின.

இதழியல்

சென்னிமலை தண்டபாணி பொம்மி சிறார் மாத இதழின் ஆசிரியர் குழுவிலும், பேசும் புதியசக்தி இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.

கவிஞர் சென்னிமலை தண்டபாணி

விருதுகள்

ஆவணம்

சென்னிமலை தண்டபாணியின் வாழ்க்கைக் குறிப்பை, 'சென்னிமலை தண்டபாணி வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பில் பேராசிரியை நாகரத்தினம் எழுதினார். இந்நூலை 2015-ல், கலைஞன் பதிப்பகம், தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

சென்னிமலை தண்டபாணி மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைகூ, சென்ரியூ, லிமரைக்கூ எனக் கவிதையின் பல தளங்களிலும் எழுதினார். சிறார்களுக்கும் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் பல நூல்களை எழுதினார். குறிப்பிடத்தகுந்த கவிஞர்களுள் ஒருவராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • கொஞ்சம் ஹைகூ கொஞ்சும் சென்ரியூ
  • உன் கண்களும் என் கவிதைகளும்
  • சருகுத் தோட்டம்
  • நட்சத்திர வெளி
  • என் வீட்டுத் திண்ணை
  • வசந்தம் எனது வாசலில்
  • ஊமைக் கொலுசு
  • பேசும் மவுனம்
  • உனக்காக உதிர்ந்த கஜல்கள்
  • படகு நிறையப் பூக்கள்
  • கிண்ணத்தில் நிலாச்சோறு
  • ஞானகானம்
நாடகம்
  • யாத்திரை
  • ஞானத்தைத் தேடி
  • வெளிச்சத்தின் பாதை
  • கங்கைக் கரையினிலே
வாழ்வியல் நூல்கள்
  • பண்படுத்தும் எண்ணங்கள்
  • மகிழ்ச்சியான வாழ்க்கை
  • ஒப்பற்ற துறவிகள்
சிறார் நூல்கள்
  • பீர்பால் கதைகள்
  • பரமார்த்தகுரு கதைகள்
  • சித்திரக் குள்ளன் செய்த வேலை
  • தேங்காய் இளவரசரும் வாழைப்பழ மந்திரியும்
  • இளவரசி அனிகா வள்ளி

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:21:25 IST