செங்கண்ணனார்
செங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்களில் ஒரு பாடல் அகநானூறிலும் ஒரு பாடல் நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
செங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
செங்கண்ணனார் பாடிய பாடல்கள் அகநானூறிலும்(39), நற்றிணையிலும்(122) இடம்பெற்றுள்ளன. அகநானூறு 39 -ம் பாடல் பொருளீட்டி வீடு திரும்பிய பின் தலைவனும் தலைவியும் கடந்து சென்ற காலத்தை நினைத்து மகிழ்வதாக மருதத் திணையில் அமைந்துள்ளது. நற்றிணைப் பாடல் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான காதல் உறவு தலைவியின் குடும்பத்தினருக்கு தெரிந்துவிட்டப்படியால் தலைவி சிறை வைக்கப்பட்டுள்ளாள். சிறைப்புறத்தில் இருக்கும் தலைவியை சந்திக்க வரும் தலைவனுக்கு கேட்கும்படியாக தலைவியிடம் தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
அகநானூறு - 39
- பொருள் இல்லை என்று பழித்த நிலை நீங்கியது.
- தலைவன் பொருளீட்டச் சென்ற காட்டுவழியானது காய்ந்த மூங்கில்கள் ஒன்றுடனொன்று உரசி கிளம்பும் தீப்பொறியால் உதிர்ந்த சருகுகள் தீப்பற்றிக் கொள்ளும் தன்மையுடையது. அங்கிருந்த புல்லிலும் அத்தீயானது பரவி காற்று வேகத்தில் சூறாவளியாக மாறும் தன்மையுடையது.
- காடானது யானைகளை துரத்தி வேட்டையாடும் புலிகளை கொண்டது.
- அப்படிப்பட்ட நேரங்களில் அவ்வழி செல்லும் நிலவணிகர் விரைவாக ஓடிச்சென்று குகைகளின் மறைவில் பதுங்கிக் கொள்வர்.
- ஊடலால் தன் மேல் ஏற்பட்ட சினத்தைப் போக்கும் விதமாக தலைவர், தலைவியின் புருவங்களையும் நெற்றியையும் நீவி கூந்தலைக் கோதிவிடுவர்.
- உவமை: தலைவியின் பற்கள் அரிசியை போல வெண்ணிற முட்களாக தோற்றம் அளித்தன. அவளது கூந்தலின் மணம் கள்ளினை ஒத்திருந்தது. தாவி பாய்ந்து ஓடிய கிளைமானுக்கு ஒப்பானவள் தலைவி. காட்டுதீக்கு பயந்து நிலவணிகர் புலி துரத்த அஞ்சி ஓடிய யானையை போன்றிருந்தனர்.
நற்றிணை - 122
- பெரிய மலையின் பக்கத்தில் உள்ள நிலத்தில் எங்களது வீட்டார் விதைத்த கரிய தண்டினையுடைய செம்மையாக வளர்ந்த தினைக்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன.
- மலைசூழ்ந்த காட்டின் அருகே உள்ள நிலத்தில் அமைந்துள்ள வீட்டை சுற்றி மல்லிகை கொடிகள் அரும்பு கொண்டு மலர்ந்துள்ளன.
- நள்ளிரவின் நடு யாமத்து இருளில் பெரும் மின்னொளியுடன் அச்சத்தை உண்டாக்கும் இடி முழங்குகிறது. மலைசூழ்ந்த கானகத்து அமைந்த ஊரினான தலைவனின் வருகைக்காக தலைவி காத்து கொண்டிருக்கிறாள்.
- அவளது அன்னை மறைவிடத்தே அமர்ந்து கொடுமை நிறைந்த முகத்தாளாய் மகளை காவல் காக்கிறாள்.
- இனியும் தலைவனுடன் செல்ல வேண்டுகிறாயா என தோழி வினவுகிறாள்.
- உவமை: தலைவியின் கண்களுக்கு நீல நிற பூக்களுக்கு ஒப்புமையாக கூறப்பட்டது.
பாடல் நடை
அகநானூறு - 39
- திணை: பாலை துறை: பொரண் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்
துள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின்
முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்த நொதமல் மொழியனின்
ஆய்நல மறப்பெனா
.............................................................................................
கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி
அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்
டின்னகை யினைய மாகவும் எம்வயின்
ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றே கற்ற உலமரல்
போற்றோ யாகலின் புலத்தியால் எம்மே.
நற்றிணை - 122
- திணை: குறிஞ்சி துறை: சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங்காற் செந்தினை கடியும் உண்டன
கல்லக வரைப்பில் கான்கெழு சிறுகுடி
மல்லன் மருங்கின் மௌவலும் அரும்பின
நகையுரும் உரறும் நாம நள்ளிருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்றென
நின்று மதிவல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூஏய் கண்ணியது பொருந்து மாறே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- அகநானூறு - 39:Tamilvu
- நற்றிணை - 122:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2025, 22:14:45 IST