சால்பு முல்லை
சால்பு முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர்.அரசன், வணிகர், வேளாளர், சான்றோர் உள்ளிட்டோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது.
சான்றோரது மேம்பாட்டைக் கூறுவது சால்பு முல்லை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் விண்ணைத் தொடும் மலை போல் உயர்ந்த சான்றோர்களது அமைதியைச் சொல்லல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வான் தோயும் மலை அன்ன
சான்றோர்தம் சால்பு உரைத்தன்று(கொளு 8.31 )
வெண்பா
உறைஆர் விசும்பின் உவாமதி போல்
நிறையா நிலவுதல் அன்றிக் - குறையாத
வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ
சங்கம் போல் வான்மையார் சால்பு (185)
பொருள்: சங்கினைப் போன்று தூய தன்மையைக் கொண்ட சான்றோரது வாழ்க்கை முழுநிலவைப் போல என்றும் நிறைந்து நிலைபெறுமே அல்லாமல், கடல் போன்று மிகுந்த பொருள் கிடைத்தாலும் மாறாது.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jul-2025, 10:26:33 IST