கே.பி. காமாட்சி

கே.பி. காமாட்சி (கே.பி. காமாட்சிசுந்தரம்; கே.பி. காமாக்ஷிசுந்தரம்; கவி காமாட்சி) (1900 - 1956) நாடக, திரைப்பட நடிகர், கவிஞர், திரைப்பாடலாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
கே.பி. காமாட்சிசுந்தரம் என்னும் கே.பி. காமாட்சி, மதுரையைப் பூர்விகமாகக் கொண்டவர். 1900-த்தில் பிறந்தார். பள்ளிக்குச் சென்று பயிலவில்லை. செங்கல்பட்டை அடுத்துள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியின் பெயர் பாமா.
நாடக வாழ்க்கை
கே.பி. காமாட்சி, எம். கந்தசாமி முதலியார் ஆசிரியராக இருந்த 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில், தனது ஏழாம் வயதில் சேர்ந்தார். நாடக நுணுக்கங்களைக் கற்றுப் பல்வேறு வேடங்களில் நடித்தார். ராஜபார்ட் நடிகராகவும், முன்னணிக் கதாநாயகர் ஆகவும் ஆனார். தமது 22 வயதிற்குள் 1000 மேடைகளில் நடித்து முடித்திருந்தார்.
எம்.ஜி. சக்ரபாணி, எம்.ஜி. ராமச்சந்திரன் இருவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கப் பரிந்துரைத்தார். நடிகரும், பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானம், கே.பி. காமாட்சியின் சகோதரர் வழி உறவினர்.
திரை வாழ்க்கை
நடிகர்
கே.பி. காமாட்சி பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மு. கருணாநிதி வசனம் எழுதி, சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' திரைப்படத்தில் பூசாரியாக நடித்தவர் கே.பி. காமாட்சிதான். பட்சி ராஜா ஃபில்ம்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தில் அப்துல் என்ற தலைமைக் கொள்ளைக்காரராக நடித்தார்.
கே.பி. காமாட்சி நடித்த திரைப்படங்கள்
- சந்திரமோகனா (அல்லது) சமூகத் தொண்டு (1936)
- பதிபக்தி (1936)
- பம்பாய் மெயில் (1939)
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
- இழந்த காதல் - சந்திரகிரி (1944)
- இதய கீதம் (1950)
பாடலாசிரியர்
கேபி. காமாட்சி 'பம்பாய் மெயில்' திரைப்படத்திற்கு முழுப் பாடல்களையும் எழுதி, திரைப் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். கே.பி. காமாட்சியும், இசையமைப்பாளர் சுதர்சனமும் ஏவி.எம். நிறுவனத்தில் சில ஆண்டுகள் இணைந்து பணியாற்றினர். ஏவி.எம். தயாரித்த பல படங்களுக்கு கே.பி. காமாட்சி பாடல்கள் எழுதினார்.
கே.பி. காமாட்சி, 37 படங்களில் சுமார் 120 பாடல்கள் எழுதினார். கே.பி. காமாட்சியின் மறைவுக்குப் பின், அவர் எழுதிய பாடல் மு.வ.வின் கதையான 'பெற்ற மனம்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.
கே.பி. காமாட்சி எழுதிய சில திரைப்பாடல்கள்
- உன் கண் உன்னை ஏமாற்றினால்...
- பாடு பட்டாலே நெசமா...
- மனம்மேவும் ஆசைமோகனா..
- என்ன உலகமடா ஏழைக்கே இது நரகமடா...
- ஓ ரசிக்கும் சீமானே வா
- புதுப் பெண்ணின் மனத்தைத் தொட்டுப் போறவரே...
- சிற்பி செதுக்காத பொற்சிலையே...
- தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு...
- சின்னச் சின்ன வீடு கட்டி
கே.பி.காமாட்சி பாடல்கள் எழுதிய திரைப்படங்கள்
- பம்பாய் மெயில் (1939)
- அலிபாபாவும் 40 திருடர்களும் (1941)
- நாம் இருவர் (1947)
- பைத்தியக்காரன் (1947)
- நல்லதம்பி (1949)
- வாழ்க்கை (1949)
- இன்பவல்லி (1949)
- திகம்பர சாமியார் (1950)
- மருதநாட்டு இளவரசி (1950)
- இதய கீதம் (1950)
- கிருஷ்ண விஜயம் (1950)
- சிங்காரி (1951)
- ஓர் இரவு (1951)
- மணமகள் (1951)
- சர்வாதிகாரி (1951)
- ஆத்ம சாந்தி (1952)
- பெண் (1952)
- வேலைக்காரன் (1952)
- பராசக்தி (1952)
- சத்தியசோதனை (1953)
- உலகம் (1953)
- கண்கள் (1953)
- எதிர்பாராதது (1953)
- துளிவிஷம் (1954)
- விளையாட்டுப் பொம்மை (1954)
- எல்லாம் இன்ப மயம் (1955)
- செல்லப் பிள்ளை (1955)
- நல்ல தங்கை (1955)
- மேனகா (1955)
- கோமதியின் காதலன் (1955)
- உலகம் பலவிதம் (1955)
- ஆசை (1956)
- நான்பெற்ற செல்வம் (1956)
- அமர தீபம் (1956)
- நானே ராஜா (1956)
- குல தெய்வம் (1956)
- பெற்ற மனம் (1960)
விருது
- 'இந்தியன் எடிபோலோ' பட்டம்
மறைவு
கே.பி. காமாட்சி 1956-ல் காலமானார்.
மதிப்பீடு
கே.பி. காமாட்சி, நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பல்வேறு வேடங்களேற்று நடித்தார். திரைப்பாடலாசிரியராகப் புகழ்பெற்றார். மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் தேர்ந்தவராக அறியப்பட்டார். கண்ணதாசனை விடவும் கவிஞர் காமாட்சிசுந்தரம், தம் மனதில் கூடுதல் தாக்கம் கொண்டிருந்தார் என்று இசையமைப்பாளர் சுதர்சனம் குறிப்பிட்டார். "பாட்டெழுதுவதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு நிகரானவர் காமாட்சி" என்று ஏவி.மெய்யப்பச் செட்டியார் குறிப்பிட்டார்.
கே.பி. காமாட்சி, தமிழ்த் திரையுலகின் முன்னோடிப் பாடலாசிரியர்களுள் ஒருவர். நாடக, திரைப்பட நடிகர், திரைப்பாடலாசிரியர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- கே.பி. காமாட்சி, குவிகம் இதழ் கட்டுரை
- பராசக்தி பூசாரி, நியூஸ் 18 தளம்
- கே.பி. காமாட்சி, அன்று கண்ட முகம் தளக் கட்டுரை
- கே.பி. காமாட்சி கட்டுரை, ஏகாந்தன் தளம்
- திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு, ஜூன் 2016.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jan-2026, 18:55:50 IST