காளிதாசர்

காளிதாசர் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) சமஸ்கிருதக் கவிஞர், நாடக ஆசிரியர். பண்டைய இந்தியாவின் முதன்மைக் கவிகளுள் ஒருவர். குப்த மன்னர் விக்கிரமாதித்யரின் அரசவையில் ஒன்பது நவரத்தினங்களில் ஒருவராக இருந்தார். தம் காலகட்டக் கவிஞர்களுள் முதன்மையானவர். மொழியழகும், இயற்கை வர்ணனையும் இவர் படைப்புகளில் சிறப்பானவை. இவரின் பெரும்பான்மையான படைப்புகள் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து மறுவுருவாக்கம் செய்யப்பட்டவை.
வாழ்க்கைக் குறிப்பு
காளிதாசர் மத்திய இந்தியாவின் மால்வா பகுதியிலுள்ள உஜ்ஜெயினியில் பொ.யு 5-ம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் காலத்தில் குப்தர்கள் ஆட்சி செய்தனர். அரசர் சந்திரகுப்த விக்கிரமாதித்யரின் (இரண்டாம் சந்திரகுப்தர்) அரசவைக் கவிஞர்களில் ஒன்பது நவரத்தினங்களில் ஒருவராக இருந்தார். பிராமணர். பிற தகவல்கள் இல்லை.
கல்வெட்டு
- மன்சூர் கல்வெட்டுக்களில் (பொ.யு. 473) காளிதாசர் பற்றிய குறிப்பு உள்ளது.
- எய்ஹோல்(Aihole) கல்வெட்டு, ஹனம்கொண்டா (Hanamkonda) கல்வெட்டுக்களில் காளிதாசர் பற்றிய குறிப்பு உள்ளது.
இலக்கிய வாழ்க்கை
காளிதாசரின் பெரும்பான்மையான படைப்புகள் இந்திய புராணக் கதைகளான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து மறுஆக்கம் செய்யப்பட்டது. அபிஞான சாகுந்தலம், விக்கிரமோவர்சியம், மாளவிகாக்கினிமித்திரம், இரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், ருதுசம்ஹாரம் ஆகியவை இவர் எழுதிய படைப்புகள். இவையாவும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
- அபிஞான சாகுந்தலம் காளிதாசர் எழுதிய முதல் நாடகம். சாகுந்தலை, அரசர் துஷ்யந்தருக்கு இடைப்பட்ட காதலைப் பற்றியது. சகுந்தலையையும், குழந்தையையும் துஷ்யந்தன் மறுதலிப்பதும், அவர்கள் சொர்க்கத்தில் சேர்வதுமான கதையைக் கூறுகிறது.
- விக்கிரமோவர்சியம் காளிதாசர் எழுதிய இரண்டாவது நாடகம். புரூரவனுக்கும், தேவலோகத்தின் நடன மங்கையான ஊர்வசிக்கும் இடைப்பட்ட காதலைப் பற்றியது. கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டதால் இந்திரன் ஊர்வசியை புரூரவனுக்கு கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த ஊர்வசியை புரூரவன் பிரிந்து வருந்தி மீண்டும் மீள்வது பற்றிய நாடகமாக விக்கிரமோவர்சியம் உள்ளது. அரசர் விக்கிரமாதித்யரைக் குறிக்கும் பெயரில் விக்கிரமோவர்சியத்தை எழுதியிருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
- மாளவிகாக்கினிமித்திரம் காளிதாசர் எழுதிய மூன்றாவது நாடகம். மாளவப் பகுதியிலுள்ள விதிஷாவை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அக்னிமித்திரன் என்ற அரசனுக்கும், அவனின் அரசியின் பணிப்பெண்ணான மாளவிகாவிற்கும் இடைப்பட்ட காதலைப் பற்றியது.
- மேகதூதம் என்பது லிரிக்கல் கவிதை வகைமையைச் சேர்ந்தது. இயற்கை அழகு வர்ணிப்பு விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது.
- குமாரசம்பவம் காவியக் கவிதை வகைமையைச் சேர்ந்தது. சிவன், பார்வதியின் புதல்வனான குமாரனின்(முருகன்) பிறப்பை எடுத்துரைப்பது. சிவனின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தவமிருந்து சிவனை அடைதல் ஆகியவையும் சொல்லப்பட்டது.
- ரகுவம்சம் கவிதை வகைமையைச் சேர்ந்தது. ராமனின் முன்னோர்களான திலீபன் துவங்கி ரகு, அஜன், ராமன், லவன், குசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது. 1564 கவிதைகளைக் கொண்டது. அது 19 சர்க்கங்களாக பிரிக்கப்பட்டது.
- ருதுசம்ஹாரம் செய்யுள் கவிதை வகைமையைச் சேர்ந்தது. ஆறு சரகங்களைக் கொண்டது. ஆறு சரகங்களில் ஆறு பருவங்களைப் பற்றிய செய்தி வருகிறது. மாறிவரும் பருவங்களுக்கு ஏற்ப காதலர்கள் வினையாற்றுவதைப் பற்றிய கவிதைகள் உள்ளன.
சிறப்பு
- சீக்கிய குருவான குருகோபிந்த் சிங் தொகுத்த 'தசம் கிரந்த்' நூலில் காளிதாசரை பிரம்ம அவதாரங்களில் ஒருவராக குறிப்பிடுகிறார்.
- இந்திய சித்திரக்கலையில் (மிதிலா ஓவியம்) காளிதாசரின் தாக்கம் உள்ளது. ரவிவர்மா உள்ளிட்ட இந்திய ஓவியக்கலைஞர்கள் காளிதாசரின் காவியங்களிலிருந்து நிகழ்வுகளை வரைந்தனர்.
மதிப்பீடு
சமஸ்கிருத மொழியின் செவ்வியல் கவிஞர்களில் ஒருவர். இவர் காலத்தில் வாழ்ந்த பாஸர், சூத்ரகர், விசாகதத்தர் ஆகியோரை விடவும் முதன்மையான கவியாகக் கருதப்பட்டார். இவரின் மொழியழகும், கடினமான கதையையும் கூட லிரிக்கல் கவிதை வடிவில் அழகுடன் எடுத்துரைத்ததும் இவரின் தனித்தன்மையாக அமைந்தது.
விவாதம்
- ஒன்றுக்கும் மேற்பட்ட காளிதாசர்கள் இருந்திருக்கலாம் என எம். ஸ்ரீநிவாசாச்சாரியார் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரி ஆகிய அறிஞர்கள் கருதினர். காளிதாசர் என்ற பத்மகுப்தர், காளிதாசர் என்ற யமககவி, நவ காளிதாசர், அக்பரிய காளிதாசர், காளிதாசர் 8, அபினவ காளிதாசர் என்ற மாதவர் என ஆறு காளிதாசர்கள் இருந்ததாக ஸ்ரீநிவாசாச்சாரியார் பட்டியலிட்டார்.
- வள்ளல் தன்மை கொண்ட அரசரை விக்ரமாதித்யர் எனவும், அரசவைக் கவிஞரைக் காளிதாசர் என்று குறிப்பது வழக்கமாக இருந்ததாக கிருஷ்ணமூர்த்தி என்ற அறிஞர் கருதினார். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இருந்திருக்கலாம் என்று அவர் கருதினார்.
- நாடகங்கள் எழுதிய காளிதாசர் ஒருவர் எனவும், கவிதைகள் எழுதிய காளிதாசர் வேறொருவர் எனவும் சில அறிஞர்கள் கருதினர்.
- 'ஜாதக சந்திரிகை' நூலும் காளிதாசரால் இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கருதினர்.
மறைவு
காளிதாசர் பொ.யு. 5-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் காலமானார்.
நினைவு
- காளிதாசரின் நினைவு ஆஷாட மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
- மத்தியப் பிரதேச அரசு கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு காளிதாஸ் சம்மான் விருது அளிக்கிறது.
இவரைப் பற்றிய நூல்கள்
- The birth-place of Kalidasa - லட்சுமி தார் கல்லா (1926)
நூல் பட்டியல்
- அபிஞான சாகுந்தலம்
- விக்கிரமோவர்சியம்
- மாளவிகாக்கினிமித்திரம்
- மேகதூதம்
- குமாரசம்பவம்
- ரகுவம்சம்
- ருது சம்ஹாரம்
மொழிபெயர்ப்புகள்
- Abhijnana Sakuntalam Of Kalidasa - M.R.Kale
- Abhijnana Sakuntalam - CSR Sastri
- Sakuntala - Monier Williams
- Sakuntala - JG Jennings
- Kalidasa's Sakuntala - Richard Pischel
- Malavikagnimitram of Kalidasa - KP Parab
- Malavikagnimitram - CH Tawney
- Vikramorvasiyam - SP Pandit
- Vikramorvasiyam - EB Cowell
- Kumarasambhava Cantos I-VII - MR Kale
- Kumarasambhavam - RTH Griffith
- Raghuvamsa - De Lacy Johnston
- Cantos 1 to 10 with Mallinatha's commentary and Eng Translation by MR Kale
- Meghasandesa with Dakshinavartanatha's Tika - TG Sastri
- Meghaduta - HH Wilson (1814)
- Works of Kalidasa - William Jones (1901)
இணைப்புகள்
- Complete Works of Kalidasa
- Meghdoot : a Kalidas masterpiece painted by Ramgopal Vijaivargiya
- காளிதாசரின் உலக மகா காவியங்கள் - தமிழில் புலவர் நாராயண வேலுப்பிள்ளை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2025, 19:35:36 IST