கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பூதஞ்சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கருவூர் கோசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர். கரூவூர் பூச்சாத்தனார், கருவூர் பூதனார் மகனார் கொற்றனார் என்று பிற பெயர்களிலும் அறியப்படுபவர்.
இலக்கிய வாழ்க்கை
கருவூர் பூதஞ்சாத்தனார் பாடிய ஒரு பாடல் அகநானூறில் 50-வது பாடலாக அமைந்துள்ளது. பரத்தையர் இல்லம் சென்ற தலைவனிடம், தலைவியின் பிரிவு துயரை எடுத்துக்கூறும்படி தோழி பாணனிடம் உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- கடலில் அலை ஓய்ந்தாலும் தோணிகள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தாலும் கரையிலேயே பெரிய மீன்கள் ஒதுங்கி நின்றாலும் ஊர் பெண்களின் பழிப்பு பேச்சினாலும் பாதிக்கப்படாது அணிகள் இழைக்கப்பெற்ற தேரில் நம் இல்லத்திற்கு வந்து பகலிலும் நீங்காது இருப்பான் தலைவன்.
- உவமை: பனைமரத்தில் வாழும் அன்றில் பறவை இணை, ஒன்று பிரிந்த பின் பனைமரத்தில் தங்கியிருந்த பெண் பறவை துயரத்தால் வாடி இருப்பது போல தலைவியும் பிறரறியாது வாடுகிறாள்.
பாடல் நடை
அகநானூறு - 50
நெய்தல் திணை துறை: தோழி பாணனுக்குச் சொல்லியது.
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
பகலும் நம்வயின் அகலானாகிப்
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ பாண! 'எல்லி
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Dec-2024, 07:13:41 IST