under review

கரும்பிள்ளைப் பூதனார்

From Tamil Wiki

கரும்பிள்ளைப் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று பரிபாடலில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கரும்பிள்ளைப் பூதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

கரும்பிள்ளைப் பூதனார் பாடிய பாடல்கள் பரிபாடலில் 10 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. போரிடும் பொருட்டு தன்னை பிரிந்து சென்ற தலைவனை எண்ணி தலைவி வாடுகிறாள். உரிய பருவ காலம் வந்த பிறகும் தலைவன் திரும்பி வராததால் தலைவியின் பொருட்டு தோழி பாணன் ஒருவனை தூதனுப்புகிறாள். போர்க்களத்தில் தலைவனின் பாசறைக்கண் சென்று வைகை ஆற்றுப்புனலாட்டு விழாவின் காட்சிகளை கூறி தலைவியுடன் வந்து கூடியிருக்கும்படி பாணன் ஒருவன் பாடுவதாக மருதத் திணையில் அமைந்துள்ளது. நல்லச்சுதனார் இப்பாடலுக்கு பாலையாழ் பண்ணில் இசையமைத்துள்ளார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

வைகை ஆற்றில் வெள்ளம் பெருகி வரும் காட்சி, புது வெள்ளத்தில் நீராட வருவோர் குறித்த சித்திரம், ஆற்றங்கரையை அடைந்த மக்களின் செயல், பருவ மகளிரின் நீச்சல் விளையாட்டுகள், மக்களுடன் வந்த யானைகளின் இயல்பு, நீர் விளையாட்டில் ஈடுபட்ட மகளிர் மற்றும் மைந்தரின் செயல், மைந்தர்கள் அன்னையருக்கு விளையாட்டு காட்டுதல், மாலை பொழுதில் வைகை ஆற்று வெள்ளத்தை வாழ்த்தி தங்கள் நிலங்களுக்கு வளத்தை அருளுமாறு வேண்டுதல் என்று எட்டு பகுதிகளாக வைகை ஆற்று புனலாட்டு விழா குறித்த சித்திரம் கிடைக்கிறது.

  • மலையில் மழை பெய்தமையால் வரும் வெள்ளம் அழிவை கொண்டு வருகிறது. கடல் நோக்கி செல்கிறது. செல்லும் வழியில் உள்ள நிலங்கள் அனைத்தையும் மணலைப் போர்வை போல் மூடி நிறைத்து செல்கிறது. வெள்ளத்தில் கணுக்கணுவான மூங்கில்கள், வாழை, மா இலைகள் என பலவும் அடித்து கொண்டு வந்து கரைகளில் ஒதுங்குகிறது.
  • வெள்ளப் புனலில் விளையாட கூட்டமாக மக்கள் புறப்பட்டுச் சென்றனர். காலில் அணிந்துகொள்ளும் தாளித நொய்நூல் என்பது காலின் பாதத்தில் அணியும் நூல் செருப்பு, மேகலை, ஏணிப்-படுகால் என்னும் உடைகளை இறுக்கமாகத் தாளிடும் பொத்தான் போட்டு உடுத்திக்கொண்டு, இரத்த நிறத்தில் அரக்குநீரை எக்கும் பீச்சுக்குழாய்கள், முத்து, நீரில் குழைத்த சாந்து போன்ற மூடி வைக்கப்பட்டுள்ள சிமிழ்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
  • ஆட்களை ஏற்ற மறுக்கும் பிடரிமயிர்க் குதிரைகள், பலர் அமரும் பெண்யானை அம்பாரிகள், உள்ளே அமரும் கூட்டுவண்டிகள் கோவேறு கழுதைகள், குதிரை வண்டிகள்,தண்டில் தூக்கிச் செல்லும் பல்லக்குகள் ஆகியவற்றில் பல்வேறு வகைகளில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு விரைந்து ஆற்றை நோக்கி சென்றனர்.
  • முதியவர்கள், இளையவர்கள், மொட்டுப் பருவத்தினர், பூக்கும் மலர் போன்ற பருவத்தினர், ஆண்கள், பெண்கள், இனிய தோற்றம் கொண்டோர், நரைமுடியும் கருமுடியும் கலந்திருக்கும் பருவத்தினர், முழுமையாக நரைத்த தலை கொண்டோர், பத்தினிப் பெண்டிர், பரத்தையர், ஆண் தோழர்கள், என பலவகை மக்களும் அதிரும் குரல் கொடுத்து, தாளம் போட்டு, ஆட்டக் கலைஞர் கற்றுத்தந்த நடை போட்டு மெல்ல மெல்லச் சென்றனர். ஊரே எதிர்கொள்வது போல ஆற்றங்கரையை அடைந்தனர்.
  • ஆற்றங்கரையில் நீரின் அழகை கண்டு ரசித்தும் கரைகளில் உள்ள மாடங்களில் உலவியும் தமது அழகை பிறர் பார்க்கும் வண்ணம் வெளிப்படுத்தியும் பலரும் பலவாறு வெள்ளத்தை எதிர்கொண்டு மகிழ்ச்சி கூச்சலிட்டனர்.
  • குதிரை, பெண் யானை ஆகிய விலங்குகள் மேலேறி மகிழ்ச்சியாக உலவி வந்தனர். சில இணையர் ஆற்று துருத்திக்கு சென்று காமம் கொண்டாடினார். வேறு சிலர் தம் இணையருடன் பகல் காலத்தில் ஊடி இரவுக்காலத்தில் கூடி இன்பம் தூய்த்தனர். காமம் தலைக்கேறிய சிலர் பாதுகாப்பாக திரையிடப்பட்டு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர்
  • மகளிரில் சிலர் தமது காதற் கணவனை கண்டடைந்து தேன் உண்ணும் வண்டு போல இன்ப பெருக்கில் மயங்கினர். பெண்யானை மேலேறி சிலர் ஆற்று வெள்ளத்தை அருகே பார்க்க காவலை மீறிச் சென்றனர். அது துறைமுக கப்பலை எதிர்க்கொள்ளும் சிறு நாவாயைப் போல் இருந்தது என்று ஒப்புமை கூறப்பட்டுள்ளது.
  • பெண் யானை மேல் ஏறி மகளிர் புனலாட்டு விழாவுக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அத்தகு பெண் யானை ஒன்று ஆண் யானை ஒன்றின் பால் விருப்பப்பட்டு நின்றதும் மாடத்தில் உள்ள புலிச்சின்னத்தை கண்டு அஞ்சி மதம் பிடித்து ஓடியது. அதன் மேல் அமர்ந்த மகளிர் பயத்தால் நடுங்கினர். பாகர்கள் அங்குசம் கொண்டு அந்த பெண்யானையின் மதத்தை அடக்கினர். அச்செயல் புயலில் சிக்கிய கப்பலை அதன் சுக்கானும் பிணைக்கயிறும் காப்பாற்றிய மாலுமியின் செயலை ஒத்திருந்தது என உவமை கூறப்பட்டு இப்படியொரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பேரியாழ் இசைக்கப்பட்டு ஆடலும் பாடலும் நடை பெறுவது வழக்கம். அதில் பங்கேற்ற மக்கள் தமது போதத்தை இழந்து கலை நிகழ்ச்சியில் ஒருவர் கைக்கோர்த்து ஒருவருடன் ஆடுவர்.
  • மன்னர்கள் தண்டனையை பணமாகவும் உடல் அடியாகவும் என இரு நிலையில் தருவர் என்ற செய்தியும் அச்செயல்முறையின் மேல் ஏற்பும் மறுப்புமான மனநிலை மக்களுக்கு இருந்தது என்ற செய்தியும் கிடைக்கிறது. மன்னர் வழங்கும் தண்டனையைப் போலவே கலை நிகழ்ச்சிகளும் மக்கள் மனதில் கலவையான உணர்ச்சிகளை எழுப்பியதாக உவமை கூறப்பட்டது.
  • காம பெருக்கில் காதலரை கொண்டு களிவெறி மக்கள் ஆடுவர். ஊர் அலருக்கு அஞ்சி முதலில் காம உணர்ச்சியை மறைத்து வைப்பர். அது மக்கள் தம் கண்களை சிவக்க வைத்து போதையேற்றும். கள் குடித்து தன்னிலை மறக்கையில் காமம் தன் கரை கடக்கும்.
  • புனல் நீரில் நீச்சல் போட்டி நிகழ்த்தி மகளிர் மகிழ்ச்சியில் திளைப்பர். விளையாட்டில் சோர்வுற்றபோது திமில் மீதேறி கரை சேர்ந்து தீ மூட்டி குளிர் காய்வர். இரவு பொழுதில் மூட்டிய தீ காடெல்லாம் பரவி ஒளிமிகச்செய்யும். மகளிர் தம் முலைகளில் பூசியிருக்கும் சாந்து குழம்பு தீயின் வெம்மையால் மணம் வீச தொடங்கும். அவர் முகம் முழுநிலவை போல் பிரகாசிக்கும். நறவு கள்ளை மொண்டு வள்ளைகளில் ஊற்றி அருந்துவர். கள் மகளிரின் கைகள் நாகம் என்றும் சிலர் நாகினிகள் என்றும் உவமித்து சிறப்பிக்கப்பட்டுள்ளனர். தீ மூட்டி குளிர் காயும் மகளிர் சிலருக்கு அவர்தம் தோழியர் குளிருக்கு இதமாக வெள்ளாடை போர்த்தி கூந்தலை பிழிந்து விடுவர்.
  • பூசிக்கொள்வதற்காக சிவந்த நிறமுள்ள குங்குமக் குழம்பு செய்தும், மணப்புகை ஊட்டுவதற்காக அகில் கட்டையைப் பிளந்தும் பல வகையான பாளிதப் பாற்சோறுகளைச் சமைத்தும் தெருவிலும் அறையிலும் அம்மிக் குழவியால் பாளிதச் சோற்றுக்கு வேண்டுவனவற்றை அரைத்தும் நத்தமீன், நள்ளிமீன், நடைகாட்டும் இறால்மீன், பெரிய அளவிலான வாளைமீன் ஆகிய வளர்ப்புக் குஞ்சுகளை வெள்ள அலையில் போட்டு "நன்கு விளைந்து பெருகுக" என்று வாழ்த்தியும் மக்கள் புனல் விழவினைக் கொண்டாடினார்.
  • உலகம் இல்லாதவரைப் பார்த்தால் ஏளனம் செய்யும். சிலர் அந்த இழிநிலை வருவதற்கு முன்பே நல்லனவற்றைச் செய்து பிறர் ஏளனம் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் உயர் பண்பினை பெற்றிருந்தனர் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • நீராடிய மகளிரின் கூந்தல் கழுவிய மணி போலப் பளபளப்பாக இருந்தது. அதன் பூமணத்தால் வண்டுகள் அந்தக் கூந்தலை மொய்த்தன என உவமை கூறப்பட்டது. அவர்கள் தம் மேனியில் துவர் என்னும் மணப்பொடிகளைம் பூசிக்கொண்டு மீண்டும் நீராடினர். அப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டும் அந்த எண்ணெயைப் போக்க இழைக்கும் துகள்களைத் தேய்த்துக்கொள்ளவும் செய்தனர்.
  • மகளிர் தாம் அணிந்திருந்த மாலை, சந்தனம், மன்மதச் சாந்து, அணிகலன்கள் ஆகியவற்றை ஆற்றுக்குச் சூட்டி அழகு பார்த்தனர். உண்ணாத நறவம் பொடித் துகள்களை வெள்ளத்துக்கு ஊட்டிவிட்டனர். அப்போது ஆற்று வெள்ளம் அந்த மகளிரைப் போலத் தோற்றமளித்தது. நீராடியதால் மகளிர் முகமும், முலைக் கண்ணும் மிகவும் சிவக்கும்படி நீரில் விளையாடினர். அப்போது அவர்களின் கண் வியப்புக்குரிய மணப்பொருள்களை ஊட்டிய அம்பு அரத்தால் தீட்டியது போல ஆயிற்று. மலர்க் கண்ணைப் புனல் இவ்வாறு தீட்டிய அம்பாக மாற்றியது என உவமித்து கூறப்பட்டுள்ளது.
  • மைந்தர் மிதக்கும் தண்டுகளில் ஏறி ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி விளையாடியும் கண்டல் பூக்களின் தாதுப் பொடிகளை அள்ளித் ஆற்றலை நுரையில் தூவியும் தாம் விரும்பும் திமில் மிதவையில் வெள்ளத்தின் போக்கில் மிதந்து சென்றும் வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டு விளையாடியும் மகளிர் சமைத்த சிறுசோற்றை வாங்கி உண்டும் மகிழ்ந்து கொண்டாடினர்.
  • மகளிர் சிலர் மைந்தருக்குச் சிறுசோறு கொடுத்தனர். சிலர் கொடுக்க மறுத்தனர். சில மைந்தர் மகளிர் விளையாடும் பந்து, கழங்கு முதலானவற்றைத் திருடிக்கொண்டு ஓடினர். ஆற்றங்கரையில் நின்றுகொண்டு புனலில் பாய்பவர் போலப் பாசாங்கு காட்டினர். மைந்தரில் சிலர் நீரில் நீந்திக்கொண்டே வாள், வேல் போன்றவற்றை ஒருவர் மேல் ஒருவர் மாறி மாறி வீசி வருத்தும் விளையாட்டு காட்டினர். இதனால் புனலே போர்களம் போல் ஆயிற்று.
  • நிலவு தோன்றிய இரவு காலத்தில் கூடல் நகரில் பல்வேறு தொழில்கள் நடைபெற்றன. மக்கள் பகலில் அணியும் அணிகலன்களைக் களைந்தெறிந்து மலரும் பூமாலைகள், தோள்-அணி, தோடு, சுடரும் அணிகலன், முத்துமாலை முதலானவற்றை அணிந்துகொண்டனர். பாடுபவர் பாடல், கடவுளைப் போற்றுதல், மக்களைப் போற்றுதல், ஆடுபவர்களின் ஆட்டம், அமர்ந்துகொண்டு பாடுபவர்களின் இசைப்பாட்டு முதலானவை நிகழ்ந்தன. பூக்களில் வண்டுகள் ஊதின. கொண்டுவரப்பட்ட கொண்டி-மகளிர் கூந்தலிலும் அவை ஊதின. தென்திசையில் திரிந்த காற்று சன்னலாகிய காலதர் வழியே வீசிற்று. இதனை மாலைப்பொழுது என்னும் பெண் பெரிதும் விரும்பினாள். எங்கும் பனியானது வளர்க்கும் மூடுபனி ஆவி போல் மாடங்களில் மணப்புகை மண்டலம். இவ்வாறு புனலாட்டு விழாவின் அந்தி நேரக்காட்சி விவரித்து கூறப்பட்டுள்ளது.
  • வறுமையில் வாடும் புலவரின் ஏற்கும் கை கொள்ளாத அளவுக்கு அரசன் வழுதி பொன்-அணிகளைக் கொட்டுவான். அதுபோல வையைப் புனல் எங்கும் பரவி வயல்வெளியில் பொன்மணிக் கதிர்கள் விளைவது ஓயக்கூடாது. கூடல் நகரமக்கள் வருந்தாதமல் விழாக் கொண்டாடும்படியும், வயிரியர் யாழிசை கூட்டிப் போற்றிப் புகழும்படியும் வையையில் புனல் பெருகி வரவேண்டும் என்று மக்கள் வழிபாடு செய்தனர்.

பாடல் நடை

பரிபாடல் - 10

  • திணை: மருதம்
  • கூற்று: பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்ற பாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு அணியும், ஆங்குப் பட்ட செய்தியும், கூறியது.

மலைவரை மாலை அழி பெயல் காலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூட
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப்
போந்தது வையைப் புனல்.
.............................................................................................
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jun-2025, 11:19:57 IST