under review

கந்தகப் பூக்கள்

From Tamil Wiki

கந்தகப் பூக்கள் (2002) ஓர் இலக்கிய அமைப்பு. சிவகாசியில் எழுத்தாளர் ஸ்ரீபதியால் தோற்றுவிக்கபட்டது. சிவகாசி மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை, கருத்தரங்குகளை, நூல் விமர்சன அரங்குகளை ஒருங்கிணைத்து வருகிறது.

தோற்றம்

சிவகாசியில் எழுத்தாளர் ஸ்ரீபதியால் 2002-ல் தோற்றுவிக்கப்பட்ட இலக்கிய அமைப்பு கந்தகப் பூக்கள்.

கந்தகப் பூக்கள் சிற்றிதழ்

எழுத்தாளர் ஸ்ரீபதியும் அவரது நண்பர் யுவபாரதியும் இணைந்து கந்தகப் பூக்கள் சிற்றிதழைத் தோற்றுவித்தனர். கவிதை, கட்டுரை, சிறுகதைகள். இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இவ்விதழில் வெளியாகின.

ஆறு பக்கங்களுடன் வெளிவந்த இவ்விதழ், தனிச்சுற்று இதழாக, விளம்பரங்கள் ஏதுமின்றி வெளிவந்தது. 2005-ம் ஆண்டில் புதுமைப்பித்தன் சிறப்பிதழை கந்தகப்பூக்கள் சிற்றிதழ் வெளியிட்டது.

கந்தகப் பூக்கள் இலக்கிய அமைப்பு

கந்தகப் பூக்கள் இலக்கிய அமைப்பு, சிவகாசியில் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தது. மாதாந்திரக் கூட்டங்கள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்தியது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து இலக்கியக் கூட்டங்கள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்தியது.

கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள், நூல் விமர்சன அரங்குகள் போன்றவை நடத்தப்பட்டன. ராஜபாளையம் மணிமேகலை மன்றம், கோவில்பட்டி கம்பன் கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் இலக்கியப் பெருமன்றம் போன்றவற்றுடன் இணைந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியது. விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து கந்தகப் பூக்கள் இலக்கிய அமைப்பு மூலம் எண்ணற்ற படைப்பாளிகள் உருவாகினர்.

கந்தகப் பூக்கள் பதிப்பகம்

கந்தகப் பூக்கள் பதிப்பகம் மூலம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் பதிப்பிக்கப்பட்டு வெளியாகின. பேராசிரியை பொ.ந. கமலாவின் 'ரோஜாவுக்கு' என்ற கடித இலக்கிய நூல், கவிஞர் யுவபாரதியின் 'காகிதப்பூ', கவிஞர் பாண்டுவின் 'வெள்ளை இரவு', ஸ்ரீபதியின் 'நிஜம் சுடும்', கவிஞர் அருணாதேவியின் 'லாடம்' போன்ற கவிதை நூல்கள் அவற்றுள் சில.

கந்தகப் பூக்கள் பதிப்பகம் வெளியிட்ட ஸ்ரீபதியின் 'அகமும் புறமும்', 'நீலநிலா', செண்பகராஜனின் 'புதிய பயணமும் நவீனப் பார்வையும்' போன்ற கட்டுரைத் தொகுப்பு நூல்களும் முக்கியமானவையாக அறியப்படுகின்றன.

கந்தகப் பூக்கள் - இணையச் செயல்பாடுகள்

கந்தகப்பூக்கள் இணையத்தில் பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியது. ஃபேஸ்புக் மூலம் ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள், புதுக்கவிதைகள், காதல் கவிதைகள் என வாரம் ஒரு போட்டியை நடத்தியது. மாதம் ஒரு மின்னூலை வெளியிட்டது.

மதிப்பீடு

கந்தகப்பூக்கள், சிற்றிதழ், பதிப்பகம், இலக்கிய நிகழ்வுகள், நூல் விமர்சன அரங்கு, நூல் வெளியீட்டு விழா எனப் பல்வேறு களங்களில் செயல்பட்டு வரும் இலக்கிய அமைப்பாக அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:42:51 IST