under review

கண்ணுடைய வள்ளல்‌

From Tamil Wiki
கண்ணுடைய வள்ளல் எழுதிய ஒழிவில் ஒடுக்கம்

கண்ணுடைய வள்ளல் (காழி கண்ணுடைய வள்ளல்,பொ.யு. 15-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவ அறிஞர். சைவ தத்துவ விளக்கங்கள், உரைகள், செய்யுள்கள் எழுதினார். புதிய சைவ மரபான 'வள்ளலார் மரபு' என்னும் ஆசாரிய பீடம் நிறுவி அதன் தலைவரானார்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணுடைய வள்ளல் தமிழ்நாட்டின் சீர்காழியில் பிறந்தார். பொ.யு. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். சைவ சமயத்தைச் சேர்ந்தவர். திருஞான சம்பந்தரது திருவருள் பெற்றுச் சீர்காழியில் பெரிய அநுபூதிமானாக வாழ்ந்தவர். உலகில் இறைவனைப் பணியும் மெய்யன்பருக்கு முத்தியைக் காட்டும் ஞான நோக்காய் இசைந்த கண்ணுடைமை பற்றி எழுதியதால் கண்ணுடைய வள்ளல் என அழைக்கப்பட்டார்.

ஆன்மிக வாழ்க்கை

கண்ணுடைய வள்ளல் தொடக்கத்தில் குரு சம்பந்த முனிவருக்கு சீடனாக இருந்தார். சம்பந்தர் பரம்பரையில் 'சம்பந்த சரணாலயர்' என்னும் பெயரால் அழைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி 'வள்ளலார் மரபு' என்னும் ஆசாரிய பீடம் நிறுவி அதன் தலைவரானார். சம்பந்தர் பரம்பரை சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றுவது. வள்ளலார் மரபு 'ஐக்கியவாத சமயம்' என்னும் புதிய மரபைப் பின்பற்றுவது.

மரபு

இவர் வழிவந்தோரால் ஆளப்பெற்ற அறிவு நூல்கள் 'வள்ளலார் சாத்திரங்கள்' என வழங்கப்பட்டன.

இலக்கிய வாழ்க்கை

கண்ணுடைய வள்ளல் ஒழிவிலொடுக்கம், கச்சிமாலை, மாயப்பிரலாபம், அதிகாரப் பிள்ளை அட்டவணை, அத்துவைதக் கலிவெண்பா, அதிரகசியம், குருமரபு சிந்தனை, ஞானசாரம், ஞானவிளக்கம் சிந்தாந்த தரிசனம், சிவஞானப்பிசகாசம், சுருதி சர்வவிளக்கம், திருமுகப்பாசுரம், உபதேசமாலை, தேவார உரை, தத்துவவிளக்கம், சதாசிவரூபம், திருதெறிவிளக்கம் ஆகிய நூல்களை எழுதினார்.

ஒழிவிலொடுக்கம்

இந்நூல் 253 வெண்பாக்களை உடையது. இந்நாலுக்குத் திருப்போரூர் சிதம்பர சாமிகள் உரை எழுதியுள்ளார்.

தத்துவவிளக்கம்

இந்நூல் 51 கலித்துறைகளையுடையது; சைவசித்தாந்த உண்மைகளைக் கூறுவது.

சதாசிவரூபம்

இந்நூல் சைவ ஆகமங்களில் கூறப்பெற்றுள்ள பஞ்ச-சாதாக்கிய விவரங்களை எடுத்துரைக்கின்றது.

திருநெறிவிளக்கம்

இந்நூல் சைவசித்தாந்த உண்மைகளைப் பற்றியது.

பாடல் நடை

பள்ள மலியார் கலியுலகில்
பரமன் உருவாய்ப் பணிந்தோருக்கு
உள்ள படியீது எனஉணர்த்தி
உலவா முத்தி உறக்காட்டிக்
கள்ள மதவல் இருள்கடிந்து
காணும் காழிக் கண்ணுடைய
வள்ளல் கருணை செயும்சூழல்
வளம்சேர் சோழ மண்டலமே

நூல் பட்டியல்

  • ஒழிவிலொடுக்கம்
  • கச்சிமாலை
  • மாயப்பிரலாபம்
  • அதிகாரப் பிள்ளை அட்டவணை
  • அத்துவைதக் கலிவெண்பா
  • அதிரகசியம்
  • குருமரபு சிந்தனை
  • ஞானசாரம்
  • ஞானவிளக்கம் சிந்தாந்த தரிசனம்
  • சிவஞானப்பிசகாசம்
  • சுருதி சர்வவிளக்கம்
  • திருமுகப் பாசுரம்
  • உபதேசமாலை
  • தேவார உரை
  • தத்துவவிளக்கம்
  • சதாசிவரூபம்
  • திருதெறிவிளக்கம்

உசாத்துணை

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:58:49 IST