கடம்பனூர்ச் சாண்டிலியனார்
கடம்பனூர்ச் சாண்டிலியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கடம்பனூர்ச் சாண்டிலியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கடம்பனூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர். சாண்டிலியனார் என்ற பெயரை கொண்டு முனிவராக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கடம்பனூர்ச் சாண்டிலியனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 307-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனை நினைத்து வருந்த வேண்டாம் என்று சொன்ன தோழிக்கு தலைவி தன் துயரை உணர்த்துவதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- அந்தி நேரத்து செந்நிறமான வானத்தில் சங்கினாலான வளையலை போன்று வெண்ணிறத்தில் வளைந்து தோன்றும் மூன்றாம் பிறையை மக்கள் வணங்குவர்.
- பாலை நிலத்தில் நீர் வறட்சியினால் தாகத்தில் தவிக்கும் பெண் யானைக்கு உதவும் பொருட்டு ஆண் யானையானது யாமரத்தை (யா மரம்-ஆச்சா மரம். யா மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கது. காடுகளில் யானைகள் இம்மரத்தின் பட்டையை உரித்து உண்ணும்) பிளந்து நீர் தேடும். அம்மரத்திலும் நீர் இல்லாத போது பட்டை உரிந்த மரத்தில் தன் தும்பிக்கையை உரசியவாறு நிற்கும்.
பாடல் நடை
குறுந்தொகை (307)
பாலைத் திணை துறை: பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - 2: புலவர் க. கோவிந்தன்
- தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- குறுந்தொகை - 307 - nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 12:57:10 IST