இ. மகாதேவா


இ. மகாதேவா (தேவன், யாழ்ப்பாணம் தேவன்) (செப்டெம்பர் 27, 1924 - டிசம்பர் 8, 1982) ஈழத்து எழுத்தாளர். தேவன் என்ற பெயரிலும், இ. மகாதேவா என்ற பெயரிலும் எழுதியவர். இளையப்பா மகாதேவா என்ற இயற்பெயர் கொண்டவர். ஆசிரியர், புனைவெழுத்தாளர், பேச்சாளர்.
பிறப்பு, கல்வி
இ. மகாதேவா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 27, 1924-ல் பிறந்தார்.
கல்வி
இ. மகாதேவா யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கல்வி பெற்றார். இலண்டன் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வென்றார். பணியில் இருந்தபடி மகரகமை ஆசிரியர் பயிற்சிசாலையில் சேர்ந்து ஆசிரிய பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
தேவன் தன் பத்தொன்பதாம் வயதில் உருவில் மான்ஸ் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணிக்கு சேர்ந்தார். ஆசிரியர் பயிற்சிக்குப் பின் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக ஆனார். யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி தன் 58-வது வயதில் 1982-ல் ஓய்வு பெற்றார்
தேவனின் மனைவியின் பெயர் பரமேசுவரி, இசை ஆசிரியை. இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண் பிள்ளைகள்.
இலக்கிய வாழ்க்கை
யாழ்ப்பாணம் இதழ்களில் தேவன் என்ற பெயரில் 1944 முதல் எழுதினார். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலிய இதழ்களில் எழுதினார். அப்போது தேவன் யாழ்ப்பாணம் என்று புனைபெயர் வைத்துக்கொண்டார்.
நாவல்
தேவனின் முதல் நாவல் கேட்டதும், நடந்ததும். வாடிய மலர்கள் என்ற நாவல் தமிழகத்தின் சுதர்சன் புத்தகநிலையத்தால் வெளியிடப்பட்டது
கதைகள்
காந்தியப்பார்வை கொண்டிருந்த தேவனின் கதை 'காந்தியக் கதைகள்" என்ற தொகுதியில் (1969) இடம்பெற்றது.
மொழிபெயர்ப்பு
ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் எழுதிய டிரஷர் ஐலண்ட் நாவலை மணிபல்லவம் என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார்.
நாடகங்கள்
தேவன் கல்லூரி மாணவர்களுக்காக ஆறு நாடகங்களை எழுதியுள்ளார். அவை கல்லூரிகளில் பாடமாகவும் இருந்தன. அவற்றில் தென்னவன் பிரமராயன் நாடகம் புகழ்பெற்றது.
அமைப்புப் பணிகள்
தேவன் யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராக பணியாற்றினார்.
சொற்பொழிவு
தேவன் சிறந்த மேடைப்பேச்சாளர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இலங்கை வந்தபோது அவர் உரையை மொழியாக்கம் செய்தார். டட்லி சேனநாயகாவின் உரைகளையும் மொழியாக்கம் செய்தார்.
மறைவு
இ. மகாதேவா டிசம்பர் 8, 1982 அன்று யாழ்ப்பாணத்தில் தன் 58-வது வயதில் மறைந்தார்.
இலக்கிய இடம்
கல்விநிலையப் பயன்பாட்டுக்காகவும் பொதுவாசிப்புக்காகவும் எழுதப்பட்டவை தேவனின் நூல்கள். அவை ஈழத்தில் பொதுச்சூழலில் வாசிப்பை நிலைநிறுத்த உதவின. காந்திய ஜனநாயகப் பார்வையை முன்வைக்கும் படைப்புகளாகவும் திகழ்ந்தன.
நூல்கள்
நாடகங்கள்
- தென்னவன் பிரமராயன்
- விதி
- இரு சகோதரர்கள்
- பத்தினியா பாவையா
- வீரபத்தினி
- நளதமயந்தி
நாவல்
- வாடிய மலர்கள்,
- மணிபல்லவம்,
- கேட்டதும் நடந்ததும் (1956, 1965)
- அவன் சுற்றவாளி (குறும் புதினம், 1968)
சிறுகதை
- தேவன் - யாழ்ப்பாணம் சிறுகதைகள்
கட்டுரை
- வானவெளியில் (அறிவியல் கட்டுரைகள், 1958)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-May-2026, 22:07:01 IST