இலமா. தமிழ்நாவன்

இலமா. தமிழ்நாவன் (பிறப்பு: ஜூலை 09, 1949) கவிஞர், எழுத்தாளர். சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றார். தமிழக அரசால் தமிழ்நாவனின் நூல்கள் 2025-ல் நாட்டுடைமை செய்யப்பட்டன.
வாழ்க்கைக் குறிப்பு
இலமா. தமிழ்நாவன், ஜூலை 09, 1949 அன்று, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, திருத்தங்கலில், பெ. மாலை - இலக்குமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
இலமா. தமிழ்நாவன், பாரதிதாசன் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். பாரதிதாசனின் சிறுவர்க்கான பாடல்களை மையமாக வைத்து 'பாவேந்தரும் பூந்தளிர்களும்' என்ற நூலை எழுதினார். 'பாவேந்தரும் பாட்டாளியும்' என்ற நூலை எழுதினார். தொடர்ந்து பல கவிதை, நூல்களையும் கட்டுரை நூல்களையும் எழுதினார். சிறார்களுக்கான பாடல் நூல்களையும், கட்டுரை நூல்களையும் எழுதினார்.
விருது
இலமா. தமிழ்நாவன், தனது 'பாவேந்தரும் பாட்டாளியும்' நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அளித்த சிறந்த நூலுக்கான முதல் பரிசை 1985-ல் பெற்றார்.
நாட்டுடைமை
இலமா. தமிழ்நாவனின் நூல்கள், 2025-ல், தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்டன. ரூ. 10 லட்சம் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டது.
மதிப்பீடு
இலமா. தமிழ்நாவன் புலவர். மரபுக் கவிதைகளில் தேர்ந்தவர். சிறார் எழுத்தாளர். திராவிட இயக்கம் சார்ந்து செயல்பட்டவர். பொது வாசிப்புக்குரிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- பாவேந்தரும் பூந்தளிர்களும்
- பாவேந்தரும் பாட்டாளியும்
- தடைகளைத் தாண்டி வெல்வது எப்படி?
- நற்பண்புகளை வளர்க்கும் கதைகள்
- சிந்தனையைத் தூண்டும் செந்தமிழ்க் கதைகள்
- அறிவு புகட்டும் அருந்தமிழ்க் கதைகள்
- நல்வாழ்வு மேம்பாட்டு கதைகள்
- சிலிர்த்தெழு
- படிப்பால் உயர்ந்தவள்
- நற்பண்பு மேம்பாட்டுக் கதைகள்
- படித்தால்தான் உயரலாம்: ஒழுக்கநெறிக் கதைகள்
- சிறுவர் கதைகதையாம் காரணமாம்
- வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும்
- பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம்
- சுரதா பிள்ளைத்தமிழ்
- நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Feb-2026, 10:06:37 IST