under review

ஆ. பழநி

From Tamil Wiki
புலவர் ஆ. பழநி

ஆ. பழநி (புலவர் ஆ. பழநி; பாவலர் ஆ. பழநி; பாவலர் மணி ஆ. பழநி) (பிறப்பு: நவம்பர் 07, 1931 - அக்டோபர் 31, 2019) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 'பாவேந்தர் விருது' உள்பட பல விருதுகளைப் பெற்றார். திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

ஆ. பழநி, நவம்பர் 07, 1931-ல், காரைக்குடியில், ஆண்டியப்பன் - உமையாள் இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். சில வருடங்களுக்குப் பின் தனித்தேர்வெழுதி, மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் வகுப்பில் சேர்ந்தார். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார்.

கல்விப் பணிகள்

ஆ. பழநி, 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

ஆ. பழநி திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆ. பழநி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஆ. பழநி, திராவிட இயக்கப் படைப்பாளிகளால் இலக்கிய ஆர்வம் பெற்றார். பல்வேறு கவிதைப் போட்டிகளிலும், செய்யுள் மற்றும் நாடகப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். நாடகம், உரை, திறனாய்வு, காப்பியம், ஒப்பீட்டு நூல்கள் சிலவற்றை எழுதினார். ஆ. பழநியின் 'அனிச்ச அடி' நாடக நூல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டது. அந்நூல் பற்றி முனைவர் மு. இளங்கோவன், "புலவர் ஆ. பழநியின் அனிச்ச அடி என்னும் நூல் மனோன்மணியம் செய்யுள் நாடகத்துக்கு அடுத்துத் தமிழில் வெளிவந்த முதன்மையான செய்யுள் நாடகம்" என்று குறிப்பிட்டார்.

மு. கருணாநிதியிடமிருந்து விருது

பொறுப்பு

  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினர் - 1997
  • காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகத்தின் மேனாள் புரவலர்
  • இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் சிலப்பதிகார நூல் பதிப்பாசிரியர்
தமிழ்ப்பேரவைச் செம்மல் பட்டம்

விருதுகள்

  • சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய திருக்குறள் புத்துரைப் போட்டியில் பரிசு - 1968
  • சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய நாடகப் போட்டியில் 'அனிச்ச அடி' நாடகத்திற்கு முதல் பரிசு - 1973
  • நெல்லை தனித்தமிழ் இயக்கக் கழகத்தின் 'பாவலர் மணி' விருது - 1974
  • குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'கவிஞர்கோ' பட்டம் - 1980
  • தமிழக அரசின் பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் 'பாவேந்தர் விருது' - 1991
  • காரைக்குடி சுழற்குழு வழங்கிய 'புலவர் மாமணி' விருது - 1999
  • பாரதிதாசன் தமிழ்ப்பேரவை அளித்த 'தமிழ்நெறிச் செம்மல்' விருது - 2002
  • மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வழங்கிய 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம், பொற்பதக்கம், மற்றும் பொற்கிழி

மறைவு

ஆ. பழநி, அக்டோபர் 31, 2019 அன்று காரைக்குடியில் காலமானார்.

நாட்டுடைமை

ஆ. பழநியின் நூல்கள் தமிழக அரசால் மே 05, 2025-ல், நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மதிப்பீடு

ஆ. பழநி கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடக ஆசிரியர் எனப் பல களங்களில் செயல்பட்டவர். வாழ்நாளின் இறுதிவரை இலக்கிய உலகில் செயல்பட்டார். முனைவர் மு. இளங்கோவன், ஆ. பழநியின் இலக்கிய முயற்சிகள் பற்றி, "தமிழில் மரபு நூல்களைப் படைப்பதிலும் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடக்கும் நுட்பங்களை எடுத்துக்காட்டித் திறனாய்ந்து எழுதுவதிலும் இவர் வல்லவர். இவர்தம் சிலப்பதிகார ஆய்வுகளும் கம்பராமாயண ஆய்வுகளும் கற்போர்க்குக் கழிபேருவகை விளைவிக்கும் தன்மையன." என்று மதிப்பிட்டார்.

நூல்கள்

கவிதை
  • களம்கண்ட கவிதைகள் (1993)
  • சாலிமைந்தன் (1985) - காப்பியம்
  • காரல் மார்க்சு காப்பியம் (2005)
நாடகம்
  • அனிச்ச அடி (1973)
  • அன்னிமகள்
திறனாய்வு நூல்
  • பண்டித மணியின் நாடகத்தமிழ் (1983)
  • கானல் வரியா? கண்ணீர் வரியா? (1990)
  • பாரதிதாசன் பாரதிக்கு தாசனா? (1989)
  • கம்பன் காட்டும் போரற்ற உலகம் (2004)
ஆய்வுக் கட்டுரை நூல்
  • இளங்கோவடிகளின் காப்பியக் கலைத்திறன் (1991)
  • கோவலன் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும் (1991)
  • சிலம்பில் சில மறைப்புகள் (1993)
  • பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும் குறியீட்டுச் செய்தியும் (1994)
  • சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு (2007)
  • திருக்குறள் உரைகளும் சில குறைகளும் (2009)
  • கம்பரின் மறுபக்கம் (2017)
  • மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் (2017)
  • பழந்தமிழர் வாழ்வில் காதல் (2019)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2025, 12:11:46 IST