ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்
ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் (1672 - 1769) சைவ சமய நூல்களை இயற்றிய சிற்றிலக்கப் புலவர்.
வாழ்க்கை குறிப்பு
ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் 1672-ம் ஆண்டு சுப்பிரமணிய ஐயர் - சுப்பம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார். சுப்பிரமணிய ஐயர் கர்நாடகத்தில் அமைந்துள்ள ஆத்மகூர் என்னும் ஊரினை பூர்வீகமாக கொண்டவர். சுப்பிரமணிய ஐயர் சோமநாத ஆரத்திரியார் - பிரமரகுந்தளாம்பாள் என்னும் இணையரின் மகனார். சுப்பிரமணிய ஐயர் - சுப்பம்மாள் இணையர் திருகோவிலூர் இறைவனை வேண்டி பிறந்ததால் தங்கள் மகனுக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டனர்.
ஆறுமுகம் தனது தந்தை சுப்பிரமணிய ஐயரிடமும் அக்கால பள்ளியிலும் சேர்ந்து கல்வி பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய ஆறுமுகம் திருவருணை குகைநமசிவாய மடலாயத்தின் ஆறாம்முறை குகைநமசிவாய அடிகளிடம் இருந்து சிவலிங்கதாரணமும் தூலபஞ்சாக்கர உபதேசமும் பெற்று துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.
ஆன்மீக வாழ்க்கை
ஆறுமுகம் துறவு பெற்ற பின் பெண்ணையாற்றில் குளித்து தினமும் தியானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் தியானத்தில் இறைவன் திருவீரட்டநாதனார் தோன்றி அவருக்கு சூக்கும பஞ்சாக்கர மந்திர உபதேசமும் நீட்டானுபூதி என்னும் வடமொழி நூலையும் அருளினார் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு முறை முருகப் பெருமான் கனவில் தோன்றி பிரணவ பேருரை வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் ஆறுமுகம் அவர்களை மக்கள் ஞானியார் சுவாமிகள் என்று அழைக்க தொடங்கினார். அவர் வாழ்ந்த இடம் ஞானியார் மடலாயம் என்றழைக்கப்பட்டது. ஆறுமுக மெய்ஞான சுவாமிகள் பரசிவ மகாலிங்கேஸ்வரர், பரமாச்சாரிய சுவாமிகள், மகாகுரு சுவாமிகள், சண்முகநாம சத்யஞான சுவாமிகள், ஆறுமுக மெய்ஞ்ஞான தேசிகர் என்று பிற பெயர்களிலும் அழைக்கப்பெற்றார்.
ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகளுக்கு மாணவர்கள் இருந்தனர். பூங்கோட்டு அம்பலவாண சுவாமிகள், அவிநாசிநாத சுவாமிகள், சம்பூரண பிரகாச சுவாமிகள், மதுரை சட்டமுனிகள், அண்ணாமலை சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தக்க மாணவர்கள்.
இலக்கிய வாழ்க்கை
ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தனக்கு இறைவனிடம் இருந்து நீட்டானுபூதி என்னும் வடமொழி நூல் கிடைக்கப்பெற்ற செய்தியை தனது குரு ஆறாம்முறை குகைநமசிவாய அடிகளிடம் பகிர்ந்து கொண்டார். குருவின் ஆணையின்படி நீட்டானுபூதி நூலை தமிழாக்கம் செய்தார். பின்னர் இறைவனை துதித்து பல நூல்களை பாடினார்.
மறைவு
ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தனது தொண்ணூற்றெழாவது வயதில் 1769-ம் ஆண்டு மறைந்தார். அவரது நினைவு தினம் வீரட்டநாதனேஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படுகிறது.
நூல்கள்
- நீட்டானுபூதி சாரம்
- வீரசைவ உண்மை அகவல்
- சதுர்லிங்க தசகோத்ர சதகம்
- இட்டலிங்க திருத்தலமாலை
- சிவசோட மாலை
- ஆசை சோடமாலை
- உய்ய பத்து
- ஓலப்பத்து
- கரதலப்பத்து
- கரதலநாயக பஞ்சகம்
- இட்டலிங்க பதிகம்
- கரதல திருப்புகழ்
- ஆடுதுறை குற்றம்பொறுத்தார் தோத்திரம்
- சண்முகர் உலா
- தென்பாங்கு
- மாசிலமாணி பதிகம்
- சிவசிவ பதிகம்
- சிவசிவ அர அர பதிகம்
- வீரட்டேஸ்வர மகாகுரு அனுபவ தோத்தி கலித்துறை
- இலிங்கப்புலம்பல்
- அருள்நாம உண்மை விளக்கம்
- பிரமதர்க்க நிச்சயம்
- வெற்றருலா
- உண்மையுலா
- பரம உபதேச ஒடுக்கம்
- சிவாத்வைத கும்மி
- ஞானிகள் நிலைமை
- மேன்மை பதிகம்
- வீரட்டேஸ்வர தோத்திர கலிப்பா
- சண்முகர் அகவல்
- வீரட்டேஸ்வர மகாகுரு தோத்திர மங்களம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:32:55 IST