under review

அ. ஆனந்த நடராஜன்

From Tamil Wiki
அ. ஆனந்த நடராஜன்

அ. ஆனந்த நடராஜன் (பிறப்பு: நவம்பர் 09, 1938) ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தருமை ஆதினத்தின் 'செந்தமிழ்ச் செல்வர்' விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

அ. ஆனந்த நடராஜன், நவம்பர் 09, 1938 அன்று, சிதம்பரத்தில், அய்யா தீட்சிதர் - சந்தான பாக்கியம் இணையருக்குப் பிறந்தார். சிதம்பரத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். 1958-ல் புலவர் பட்டம் பெற்றார். 1962-ல் பி.ஓ.எல். பட்டம் பெற்றார். 1964-ல், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1966-ல் வடமொழியில் பட்டயம் பெற்றார். 1985-ல், 'தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

அ. ஆனந்த நடராஜன் திருமண விவரங்கள் குறித்து அறிந்துகொள்ள இயலவில்லை.

கல்விப் பணிகள்

அ. ஆனந்த நடராஜன், 1964-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை உரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1969-ல், தமிழ் விரிவுரையாளரானார். 1986-ல் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1993-ல், அஞ்சல் வழிக் கல்வித் துறையில் தமிழ்ப் பேராசிரியரானார். 1994-ல், அண்ணாமலை பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவரானார். இந்திய மொழிப்புல முதன்மையராகப் பணியாற்றினார். ஆனந்த நடராஜனின் வழிகாட்டுதலில், அமெரிக்க நாட்டு பென்சில்வேனியா பல்கலைக் கழக மாணவர் ஜான் உட்பட பல மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

இலக்கிய வாழ்க்கை

அ. ஆனந்த நடராஜன், இந்தியாவின் பல்வேறு ஆய்விதழ்களிலும் மலர்களிலும் இலக்கிய, ஆன்மிக, ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். தமிழகம், இலங்கை எனப் பல பகுதிகளுக்கும் சென்று இலக்கிய, சமயச் சொற்பொழிவாற்றினார். தேசிய அளவிலான 30-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார். 100-க்கும் மேற்பட்ட திருமண, மணிவிழா வாழ்த்துகளை எழுதி வழங்கினார். 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

மொழிபெயர்ப்பு

அ. ஆனந்த நடராஜன், உமாபதி சிவனார் இயற்றிய 'கோயில் புராண'த்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

ஊடகம்

அ. ஆனந்த நடராஜன், பல்வேறு தலைப்புகளில் வானொலியில் 50-க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளையும், தொலைக்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார்.

பொறுப்பு

  • ராஜா அண்ணாமலை மன்றத்தின் பண் ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்.
  • புதுவை வானொலி தேர்வுக்குழு உறுப்பினர்

விருதுகள்

  • தருமை ஆதினம் அளித்த 'செந்தமிழ்ச் செல்வர்' விருது (1979)
  • தூத்துக்குடி சைவ சித்தாந்த மகாசபையின் 'அருந்தமிழ்ச் செம்மல்' விருது (1981)
  • யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அளித்த 'இலக்கியப் பேரறிஞர்' பட்டம்
  • மலேசியாப் பல்கலைக் கழகம் வழங்கிய 'இலக்கணச் செம்மல்' பட்டம்

ஆவணம்

பேராசிரியர் அ. ஆனந்த நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை வை. விநாயகம் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், 2016-ல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

பேராசிரியர் அ. ஆனந்த நடராஜன் எழுத்தாளர், ஆய்வாளர், இலக்கிய, ஆன்மிக, சமயச் சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் இயங்கினார். அ. ஆனந்த நடராஜனின் ஆய்வான 'தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி' குறிப்பிடத்தகுந்ததொரு ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. அ. ஆனந்த நடராஜன் ஆய்வாளராகவும், சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.

உசாத்துணை

  • பேராசிரியர் அ. ஆனந்த நடராஜன், எழுத்தாக்கம்: வை. விநாயகம், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2016

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2025, 10:14:09 IST