under review

அரும்பு(இலங்கை இதழ்)

From Tamil Wiki
noolaham.net

அரும்பு (1997-2017) இலங்கையிலிருந்து வெளியான பொது அறிவு இதழ்.

தோற்றம், வெளியீடு

அரும்பு இதழ் மார்ச் 1964-ல் கையெழுத்துப் பிரதியாக வெளிவரத் துவங்கி, 1968-ல் நின்று போனது. நவம்பர் 1997-ல் மீண்டும் அச்சு இதழாக ஒவ்வொரு மாதமும் வெளிவரத் தொடங்கியது. ஜனவரி 2017 வரை (இடையில் ஒரு நீண்ட இடைவெளியுடன்) மொத்தம் 44 இதழ்கள் வெளிவந்தன. இந்த இதழ் இலங்கை களுத்துறை மாவட்டத்தில் தர்கா டவுன் என்னும் இடத்திலிருந்து வெளியானது.

அரும்பு இதழின் ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸடீன்.

முதல் இதழின் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. இதழுக்குக் கிடத்த வரவேற்பினால் மேலும் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. விற்பனை படிப்படியாக 5000 பிரதிகள் வரை அதிகரித்தது. வடக்கு இலங்கையில் போர் நிகழ்ந்துகொண்டிருந்த போதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீத்தீவு மாவட்டங்களில் இதழ் விநியோகிக்கப்பட்டு வந்தது.

1997-ல் ஒரு இதழின் விலை ரூ.15/-. மார்ச் 2012-ல் வெளிவந்த இறுதி இந்தழின் விலை ரூ. 30/-.

ஆசிரியர்

'அரும்பு' இதழின் ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸடீன். 1963-ல் இஸ்ஸடீன் 7-ம் வகுப்பில் இருந்தபோது தோழர்களுடன் இணைந்து கையெழுத்துப் பத்திரிகையாக அரும்பு இதழைத் தொடங்கினார். இதழுக்கு 'கரும்பு' எனப் பெயரிட்டு அப்பெயரில் இந்தியாவில் ஒர் இதழ் இருந்ததால் 'அரும்பு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாதம்தோறும் அப்பியாசக் கொப்பி(நோட்டுப் புத்தகம்) அளவில் 40 பக்கங்களில் கையெழுத்துப் பிரதி வெளிவந்தது. பிரதி முழுவதும் இஸ்ஸடீனால் எழுதப்பட்டது. பள்ளியிறுதிக்குப்பின் இம்முயற்சி கைவிடப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப்பின் இஸ்ஸடீன் அரும்பு இதழை மீண்டும் தொடங்க விரும்பி கணிணி நிலையம் ஒன்றை நிறுவி, அதன்மூலம் இதழை வடிவமைத்து வெளியிடத் துவங்கினார். முதல் இதழ் ஜூலை 1997-ல் வெளிவந்தது.

உள்ளடக்கம்

'அரும்பு' ஏறக்குறைய இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டது. சில முறை மூன்று, நான்கு மாத இடைவெளிகளிலும் வெளியிடப்பட்டது. முதல் இதழ் 32 பக்கங்களையும், பின்வந்த இதழ்கள் 48 பக்கங்களையும் கொண்டிருந்தன.

மாணவர்கள் மற்றும் பொதுஅறிவுத் தேர்வு எழுதுபவர்களுக்காக அறிவியல், கலை, இலக்கியம், வரலாறு, அரசியல், தோழில்நுட்பம் மற்றும் பொது அறிவு சார்ந்த செய்திகள் 'அரும்பு' இதழில் இடம்பெற்றன. செய்திகளும், கட்டுரைகளும் கலைக்களஞ்சியம், ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தி வழங்கப்பட்டன. இதழில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தையும் ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸடீன் தானே எழுதி, மெய்ப்பு பார்த்து வெளியிட்டார்.

அரும்பு தனித்துவமான இதழாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அரும்பு இதழின் 44 பிரதிகளும் நூலகம்.நெட் வலைத்தளத்தில் சேமிக்கப்பட்டு பார்வைக்குக் கிடைக்கின்றன.

சில கட்டுரைத் தலைப்புகள்
  • ருடோல்ப் டீசல்
  • விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் யூரி ககாரின்
  • இண்டர்னெட்
  • கம்பியூட்டரின் பகுதிகள்
  • சர்வதேசக் கடதாசித்தாள் அளவுகள்
  • இலங்கையின் வெந்நீரூற்றுக்கள்
  • அஜினோமோட்டோ ஆபத்தானதா?
  • அல்ஜஸீரா
  • புகழ் பெற்ற மலயாள எழுத்தாளர் வைக்கம் முஹமது பஷீர்
  • பாம்பன் பாலம்
  • ஸ்கொட்லாந்து தனி நாடாகுமா?
  • பொழுது போக்கு-cold porcelain என்னும் கைப்பணிக் களியைத் தயாரிக்கும் முறை
  • அறிவும் பண்பும்
  • ஜப்பானின் பூஜி மலை (Mount Fuji)
  • இந்து - ஆரிய மொழிகள்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jul-2024, 20:35:15 IST