அமிர்தம் சூர்யா
- அமிர்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அமிர்தம் (பெயர் பட்டியல்)
- சூர்யா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சூர்யா (பெயர் பட்டியல்)
To read the article in English: Amirtham Surya.

அமிர்தம் சூர்யா (பிறப்பு: டிசம்பர் 16,1966) தமிழ் எழுத்தாளர், இலக்கிய மேடைப்பேச்சாளர், கவிஞர், இதழாளர்.
பிறப்பு, கல்வி
அமிர்தம் சூர்யாவின் இயற்பெயர் இரா.ந.கதிரவன். தமிழ்நாட்டின் சென்னையில் நடராஜன், சரோஜா இணையருக்கு டிசம்பர் 16, 1966-ல் பிறந்தார். பூர்வீகம் காஞ்சிபுரம். எட்டாம் வகுப்பு வரை சென்னை தங்கசாலை சாரதா வித்யாலயாவில் பயின்றார். பத்தாம் வகுப்பு வரை தங்கசாலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை சென்னை கன்னிகா புரத்தில் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியிலும் பயின்றார். சென்னை தியாகராஜா கல்லூரி வேதியியல் பிரிவில் பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார். சென்னை தங்கசாலையில் (மிண்ட்) மெஷினிஸ்ட் என்று சொல்லப்படும் இயந்திரபணியாளர் என்ற பிரிவில் தொழிற்கல்வி முடித்தார்.
கதிரவன் என்ற பெயரில் இருக்கும் 'ன்' விகுதி பிடிக்காததாலும், தன் பாட்டி அமிர்தம்மாள் பெயரில் அமிர்தம் என்ற சிற்றிதழ் நடத்தியதன் நினைவாகவும் அமிர்தம் சூர்யா என பெயர் மாற்றிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
தனிவாழ்க்கை
அமிர்தம் சூர்யா லதாவை அக்டோபர் 29, 1990-ல் வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டார். L.K. காவ்ய ப்ரிய தர்ஷன், L.K. ஆகாஷ் அக்னி மித்ரன் என இரு மகன்கள்.
அமிர்தம் சூர்யா அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திரப்பணியாளராகவும், அண்ணா நகரில் வங்கி ஒன்றில் தற்காலிக பணியாளராகவும், கூடுவாஞ்சேரியில் ஒரு நிறுவன மேலாளராகவும், வியாசர்பாடி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேலாளராகவும் பல்வேறு பணிகள் செய்தார். கருமாண்டி ஜங்ஷன் என்னும் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
இதழியல்
அமிர்தம் சூர்யா கல்கி வார இதழில் பதின்மூன்று ஆண்டுகள் தலைமை துணை ஆசிரியராக பணியாற்றி பணிநிறைவு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
அமிர்தம் சூர்யாவின் முதல் படைப்பு கவிதை. தொடர்ந்து கவிதாசரண், நவீன விருட்சம், சுந்தர சுகன், கணையாழி,கோடு, கோடாங்கி என சிற்றிதழ்களில் எழுதினார். 2000-ல் ஜெயமோகன் முன்னுரையோடு உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை என்ற கவிதை தொகுப்பு வெளிவந்தது. கவிதைகளில் தேவ தேவன், தேவதச்சன், ரமேஷ் பிரேம், புனைகதையில் ஜெயமோகன், கட்டுரைகளில் சாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரை முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார். ஓவியர் சந்ரு, நாடக ஆசிரியர்முருகபூபதி ஆகியோர் ஆதர்சங்கள்.
அமிர்தம் சூர்யா சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். சென்னையில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை தேடி கண்டுபிடித்து அது குறித்து ஆசி பெறலாம் வாங்க என்ற தொடரை தீபம் இதழில் எழுதினார். பெண் சித்தர்கள் பற்றிய தொடரையும் கல்கியில் எழுதினார்.
விருதுகள்
- திருப்பூர் தமிழ் சங்க விருது
- தினகரன் பரிசு
- ஸ்டேட் பாங்க் அவார்ட் விருது
- எழுச்சி அறக்கட்டளை விருது (சிறந்த நாடக ப்ரதிக்காக)
- சி.கனகசபாபதி விருது
- அன்னம் விருது
- செளமா விருது
- எழுச்சிதமிழர் இலவந்திகை விருது (2026)
இலக்கிய இடம்
அமிர்தம் சூர்யா கவிதை, கதை, நாவல் என்னும் பல தளங்களி பங்களிப்பாற்றியிருக்கிறார். சென்னை வாழ்ந்த சித்தர்களை பற்றிய அவருடைய தொடர் புகழ்பெற்றது.
நூல்கள்
கவிதை
- உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை (2000)
- பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு (2006)
- வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் (2012)
- ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்
நாவல்
- எறவானம்
- பறதி
சிறுகதை
- கடவுளை கண்டுபிடிப்பவன்
கட்டுரை
- முக்கோணத்தின் நாலாவது பக்கம் (2001)
தொகுப்பாசிரியர்
- மிளகு கொடியில் படரும் கவிதை (கவிதைகள் குறித்து முக்கிய கவிஞர்களின் கட்டுரைகளை தொகுத்தது)
உசாத்துணை
- அமிர்தம் சூர்யா-வலைத்தளம்
- கருமாண்டி ஜங்ஷன் 7 - தமிழ் இந்தியன் எக்ஸ்பி
- ஒரு வணக்கத்தால் அழிந்த மதுரை- அமிர்தம் சூர்யா காணொலி
- அமிர்தம் சூர்யா உரைகள் - ஸ்ருதி டிவி
- பறதி - அமிர்தம் சூர்யா: சரவணன் மாணிக்கவாசகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:01 IST