second review completed

பெரும்பதுமனார்

From Tamil Wiki
Revision as of 08:35, 26 January 2026 by Jayashree (talk | contribs)

பெரும்பதுமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் நான்கு. குறுந்தொகை மற்றும் புறநானூறில் முறையே ஒரு பாடலும் நற்றுணையில் இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

பெரும்பதுமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மீளிப் பெரும்பதுமனாரும் இவரும் ஒருவரே என்று பதிப்பாசிரியர்கள் பலரும் கருதுகிறார்கள். மீளி என்று பெயரடை வந்த காரணம் விளங்கவில்லை. இக்கருத்துக்கு மாறாக மீளிப் பெரும்பதுமனார் வேறு புலவர் என்றும் அவரது ஊர் பெயரான மீளி என்பதை பெயருடன் சேர்த்து அறியப்படுகிறார். மீளி என்னும் ஊர் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகில் உள்ள மல்லி என்னும் ஊரை குறிப்பதாக இருக்கலாம் என்று தன் கருத்தை பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பெரும்பதுமனார் பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையில் 7 - ம் பாடலாகவும் புறநானூறில் 199 - ம் பாடலாகவும் நற்றிணையில் 2 மற்றும் 109 - ம் பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய குறுந்தொகை மற்றும் நற்றிணையில் உள்ள பாடல்கள் பாலைத் திணையில் அமைந்தவை. குறுந்தொகை 7 - ம் பாடலும் நற்றிணை - 2 ம் பாடலும் பாலை நிலத்தின் கடும் வழியில் ஒன்றாக உடன்போகிய தலைவனையும் தலைவியையும் கண்டு அவ்வழி சென்றோர் வருந்திக் கூறிய கூற்றாக அமைந்துள்ளன. நற்றிணை 109-ம் பாடல் தலைவனைப் பிரிந்த தன் துயரை தோழியிடம் தலைவி கூறுவதாக உள்ளது. புறநானூறு 199 - ம் பாடல் பாடாண் திணையில் அமைந்து செல்வந்தரிடம் பரிசில் பெறும் புலவர், கூத்தர், விறலியரின் நிலை குறித்து சொல்கிறது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 7
  • இளம் தம்பதியர் பயணப்படும் பாலை நிலம் காய்ந்த மூங்கில் காடுகளால் நிறைந்தது. வாகை மரங்களின் காய்கள் மூற்றி காற்றடித்தால் ஓட்டுக்குள் விதைகள் உருண்டு ஒசையெழுப்பும். அத்தகு கடும் வெயில் மிகுந்த பாதை அது.
  • உவமை: வாகை நெற்றுக்கள் காற்று வீசும் போது எழுப்பும் ஒலி ஆரியக்கூத்தர் கயிற்றில் நின்று ஆடும் வித்தையை போல் உள்ளது.
புறநானூறு 199
  • பல்வகை பறவைகள் உறைவிடமாக கொள்ளும் ஆலமரம் கடவுள் உறையும் இடமாகக் கருதப்பட்டது.
  • உவமை: நேற்று ஆலம் பழங்களை உண்டுவிட்டோம் என்று நினைத்து ஆலமரத்தை விட்டு விலகி போகாத பறவைகளை போல இரவலரும் செல்வந்தர்கள் ஒருமுறை கொடுத்துவிட்டார்களே என்று அவர்களை விட்டு நீங்குவதில்லை.
நற்றிணை 2,109
  • இளம் தம்பதியர் பயணப்படும் குன்றுகள் நிறைந்த வழி குண்டும் குழியும் நிறைந்தது. இண்டங்கொடியும் முள்ளும் படர்ந்து பயணிக்க கடுமையான வழி அது. இருள் கவிய தொடங்கும் மாலை வேளையில் அவ்வழி செல்வோரை வேட்டையாடும் புலிகள் நிறைந்த பாதை அது.
  • தலைவி தலைவனின் பிரிவால் வருந்தி கலக்கமுற்று பித்தாகி, நெற்றி நிறம் மாறுதலுடன் காணப்படுகிறாள்.
  • உவமைகள்: இளம் மனைவியைப் பாலை வழியில் மாலை வேளையில் கூட்டிச் செல்லும் இளையோனின் உள்ளம் புயலும் மழையும் வீசும் போது இடிக்கும் இடியை காட்டிலும் கொடியது. வாடைக்காற்றால் தலையில் கூழைக் கயிற்றால் கட்டிப் பிணிக்கப்பட்டிருக்கும் பசு வருந்துவது போல தலைவி, தலைவனை பிரிந்து வருந்தினாள்.

பாடல் நடை

குறுந்தொகை - 7

  • திணை: பாலை
  • கூற்று: செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.

புறநானூறு - 199

  • திணை: பாடாண் திணை
  • துறை: பரிசில் கடாநிலை

கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.

நற்றிணை - 2

  • திணை: பாலை
  • கூற்று: உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.