under review

எல்லார்வி

From Tamil Wiki
Revision as of 21:45, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
எல்லார்வி
எல்லார்வி
எல்லார்வி நாவல்
எல்லார்வி 1948
எல்லார்வி நாவல்

எல்லார்வி (1916 - 1979) (எல்.ஆர். விஸ்வநாத சர்மா) தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் இசைக்குறிப்புகளையும் எழுதினார். தமிழக இசைமேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிய முன்னோடி என்னும் வகையில் முக்கியமானவர்.

வாழ்க்கைக் குறிப்பு

எல்லார்வி கல்கியின் மனைவியின் தம்பி. தஞ்சையில் மாயவரம் அருகே பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

எல்லார்வி இளமையிலேயே எழுத ஆரம்பித்தார். ஆனந்தவிகடன் ஆசிரியராக இருந்த கல்கிக்கு 'அன்புள்ள அத்தானுக்கு" என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். கல்கி " உறவுக்கும் தொழிலுக்கும் கூட்டுறவு வைக்காமல், நட்பையும் உறவையும் ஒதுக்கி வைத்து, தனி முயற்சியில் முன்னுக்கு வருவது தான் மேல்" என்று பதில் எழுதினார். எல்லார்வி மற்ற பல பத்திரிகைகளில் தன் கட்டுரை, கதைகளைப் பிரசுரித்தார். எல்லார்வி என்பவர் யாரென்று தெரியாமலே கல்கியும் அவருடைய சில படைப்புகளை வெளியிட்டார். கடைசிவரை எல்லார்வி யார் என கல்கிக்குத் தெரியவில்லை என ஆய்வாளர் பசுபதி குறிப்பிடுகிறார்.

எல்லார்வி 1948 முதல் தமிழில் வெளிவந்த குமுதம் உட்பட வணிக இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளை எழுதினார். அவற்றில் 1959 ல் குமுதம் இதழில் தொடராக வெளிவந்த கலீர் கலீர் என்னும் நாவல் புகழ்பெற்றது. எல்லார்வியின் முல்லை, பனித்துளி போன்ற நூல்களும் புகழ்பெற்றவை. 126 சிறுகதைகள் அவர் எழுதியதாகக் குறிப்பிடப்படுகிறது.

எல்லார்வி சிறுவர்களுக்கான கதைகளை எழுதியிருக்கிறார். 42 கதைகள் அச்சில் வெளிவந்துள்ளன. அவற்றில் சில அஞ்சாத சிங்கம் என்ற தலைப்பில் வெளியாயின. பூங்குளம் பண்ணையார் போன்ற நாடகங்களையும் எழுதினார். 14 மரபுக்கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.

இசை எழுத்து

எல்லார்வியின் முதன்மையான பங்களிப்பு அவர் தமிழின் இசைமேதைகளைப் பற்றி எழுதிய அனுபவக்குறிப்புகளும் வாழ்க்கை வரலாறுகளுமாகும். அவர் வெவ்வேறு இசைமேதைகளைப் பற்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள், சுவையான சங்கீத சம்பவங்கள், எங்கே அண்ணா எங்கே ஆகிய நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மைசூர் சௌடைய்யா, ராஜமாணிக்கம் பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், பிடாரம் கிருஷ்ணப்பா ஆகியோரைப் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறுகள் புகழ்பெற்றவை

திரைப்படம்

1960-ல் டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த 'ஆடவந்த தெய்வம்' என்ற திரைப்படம் எல்லார்வியின் 'கலீர் கலீர்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

மணிவிழா

30.11.1976 ல் எல்லார்வியின் அறுபது நிறைவு மணிவிழா ஏ.வி.எம் ராஜேஸ்வரி மஹாலில் கி.வா. ஜகந்நாதன் மற்றும் எஸ்.வி. சகஸ்ரநாமம் ஆகியோரின் முயற்சியால் நிகழ்ந்தது.

இலக்கிய இடம்

எல்லார்வி பொதுவாசிப்புக்கான நாவல்களையும், குறுங்கட்டுரைகளையும் எழுதியவர். பெரும்பாலும் இதழியல் சார்ந்த எழுத்து அவருடையது. அவருடைய தனிப்பங்களிப்பு தமிழக இசைமேதைகளைப் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகளும், நிகழ்வுத்தொகுப்புகளுமாகும். அவ்வகை எழுத்தில் தமிழில் அவர் முன்னோடியின் இடம் கொண்டவர்.

நூல்பட்டியல்

நாவல்
  • மணி ஒசை
  • நீர்க்குமிழி
  • கலீர் கலீர்
  • முல்லை
  • பனித்துளி
  • வனஜா
  • தேன்நிலவு மலரும் வண்டும்
  • பவானி
சிறுவர் இலக்கியம்
  • அஞ்சாத சிங்கம்
நாடகம்
  • பூங்குளம் பண்ணையார்
கதைகள்
  • வளரும் தலைமுறை மாணவர் கதைகள்
  • ஆசைமுகம்
  • பேசும் விழிகள்
இசை வரலாறு
  • சுவையான சங்கீத சம்பவங்கள்
  • எங்கே அண்ணா எங்கே
  • அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
  • மைசூர் சௌடைய்யா
  • சங்கீத கலாநிதி ராஜமாணிக்கம் பிள்ளை
  • கலைமணிகள்
  • செம்பைச் செல்வம்
  • சங்கீத வித்வான் பிடாரம் கிருஷ்ணப்பா

உசாத்துணை



‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jul-2023, 16:39:07 IST