வேள் எவ்வி
வேள் எவ்வி (நீடூர்க்கிழவன்) சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவர். வேளிர் குலத்தைச் சேர்ந்த பாரியின் வழி வந்தவர். இவரைப் பற்றி கபிலர், குடவாயிற் கீரத்தனார், நக்கீரர், பரணர், மாங்குடிகிழார், மாமூலனார், வெள்ளெருக்கிலையார் ஆகியோர் சங்கத் தொகை நூல்களில் பாடியுள்ளனர்.
பெயர்க்காரணம்
ஆற்றில் ஓடும் நீரை மேட்டுநிலங்களுக்குப் பாய்ச்ச ஏற்றத்தைப் பயன்படுத்துவர். அந்த ஏற்றத்தைக் குறிக்கும் சொல் எவ்வி. வேள் எவ்வி நீடூரை ஆண்டதால் 'நீடூர்க்கிழவன்' என்று அழைக்கப்பட்டார். வாட்போரில் வல்லவராதலால் 'வாய்வாள் எவ்வி' என்று அழைக்கப்பட்டார். பெரும்பாண் எனப்படும் பாணர்களின் பெருங்கூட்டத்தின் உறவினர்களுக்குத் தலைவன் என்பதால் 'பெரும்பூண் எவ்வி' என்று அழைக்கப்பட்டார்.
வேள் எவ்வி பற்றி
வேள் எவ்வி சங்க காலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர். பாரியின் குடியில் வந்தவர். மிழலைக் கூற்றம், நீடூர் ஆகிய நிலத்தை ஆட்சி செய்தார். நீடூர் என்னும் ஊர் அறந்தாங்கி வட்டத்துத் தென்பகுதியையும் இராமநாதபுர வட்டத்தின் கீழ்ப்பகுதியையும் கொண்டது என அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை கூறினார். இவ்வூர் தற்போது 'நீடாமங்கலம்' என வழங்கப்படுகிறது.
எவ்வி பகைவர்களை அழிக்கும் சிறந்த வாள் படையும் வேற்படையும் கொண்டவனாக இருந்தார். புலவர்களையும் பாணர்களையும் ஆதரித்தார். தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு யானைகளைத் தாராளமாக வழங்கினார். எவ்வி தனியே உண்ணமல் பலரோடு சேர்ந்தே உண்ணும் பழக்கம் உள்ளவர்.
வேள் எவ்வி ஆட்சி
வேள் எவ்வி தனக்குப் பணியாத பகைவர்கள் சிலரை வென்று அப்பகைவர்களுக்கு உரிய அரிமணம் என்னும் ஊருக்குப் புறத்தில் உள்ள உறத்தூர் என்னும் இடத்தில் தன் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்து விழாக் கொண்டாடினார். தன் ஏவலைக் கொள்ளாது பகைத்த பசும்பூண் பொருந்திலர் என்பவரை நெடுமிடல் அஞ்சியின் உதவியுடன் வென்றார். எவ்வி சொன்னதைக் கேளாமல் அவரின் நண்பரான அன்னி என்ற மன்னர் திதியன் என்ற மன்னரோடு போரிட்டு மாண்டார். எவ்வியின் மிழலைக் கூற்றத்தை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றார்.
வேள் எவ்வியின் ஆட்சி நிழல் குளுமையாக இருக்கும். இவரது நாட்டு முதியவர்கள் உப்பு விற்க வரும் நுளையர்களுக்குத் தேறல் தந்து மகிழ்விப்பார்கள். எவ்வி நாட்டில் உப்பு விற்பவர் தன் உப்புக்குப் பண்டமாற்றாக நெல்லைத் தந்தால் வாங்கமாட்டார்களாம். முத்துக்களைத் தந்தால்தான் வாங்கிக்கொள்வார்களாம். அந்த அளவுக்கு இவரின் நாடு செல்வவளம் மிக்கதாக இருந்தது.
மறைவு
எவ்வியின் முன்னோர் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்ததன் பயனாக இவரோடு இவரின் குடி அழிந்தது என்கிறார் கபிலர். எவ்வி மாண்டபோது பாணர்கள் தலையில் பூச் சூடிக்கொள்ளவில்லை. எவ்வி மாண்டு கிடந்த போர்க்களத்தில் பாணர்கள் தம் வளைந்த கொம்புகளை ஊதாமல் கீழே போட்டு வணக்கம் செலுத்தினர்.
வேள் எவ்வியின் மனைவி அவர் இறந்தபின் யானையின் காலடி அளவு இடத்தை மெழுகி அதன்மேல் தர்ப்பை புல்லை வைத்து, அதன் மேல் சோற்றுப்பிண்டம் வைத்து அவருக்குப் படையல் சடங்கைச் செய்தாள்.
இவரைப் பற்றிய பாடல்கள்
- கபிலர் - புறநானூறு 202
- குடவாயிற் கீரத்தனார் - அகநானூறு 366
- நக்கீரர் - அகநானூறு 126
- பரணர் - குறுந்தொகை 19, அகநானூறு 266
- மாங்குடி கிழார் - புறநானூறு 24
- மாமூலனார் - அகநானூறு 115
- வெள்ளெருக்கிலையார் - புறநானூறு 233, 234
உசாத்துணை
- பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- மயிலை சீனி. வேங்கடசாமி அவரிகளின் பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 21:05:49 IST