under review

மு. முத்துவேலு

From Tamil Wiki
Revision as of 16:01, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முத்துவேலு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துவேலு (பெயர் பட்டியல்)
Prof. Dr. Mu. Muthuvelu

மு. முத்துவேலு (முனைவர் மு. முத்துவேலு; பேராசிரியர் மு. முத்துவேலு) (பிறப்பு: மார்ச் 10, 1961) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகப் பணிபுரிந்தார். சட்டத்தமிழ் குறித்து விரிவாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். திருக்குறளைப் பரப்பும் வகையில் பல பணிகளை முன்னெடுத்தார். 'திருக்குறள் மாமணி', 'திருக்குறள் ஞாயிறு' உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மு. முத்துவேலு, மார்ச் 10, 1961 அன்று, மதுரை மாவட்டத்தில் உள்ள சிலைமலைப்பட்டி கிராமத்தில் முனியப்பன் - முத்தரசியம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக்கல்வியை உள்ளூரில் படித்தார். சென்னை லயோலா கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டமும், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதற்கான தங்கப்பதக்கமும் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 'சட்டத்தமிழ்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சட்டக்கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்றார். இதழியல் மற்றும் ஆட்சித்தமிழ் பயின்று பட்டயம் பெற்றார்.

முனைவர் மு. முத்துவேலு

தனி வாழ்க்கை

மு. முத்துவேலு, தமிழக அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணையத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில், மொழிபெயர்ப்பு அலுவலராகப் பணியாற்றினார்.

முத்துவேலுவின் தனி வாழ்க்கை விவரங்கள் அறிய வரவில்லை.

கல்விப் பணிகள்

மு. முத்துவேலு, வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராகப் பணியாற்றினார். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பல்கலைக்கழகக் கருத்தரங்குகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், நாடளாவிய கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றைச் சமர்ப்பித்தார். தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர்களுக்குப் பாட நூல்களை எழுதினார்.

முனைவர் மு. முத்துவேலு நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

மு. முத்துவேலு தமிழரின் சட்டவியல் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அது குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை நூல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதினார். முத்துவேலுவின் முனைவர் பட்ட ஆய்வான 'சட்டத்தமிழ்' நூலாக வெளிவந்து பண்டைத் தமிழரின் சட்ட நுணுக்கங்களைப் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது. சிறந்த நூலுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவியும் பெற்றது.

மு. முத்துவேலு, இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல்களையும் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் எழுதினார். 'தமிழ் அகராதி', தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 'சட்டச் சொல் அகராதி', ஆனந்த விகடனின் 'பிரிட்டானிகா சொற்களஞ்சியம்', 'தமிழ் ஆட்சிச் சொல் அகராதி' போன்ற நூல்களுக்கு முக்கியப் பங்களித்தார். தமிழ் வளர்ச்சித் துறையின் நூல்கள் பலவற்றைச் செம்மைப்படுத்தினார். திருக்குறள் நெறியைப் பரப்புவதை தனது லட்சியமாகக் கொண்டு பல மேடைகளில் பேசியும், இதழ்களில் கட்டுரைகளையும் எழுதினார்.

முனைவர் மு. முத்துவேலுவின் வழிகாட்டலில் பல மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.

இதழியல்

மு. முத்துவேலு 'சட்டக்கதிர்' இதழின் ஆசிரியாகவும், ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 'அறிவியல் பூங்கா' இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • திருக்குறள் மாமணி
  • திருக்குறள் ஞாயிறு
  • சட்டத்தமிழ் மாமணி

ஆவணம்

முனைவர் மு. முத்துவேலின் வாழ்க்கைக் குறிப்பை முனைவர் ப.சு. மூவேந்தன் ஆவணப்படுத்தினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய ஆய்வியல் துறையுடன் இணைந்து வெளியிட்டது.

மதிப்பீடு

முனைவர் மு. முத்துவேலு, தமிழின் முதன்மை சட்டத்தமிழ் ஆய்வாளராக அறியப்படுகிறார். திருக்குறள் நெறி பரப்புநராகவும் செயல்பட்டு வருகிறார்.

நூல்கள்

  • சட்டத்தமிழ்
  • ஆட்சித் தமிழ் வரலாற்று நோக்கு
  • இலக்கியங்களில் சட்டநெறிகள்
  • வளர் தமிழ்த் சிந்தனைகள்
  • செம்மொழிச் சிந்தனைகள்
  • சங்கத் தமிழ் கூறும் சட்ட நெறி
  • வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்
  • குறுந்தொகை இன்பம்
  • காற்றில் மலர்ந்தவை
  • மோதிரக் கனவு (சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:45:37 IST