ஏதுவணி
ஏதேனும் ஒரு பொருளின் தன்மையையோ, ஒரு நிகழ்வையோ கூறும்போது இதனால்தான் இது நிகழ்ந்தது என்று ஒரு காரணத்தைச் சிறப்பித்து எடுத்துச் சொல்வது ஏது அணி. இதன் வகைகள் காரக ஏது மற்றும் ஞாபக ஏது.
விளக்கம்
ஏது(ஹேது) என்றால் காரணம் என்று பொருள். ஏதேனும் ஓர் நிகழ்வையோ, ஒரு பொருளின் பண்பையோ கூறும்போது அதன் காரணத்தைப் பாடலின் வேறு பகுதி மூலம் சிறப்பித்துக் கூறுவது ஏதுவணி. காரணத்தோடு காரியத்தையும் சேர்த்துச் சொலவது ஏதுவணி.
தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை
யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென்
றேதுவிதந்(து) உரைப்ப(து) ஏது ; அதுதான்
காரக ஞாபகம் எனவிரு திறப்படும். (தண்டி 57)
என்று வகுக்கிறது.
ஏதுவணி காரகவேது, ஞாபகவேது என இருவகைப்படும்.
காரகவேது
முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும் ஏற்பது நீக்கமும் எனஇவை காரகம். (தண்டி 58)
முதல்வன், பொருள், கருமம் ஆகியவை காரகமாகவும், விளைவாகவும் நிற்பது காரகவேது (காரக ஏது)
எடுத்துக்காட்டு-1
எல்லைநீர் வையகத்து, எண்இறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பம் தோற்றியதால் ; -முல்லைசேர்
தார்அலைத்து, வண்கொன்றைத் தார்அலைத்து, வண்டார்க்கப்
பூதலத்து வீழ்ந்த புயல் (நன்னூல் உதாரணப் பாடல்
அணிப்பொருத்தம்
கடல் சூழ்ந்த உலகிலுள்ள எண்ணற்ற எல்லா உயிர்களுக்கும் பேரின்பத்தை மழை விளைத்ததற்குக் காரணமாக புயல் முல்லக் கொடியின் மகரந்தத்தை அளைந்து, கொன்றைப்பூங்கொத்தை அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்க, நிலத்தில் மழையாக விழுந்ததைக் கூறுவதால் இது ஏதுவணி.
எடுத்துக்காட்டு-2
கணிகொள் பொழில்அருவி கைகலந்து,சந்தின்
பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து, - தனிஇருந்தோர்
சிந்தை யுடனே உயிர்உணக்கும், தென்மலையம்
தந்த தமிழ்மா ருதம் (தண்டியலங்காரம் உதாரணப் பாடல்)
தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய இனிய தென்றல் காற்று, கனிகளைக் கொண்ட பொழில்கள் சூழ்ந்த அருவி நீரில் கைகலந்து, சந்திரனின் குளிர்ந்த கதிர்களில் தோய்ந்து வீசுவதால் துணையைப் பிரிந்தவரின் உயிரை வாட்டுகிறது.
அணிப்பொருத்தம்
தென்றல் காற்று துணையைப் பிரிந்தவரின் மனதையும், உயிரையும் வாட்டுவதற்கு அது பொதிகை மலையில் தோன்றி, அருவி நீரில் கைகலந்து, சந்திரனின் ஒளியில் குளித்து வந்ததுதான் காரணம் எனக் கூறுவதால் இது ஏது.
ஞாபகவேது
பிற காரணங்களினால் ஒன்றை உய்த்துணர்வது ஞாபக ஏது.
'அவையல பிறவின் அறிவது ஞாபகம்'.
அச்சொல்லப்பட்ட காரணமன்றிப் பிற காரணத்தினால் உய்த்துணரத் தோன்றுவது ஞாபக ஏதுவாம் எ-று.
'காதலன்மேல் ஊடல் கரையிறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப வாய்துடிப்ப - மீது
மருங்குவளை வின்முரிய வாளிடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து' (தண்டியலங்காரம் உதாரணப் பாடல்)
பொருள்
மகளிரின் நெற்றி வியர்க்கவும், வாய்துடிக்கவும், பக்கம் வளைந்த புருவங்களாகிய விற்கள் மேற்சென்று வளையவும், வாட்படையும் தோற்கும்படியான கரிய, நீண்ட, நீலமலர் போன்ற கண்கள் சிவக்கவும் உள்ளதன் கருத்து, அவர் தம்முடைய கணவன் மீதுள்ள ஊடல் மிகுதியைக் காட்டுவதாகும்.
அணிப்பொருத்தம்
நெற்றி வியர்த்தல், வாய் துடித்தல், புருவம் வளைதல், கண் சிவத்தல் ஆகிய காரணங்கள் பெண்களுக்கு உள்ள ஊடல் மிகுதியை அறிவிப்பதால் ஞாபக ஏதுவாயிற்று.
உசாத்துணை
ஏதுவணி-தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 18:50:39 IST