under review

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

From Tamil Wiki
Revision as of 11:23, 31 March 2025 by SakthivelS (talk | contribs) (Created page with "மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== மர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குமரன் என்னும் இயற்பெயர் உடையவர். சேந்தன் என்பாரின் மகன். இவர் பிறந்த மருங்கூர் திருவாடனையை அடுத்துள்ள மருங்கூராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் பாடிய பாடல் நற்றிணையில் 289 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. கார்காலம் வந்தபின்பும் பொருளீட்ட சென்ற தலைவன் திரும்பி வராமையால் தனக்கு ஏற்படும் துன்பத்தை தோழியிடம் தலைவி உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மேகமானது கடல் நீரை உறிஞ்சி வந்து மழையை பொழிய செய்கிறது என மக்கள் நம்பினர்.
  • பசு மேய்க்கும் ஆயர்கள் பெரிய மரத்தின் வேர்க்கட்டை பகுதியில் அடுப்பு அமைத்து தீ மூட்டி சோறு பொங்குவர்.
  • உவமை: தலைவனை பிரிந்த தலைவியின் துன்பம், ஆயர்களால் அமைக்கப்பட்ட அடுப்பு நெருப்பில் எரிந்து அழியாது இருக்கும் பெருமரத்தின் வேர்க்கட்டை பகுதிக்கு ஏற்பட்ட காயத்தை போலுள்ளது.

பாடல் நடை

நற்றிணை - 289

  • திணை: முல்லை
  • கூற்று: பிரிவிடைப் பருவங்கண்டு சொல்லியது.

அம்ம வாழி, தோழி!-காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.