64 சிவவடிவங்கள்: 47-அசுவாருட மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று அசுவாருட மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி ஏழாவது மூர்த்தம் அசுவாருட மூர்த்தி. மாணிக்கவாசகருக்கு அருள் புரியச் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி அவற்றின் தலைவனாக குதைமேல் அமர்ந்து வந்த கோலமே அசுவாருட மூர்த்தி. பரிமேலழகர் என்றும் அறியப்படுகிறது.
அசுவாரூட மூர்த்தி வெண்ணிற ஆடையும்,மணிக்குண்டலமும், முத்துமாலையும், கரங்களில் குதிரைக் கடிவாளமும் வெண்குடையுமாகக் குதிரை மீது அமர்ந்தவராகக் காட்சி தருகிறார்.
தொன்மம்
மாணிக்கவாசகர் சிவபெருமானின் கூற்றுப்படி ஆவணித் திங்களில் குதிரைகள் வரும் என அரசனுக்கு ஓலை அனுப்பினார். பின் சிவபெருமானின் ஆணைப்படி மன்னன் அரண்மனைக்குச் சென்று காத்திருந்தார். மன்னனும் மாணிக்கவாசகரை அழைத்து, குதிரைகள் எப்பொழது வருமெனக் கேட்டான். இன்னும் ஓரிரண்டு நாட்களில் வந்துவிடும் என்றார் மாணிக்கவாசகர். அனைவரும் காத்திருந்தனர், ஆனால் குதிரைகள் வரவில்லை. அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
’மாணிக்கவாசகர் பொய் சொல்கிறார். பொருட்களைக் களவாடி விட்டார்’ என்று தவறாக நினைத்துச் சீற்றம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை வெயிலில் மணலில் நிற்க வைத்துத் துன்புறுத்தி, பலவாறாகக் கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தான்.
சிறையில் மாணிக்கவாசகர் மனம் சோர்ந்துவிடாமல் சிவபெருமானைத் துதித்தார். பாடல்கள் பல பாடி இறைவனைப் போற்றினார்.
இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், தனது கணங்களை அழைத்து கானகத்திலுள்ள நரிகள் அனைத்தையும் பிடித்து வருமாறு கூறினார். பின்னர் அந்நரிகளைப் பரிகளாக்கி அவற்றை அழைத்துச் செல்லும் பொறுப்பைத் தனது கணங்களுக்கு அளித்தார். அதன் தலைவர் பொறுப்பை ஏற்று அவற்றை வழிநடத்தியபடி சிவபெருமான் உயர்ந்த வகைக் குதிரைமீதேறி வந்தார்.
குதிரைகள் வருவதைக் கண்டு மன்னன் மனம் மகிழ்ந்து அனைவரையும் உபசரித்தான். மாணிக்கவாசகரை விடுவித்தான். இரவில் குதிரைகள் தங்களது சுயரூபம் பெற்று நரிகளாக மாறி கானகத்திற்கு ஓடின. செய்தி அறிந்த மன்னன் மீண்டும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தினான்.
அதே நேரத்தில் சிவனின் திருவிளையாடலால் வைகையில் வெள்ளம் பெருகியது. கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. மன்னனின் கட்டளைப் படி அதனை அடைக்கும் பணியில் வீட்டிற்கு ஒருவர் ஈடுபட்டனர்.
வந்தி என்னும் வயதான கிழவி, கரையை அடைப்பதற்குத் தனக்கு ஆள் இல்லாமல் வருந்தினாள். அப்பொழுது கூலியாள் போல் வேடமுற்று அங்கு வந்த சிவபெருமான், கிழவியின் சார்பில் கரையை அடைப்பதாகக் கூறினார். அதற்குக் கூலியாகப் பிட்டைத் தரும்படிக் கூறினார். கிழவி அளித்த பிட்டை உண்டுவிட்டு வேலை செய்யாமல் படுத்திருந்தார்.
அப்போது அங்குவந்த மன்னன், கூலியாள் வேலை செய்யாமல் சும்மா படுத்திருப்பதைக் கண்டு சினமுற்றார். கூலியாளாக வந்திருந்த சிவபெருமானைப் பிரம்பால் அடிக்க, அந்த அடி உலக உயிர்கள் ஒவ்வொன்றின் மீதும் பட்டது. மன்னன் திகைத்தான். உண்மை உணர்ந்தான். உடன் வானில் அசரீரி எழுந்து மாணிக்கவாசகரை விடுவிக்கும்படிக் கூறியது.
மன்னனும் மாணிக்கவாசகரை விடுவித்தான். தனது செயலுக்காகச் சிவபெருமானிடமும், மாணிக்கவாசகரிடமும் மன்னிப்பு வேண்டினான். இருவரும் அவனை மன்னித்தனர்.
மாணிக்கவாசகருக்கு அருள் புரியச் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி அதன் தலைவனாக வந்த கோலமே அசுவாருட மூர்த்தி.
வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கருகிலுள்ள ஆவுடையார் கோயிலில் (திருப்பெருந்துறை) உள்ள பஞ்சாட்சர மண்டபத்தின் தூண் ஒன்றில் அசுவரூட மூர்த்தியாகத் தோன்றிய சிவபெருமானின் சிற்பம் உள்ளது.
மதுரை போன்ற தலங்களில் ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் நிகழ்வில் சிவன் பரிமேலழகராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி. இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி பெருகும்; வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று அளித்து வழிபட வாகன யோகம் உண்டாகும், மனம் பக்குவமடையும் என்பது மக்கள் நம்பிக்கை.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.