ரூத்தம்மானை: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
 
Line 52: Line 52:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|26-Jul-2026, 01:18:02 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 26 July 2026

ரூத்தம்மானை கிறிஸ்தவ சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அம்மானை வடிவில் பாடப்பட்டது. இதனை இயற்றியவர் அருமை நாயகம் சட்டம்பிள்ளை.

ஆசிரியர்

ரூத்தம்மானை நூலின் ஆசிரியர் அருமைநாயகம் சட்டம்பிள்ளை. இவர் திருநெல்வேலி அருகேயுள்ள நாசரேத் ஊரில் வேதநாயகம் நாடார், தங்கம் அம்மாள் இணையருக்குப் பிறந்தவர். அருமைநாயகம் சட்டம்பிள்ளை இந்திய கிறிஸ்தவியல் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்தியாவின் பண்பாட்டை நிராகரிக்காமல் ஏசுவின் வழி மீட்பு என்னும் கிறிஸ்தவக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ இறையியலை உருவாக்கியவர். பிதா-சுதன்-ஆவி என்னும் திரித்துவத்தை முதன்மைப்படுத்தும் வழிபாட்டு மரபை கட்டமைத்தவர்.

வெளியீடு

ரூத்தம்மானை 1884-ம் ஆண்டு பாளையங்கோட்டை தி சர்ச் மிஷன் அச்சகத்தில் அருமைநாயகம் சட்டம்பிள்ளையால் வெளியிடப்பட்டது. பின் பல்வேறு மறுபிரசுரமும் கண்டுள்ளது.

நூல் அமைப்பு

ரூத்தம்மானை நூல் சிற்றிலக்கிய வகையில் அம்மானை வடிவில் பாடப்பட்டது. இந்நூல் பாயிரம் நீங்கலாக ஐந்து பகுதிகளைக் கொண்டது.

  • விவாகத்தால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
  • தெய்வபற்றத்தால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
  • நன்னடத்தையால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
  • சுதந்தர விவாகத்தால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்
  • சந்ததி விருத்தியால் ரூத்து இசரவேலை யொட்டினது விருத்தம்

ரூத்தம்மானையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு விருத்தப் பாடலுடன் தொடங்குகிறது. இப்பாடல்கள் அப்பகுதியிலுள்ள நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றன. விருத்தத்திற்கு பின்பான நடை பகுதியில் கதைப்பாடல்கள் உள்ளன.

உள்ளடக்கம்

முதல் பகுதியில் 19 கண்ணிகள் உள்ளன. இதில் நகோமியின் வாழ்க்கை தொடக்கம் முதல் அவளது கணவன் மற்றும் மகன்களின் இறப்பு வரையிலான செய்திகளைக் கொண்டது. இரண்டாவது பகுதியில் 33 கண்ணிகள் உள்ளன, நகோமியுடன் இரண்டு மருமக்களும் சேர்ந்து பயணிப்பதில் தொடங்கி, நகோமியும் ரூத்தும் பெத்தலகேம் சேர்வது வரையிலான நிகழ்வுகளால் ஆனது. மூன்றாவது பகுதி 50 கண்ணிகளைக் கொண்டது. ரூத்து போவாசின் வயல்களுக்கு வாற்கோதுமை சேகரிக்கச் சென்றது வரையிலான கதையைக் கொண்டது. ரூத்திடம் நகோமி போவாசைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தியது முதல் போவாசு ரூத்தைத் திருமணம் செய்து கொண்டது வரையிலான நான்காவது பகுதி 63 கண்ணிகளால் ஆனது. இறுதி பகுதி 13 கண்ணிகளுடன் போவாசு ரூத்துடன் வாழ்க்கை நடத்தியது முதல் ஓபேத் என்னும் மகன் பிறந்தது வரையிலான கதைக்களைக் கொண்டது.

பாடல் நடை

வெண்பா

போவாசு ரூத்தைப் புனர்விவாகஞ் செய்த செயல்
ஏவாளின் புத்திரருக் கெண்பிக்க நாவினால்
அம்மானைராகத் தடுக்கியே பாடிடுவோம்
எம்மாலியன்ற மட்டுமே

விருத்தம்

எலிமெலெக்கு மோவாபுதேசத்துக்கு
எழுந்தருளிப் போன பின்பு மாண்டவாறும்
கலியாணம் மக்களுக்கங்கானவாறும்
கனபஞ்சம் பத்தாண்டாப்பிழைத்தவாறும்
அலைவிதமாயவர் களுமங்கிறந்தவாறும்
ஆண்நீங்கப் பெண் மூவர் மீர்ந்தவாறும்
நலமா கரூத்திசரவேலை யிந்த
நடப்பினிலொட்டியவாறும் நவிலுவோமே

நடை

மோசேயின் கையாளாம் முனைவீரன் யோசூவா
தோசமுள்ள கானானின் துட்டகுலம்பட்டழிய

சிறப்பு

பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள ரூத்தின் கதையை எளிய அம்மானை வடிவில் அமைந்தது இந்நூலின் சிறப்பு.

உசாத்துணை

  • கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு, (பதிப்பாசிரியர்: யோ. ஞானசந்திர ஜாண்சன்), ஆசியவியல் நிறுவனம்.

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2026, 01:18:02 IST