நா. மீனவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
Line 70: Line 70:
*[https://marinabooks.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%20%e0%ae%a8%e0%ae%be.%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d?authorid=1510-3041-4755-7497 நா. மீனவன் நூல்கள் , மெரீனா புக்ஸ் தளம்]
*[https://marinabooks.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%20%e0%ae%a8%e0%ae%be.%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d?authorid=1510-3041-4755-7497 நா. மீனவன் நூல்கள் , மெரீனா புக்ஸ் தளம்]
*தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், முதல் பதிப்பு: 2018
*தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், முதல் பதிப்பு: 2018


{{Finalised}}
{{Finalised}}

Latest revision as of 15:46, 12 October 2026

கவிஞர் நா. மீனவன்

நா. மீனவன் (நா. மீனாட்சிசுந்தரம்; நாச்சியப்பன் மீனாட்சிசுந்தரம்; மீனவன்) (பிறப்பு: டிசம்பர் 08, 1940) கவிஞர், எழுத்தாளர், ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பொற்கிழிக் கவிஞர், காப்பியக் கவிஞர் போன்ற பல பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

நா. மீனாட்சிசுந்தரம் என்னும் இயற்பெயர்கொண்ட நா. மீனவன், டிசம்பர் 08, 1940 அன்று, இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) கண்டரமாணிக்கத்தில், சுப.நா. நாச்சியப்ப செட்டியார் - விசாலாட்சி ஆச்சி இணையருக்குப் பிறந்தார். கண்டரமாணிக்கத்தில் உள்ள தண்டாயுதபாணி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். மயிலம், சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் புலவர் பட்டம் பெற்றார். புதுக்கோட்டை அரசினர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார்.

கவிஞர் நா. மீனவன்

தனி வாழ்க்கை

நா. மீனவன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி மெய்யம்மை. காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். இவர்களுக்கு மூன்று மகள்கள். ஒரு மகன்.

மீனவன் (இளம் வயதுப் படம்)

கல்விப் பணிகள்

நா. மீனவன், திருவள்ளூர் கௌடி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மதுரை தியாகராசர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுவயல் இராமநாதன் செட்டியார் பேருயர் பள்ளியில் முதனிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

நா. மீனவன், கவிஞராக இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். மரபுக்கவிதைகள் எழுதினார். தொடக்கத்தில் 'பறியாத தூண்' என்ற நாடகச் செய்யுளையும், 'செங்கயல்' என்ற சிறுகாவியத்தையும் இயற்றினார். தொடர்ந்து கம்பர் பிள்ளைத்தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் போன்ற பல சிற்றிலக்கியங்களைப் படைத்தார். 'மாதவ மேகலை', 'மின்மினி' என்பவை நா. மீனவன் இயற்றிய காப்பியங்கள். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். பல்வேறு ஆன்மிக, இலக்கிய நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.

நா. மீனவன், அகநானூறு களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் ஆகிய இரு பகுதிகளுக்கு சுப. அண்ணாமலையுடன் இணைந்து உரை எழுதினார்.

இதழியல்

நா. மீனவன், 'திருநெல்லை' ஆன்மிகத் திங்களிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார்.

பொறுப்பு

  • காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் செயலர்
  • தமிழ் எழுத்தாளர் சங்க சிவகங்கை மாவட்டக் கிளைத் தலைவர்
  • அரிமா சங்க உறுப்பினர்

விருதுகள்

  • பினாங்கு இலக்கியப் போட்டியில் கம்பர் பிள்ளைத் தமிழ் நூலுக்கு முதல் பரிசு
  • அமுதசுரபி இதழ் நடத்திய காப்பியப் போட்டியில் இரண்டாம் பரிசு
  • குன்றக்குடி ஆதீனம் அளித்த சேக்கிழார் பொற்பதக்கம்
  • குன்றக்குடி ஆதினம் அளித்த கவிஞர்கோ விருது
  • பொற்கிழிக் கவிஞர் பட்டம்
  • கவிமாமணி பட்டம்
  • காப்பியக் கவிஞர் பட்டம்

மதிப்பீடு

நா. மீனவன் மரபுக்கவிதை இயற்றும் சந்தக் கவிஞர். இருபதாம் நூற்றாண்டில் அந்தாதி, பிள்ளைத்தமிழ், மாலை போன்ற சிற்றிலக்கியங்களைப் படைத்தவராகவும், காப்பியங்கள் சில இயற்றிய கவிஞராகவும் அறியப்படுகிறார்.

கவிஞர் மீனவன் நூல்கள்

நூல்கள்

கவிதை நூல்கள்
  • மாதவ மேகலை (காப்பியம்)
  • மின்மினி (காப்பியம்)
  • கம்பர் பிள்ளைத்தமிழ்
  • மீனாட்சி மாலை
  • மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்
  • அலர்மேல் மங்கை அந்தாதி
  • அருணகிரிப் பெயர் வாழ்க
  • அருணகிரி தமிழ் நடையில் ஆடுகிறான் கந்தன்
  • திருப்புகழ்போல் தழைத்து வாழ்க
  • இலங்குடி பகச்சால மூர்த்தி அய்யனார் ஆசிரிய விருத்தம்
  • பரந்தாமனுக்குப் பல்லாண்டு
உரை நூல்கள்
  • அகநானூறு களிற்றியானை நிரை (சுப. அண்ணாமலையுடன் இணைந்து எழுதியது)
  • அகநானூறு மணிமிடை பவளம் (சுப. அண்ணாமலையுடன் இணைந்து எழுதியது)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2024, 16:07:01 IST